Thursday, November 19, 2015

தன்னந்தனிமையின் கண்ணீர்:வெண்முரசில் பல சந்திப்புகள் நடைபெற்றுள்ளன. பல நெகிழ்வானவை. சட்டென்று நினைவுக்கு வருவது வெண்முகில் நகரத்தில் வரும் பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களின் சந்திப்பு. பூரிசிரவசும் சாத்யகியும் சந்திப்பது, அக்ரூரர் கிருஷ்ணன் அவையில் மீண்டும் வரும் சந்திப்பு போன்றவையும் நம் நினைவில் நீங்காதவையே. இந்த சந்திப்புகளில் இருந்தெல்லாம் சற்றே வேறுபட்ட, முற்றிலும் தனித்தன்மை வாய்ந்த ஒரு சந்திப்பு கிருஷ்ணனும் அரிஷ்டநேமியும் சந்திப்பது. இச்சந்திப்பில் காலங்காலமாக மானுடம் சென்று முட்டிக் கொண்டு, திகைத்து பின்வாங்கும் அற வினாக்கள் விவாதிக்கப்படுகின்றன. துறவில் தோய்ந்த ஒருவரை இல்லறம் நோக்கி இழுத்து வரும் பணி கிருஷ்ணனுக்கு. (காண்டீபம் 50). 

அர்ஜுனனும் கிருஷ்ணனும், நேமியுடன் அவரின் குகைக்குள் சென்று இந்த விவாதங்களை நடத்துவதற்கு முன் ஏழு அருகப் படிவர்கள் அமர்ந்து ஊழகம் செய்யும் ஒரு குகைக்குள் சென்று சந்திக்கிறார்கள். கரிய கருங்கல்லாக ரிஷிபரின் சிலை இருக்க, கிருஷ்ணன் நேமியின் சென்னி சூடி தானும் ஊழ்கத்தில் அமர்ந்து விடுகிறான். வெண்முரசு இந்த இடத்தில் அர்ஜுனனிடம் வருகிறது. அவன் எண்ணங்களை ஆய்கிறது. தனித்து விடப்பட்டவனாக அர்ஜுனன் அவர்கள் இருவரையும் நோக்கி நிற்கிறான். அவர்கள் இருவரையும் நோக்கும் அவன் அவர்கள் இருவரும் "இரு ஆடிப்பாவைகள். ஒன்றை ஒன்று நோக்கும் இரண்டு முடிவின்மைகள். இரண்டு வினாக்கள். அல்லது இரண்டு விடைகள். ஒரு பொருள் கொண்ட எதிரெதிர் சொற்கள். இரண்டு முடிவிலா பெருந்தனிமைகள்." என்றெல்லாம் சொல்லள்ளி தன் எண்ணங்களை வெளியேற்றிக் கொண்டேயிருக்கிறான். ஏன் இத்தனை சொற்கள்? அந்த இரு ஆடிப்பாவைகளுக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம்? எண்ணங்கள் சிதறிப் பரந்து பித்தனாகக் கூடிய அளவுக்கு அவனுக்கு என்ன நேர்கிறது அங்கே? மிகத் துல்லியமாக வெண்முரசு அந்த காட்சியை விளக்குகிறது.

அவர்கள் இருவரையும் நோக்கிக் கொண்டிருந்த அர்ஜுனன் கண்களை மூடி எண்ணங்களை நோக்குகிறான். அவன் எண்ணத்தில் முதலில் வந்தவள் குந்தி, பின் பாஞ்சாலி, உலூபி, சித்ராங்கதை என்று வந்த நிரையில் அவன் சென்று சேர்ந்தது கர்ணனிடம். இவன் ஏன் தன் எண்ணத்தில் வந்தான் என்று எண்ணுகையிலேயே விழிக்கிறான். அப்படி விழிப்பவன் கண்ணில் அந்த கரிய ரிஷபர் தென்படுகிறார். ஒரு கணம் அவன் கர்ணனை அங்கே உருவமாகக் காணுகிறான். அது உண்மையல்ல என்றும் அது மட்டுமே உண்மையென்றும் உள்ளம் மயங்கும் ஒரு கணம். மேலும் ஒரு கணம் அந்நிலை தொடர்ந்தால் அவன் பித்தாவதன்றி வேறென்ன நடக்கும்? வெகு அபூர்வமாக நம்மில் சிலருக்கும் அத்தகையதோர் கணம் வாய்க்கப்பெற்றிருக்கலாம்.

