Tuesday, November 3, 2015

அசாதாரணத்திற்கான சாதாரணரர்களின் ஏக்கம் (காண்டீபம் 49)சில ஆண்டுகள் முன்பு,  அமெரிக்கா ஈராக் மீது போர் தொடுக்கப்போவதாக செய்திகள் வந்தவண்ணம் இருந்தது. அப்போது மக்கள் எவ்வளவு ஆர்வமாக அந்தப் போர் ஆரம்பிக்க காத்திருந்தோம் என்பது நன்கு நினைவிருக்கிறது. பேருக்கு சிலர், அதற்கு எதிராக பேசினாலும் அனைவரும் எப்போது போர் மூளும் என்று இறைச்சிக்கடை முன் நிற்கும் நாயைப்போல் காத்திருந்தோம். போர் மூண்ட பின்னர் எத்தனைபேர் கொல்லப்பட்டனர் என்பது ஆவலூட்டும் செய்தியாக இருந்தது. கொல்லப்படும் வீரர்களின் வேதனை அவர்கள் குடும்பத்தினரின் துயரம் எதுவும் கணக்கிலெடுக்கப்படாது அல்லது வெறும் வார்த்தைகளாக போய்விடும்.   பக்கத்து நாட்டில் நடக்கும் உள்நாட்டுப்போரில் வீரர்கள், மக்கள் கொல்லப்படும் போது அதன் எண்ணிக்கைக்கு ஏற்ப மக்கள் கொள்ளும் ஆர்வம் மிகக் குரூரமானது. ஆனாலும் நாம் கண்ணெதிரில் காணும் உண்மை. பக்கத்துவீட்டில் ஏற்படும் ஒரு அசாதாரண சிக்கலில் நமக்கு ஏற்படும் பரபரப்பில் ஒரு ஆர்வம் இருகிறது அல்லவா? அமைதியாக செல்லும் ஒரு நாட்டில் ஏற்படும் ஒரு சிறு கலவரம் மக்கள் தேவைக்கதிகமாக காட்டும் ஆர்வத்தால் ஊதி ஊதி பெரிதாக்கப்படுகிறது. தனக்கு ஏதும் துன்பம் நேராத வரையிலும் அதை மக்கள் இரகசியமாக ரசிக்கிறார்கள். அதை மேலும் மேலும் இட்டுக்கட்டி பெரிதாக்கி மிக ஆர்வத்துடன் பரப்புகிறார்கள். அது தனக்கே சிக்கலை இழப்பை தரும் என்ற போதிலும்

         வெண்முரசில் மக்களின் இந்த  மனநிலையை அருமையாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. கிருஷ்ணன் சொல்கிறான், "எளிய மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அம்மாற்றத்தால் தங்கள் வாழ்வு தலைகீழாகுமென்றாலும் சரி. முந்தைய கணம் வரை சார்ந்திருந்த ஒன்று சரிவதைக்கூட அதன் பொருட்டு விழைவார்கள். ஏதேனும் ஒன்று நிகழ்ந்து தாங்கள் கொண்டாடிய ஒன்று வீழ்ச்சியடையுமென்றால் அதில் அவர்களின் அகம் களிக்கும். எழுந்தவை அனைத்தையும் நிலம் இழுப்பதுபோல எளியோர் வென்றவரையும் நின்றவரையும் பற்றிச்சரிக்க ஒவ்வொரு கணமும் தவிக்கிறார்கள். இப்புவியை ஆளும் வல்லமைகளில் ஒன்று எளியோரின் வஞ்சம். அதை நன்கறிந்திருந்தபோதும்கூட அன்று நான் என் நகர்மக்களின் விழிகளைக் கண்டு அஞ்சினேன். " 
 
       கண்ணனையே  அஞ்ச வைக்கும் அந்த எளியவர்கள் வஞ்சம் எங்கிருந்து வருகிறது. அவர்களின் வாழ்வின் சலிப்பிலிருந்து வருகிறதா. அவர்கள் உள்ளத்து ஆழத்தில் இருக்கும் பொறாமையால் வருகிறதா?    அவர்கள் சாதாரணமானவர்கள், சாதாரணமான வாழ்க்கை வாழ்பவர்கள். அவர்கள் தங்களை ஆர்வப்படுத்திக்கொள்ள, இந்த வாழ்வின் பெருஞ்சலிப்பிலிருந்து விடுபட அவர்கள் எதிரில் ஒர் அசாதாரணம் நிகழவேண்டும் என ஏங்குகிறார்கள். அசாதாரணமான ஒன்றை  பொய்யென அறிவு உரைத்தாலும்  அதை நம்பத்தலைபடுகிறார்கள்.

        இவர்களின் ஏக்கத்தால் பிள்ளையார் பால் குடிக்கிறார். தெய்வத்திருவுரு தன் கண்களில் கண்ணீர் வடிக்கிறது. பல அற்புதங்கள் நிகழ்த்தப்படுகின்றன. தெய்வங்கள் பல அற்பக் கதைகளில் பாத்திரம் ஏற்று நடிக்க வேண்டியிருக்கிறது.  இவர்கள் ஏக்கத்தை தீர்த்த ஒரு கொலைகாரன், கொள்ளைக்காரன்,  வீரனாகி  வழிபடப்படுகிறான். எவ்வித அலட்டலும் இல்லாத அரசியல் தலைவர்கள் புறந்தள்ளப்படுகிறார்கள்.  யாரையோ கொன்றுவிடுவதைப்போல் வேகத்தோடு   பேசுபவன் அடுத்த கணம் போர் நிகழப்போகிறது எனத் தோன்ற வைப்பவன் பெருந்தலைவன் ஆகிறான்.  அவனால் ஏற்பட்ட அழிவுகள் இவர்களால் ரசிக்கப்படுகின்றன. 

    இந்தச் சாதாரண மக்களின் இக்குணத்திற்காக அவர்களை தலைவர்கள், சமூக சேவகர்கள், சமூகத்தை வழி நடத்துபவர்கள், கைவிட்டுவிடக்கூடாது. கண்ணன் தம் மக்களுக்காக ஒரு புது நாட்டையே சிருஷ்டித்தவன். அவர்களை வற்றாத செல்வத்திலும் குறையாத மகிழ்ச்சியிலும் வாழவைத்துக்கொண்டிருப்பவன். அவனையே ஒரு சாகசத்திற்கு விட்டுக்கொடுக்க தயாராகிறார்கள் துவாரகையின் மக்கள். அவன் அதை புன்சிரிப்போடு ஏற்றுக்கொள்கிறான். அவனைப்போன்று,   ஒரு  நல்ல தலைவன்,  மக்களிடம் நன்றியுணர்ச்சி போன்ற எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி எப்போதும் அவர்களை தன் நற்பணியால்  தழுவிக்கொள்பவனாக இருக்கவேண்டும்.  மாறாக அவன் திரும்ப மக்களிடம் புகழை, நன்றியை எதிர்பார்ப்பான் என்றால் சீக்கிரம் பெருத்த ஏமாற்றத்திற்கு உள்ளாவான்.

தண்டபாணி துரைவேல்