உண்மையில் அங்கு இருந்தவை இரு இணை ஆடிப்பாவைகள். முதல் இணை உருவமாக நேமியும், கிருஷ்ணனுமாக. இரண்டாவது இணை அருவுருவமாக கர்ணனும், அர்ஜுனனும். அங்கே நேமியும் கிருஷ்ணனும் பேசும் பேச்சுக்கள் அனைத்தும் இவர்கள் இருவருமே பேசிக் கொள்பவை என்றும் பார்க்கலாம். நேமி கிருஷணனை நோக்கி, "நான் துறந்தவை அனைத்தாலும் ஆனவன் நீ. நீயாக மாறி நானே நடித்துக் கொண்டிருக்கின்றேனா?" என வினவுகிறார். அதற்கு கிருஷ்ணன், "தாங்கள் என் கனவு" எனப் பதிலிறுக்கிறான். பாஞ்சாலியின் திருமணத்துக்குப் பின்பு நடைபெறும் பாஞ்சாலப் போருக்கு முன் பூரிசிரவசிடம் கர்ணன் சொல்வதும் கிட்டத்தட்ட இதே தான். அவனால் இயலாதவற்றால் ஆனவன் அர்ஜுனன். ஆனால் அகத்தின் அடியாழத்தில் அர்ஜுனன் கண்ட கனவால் ஆனவன் தான் கர்ணன். இந்த எண்ணம் மிக மிக இளவயதிலேயே அர்ஜுனனிடம் தோன்றியிருக்க வேண்டும். கர்ணன் பால் குந்திக்கு இருக்கும் தனிப் பிரியம் அவனை இவன் கனவாக்கி இருக்கக்கூடும். எங்கோ அடிவாரத்தின் ஆழமாக இருப்பினும் மலையுச்சியின் ஊற்றுகள் அக்குகையின் சுவர்களையும் நனைத்திருப்பதைப் போல, எவ்வளவு தான் அக ஆழத்தில் புதைத்து மறந்து இருந்தாலும் கர்ணன் நினைவு இவனை நனைத்துக் கொண்டே தான் இருக்கும். 

வெண்முரசு முழுக்க நேமியுடன் கூடவே வருவது சூரியனும் கூடத்தான். இன்று (காண்டீபம் 63) நேமி முழுமையாகத் துறவறம் மேற்கொள்ளும் நேரம் கிழக்கே சூரியனும், மேற்கே வானவில்லும் தோன்றுகின்றன. வானிலும் இரு ஆடிப்பாவைகள்.

ஆம். அர்ஜுனன் அஞ்சுவது அந்த நினைவைத் தான். அவன் தாய் குந்தியின் கர்ணன் மீதான பாசம் தானே அவனைப் போலவே ஒரு ஆடிப்பிம்பத்தைப் பிறப்பித்தது. அந்த நினைவு அவன் உடன் பிறந்த ஒன்றல்லவா. என்றும் அவனைத் தொடர்ந்து கொண்டேயிருப்பதும் அதுவன்றோ. தொடரத் தொடர அந்த நினைவிலிருந்து வெளிவர வேண்டும், அந்த நினைவை அழிக்க வேண்டும், அவனை வெல்ல வேண்டும் என்று அந்த நினைவைத் தொடரும் பிறிதொன்றையும் அவன் அஞ்சுகிறான். அந்த அருகப் படிவர் (காண்டீபம் 48) சொல்வது போன்று 'அச்சங்கள் எவையாயினும் கண்ணொடு கண் நோக்காது வெல்வது அரிது'. எனவே களத்தில் அந்த அச்சத்தை நேரெதிர் காணும் போது அவன் வெல்வான். அதுவரை அந்த நினைவு அவனுடன், அவனுக்கு மட்டுமே உணர்த்திக் கொண்டு தொடர்ந்து வந்து கொண்டிருக்கும், தன்னந்தனிமையின் கண்ணீரென.
 
அருணாச்சலம் மகராஜன்