இனிய ஆசிரியருக்கு ,
தாமதமான
பதிலுக்கு மன்னிக்கவும். உங்கள் மின்னஞ்சல் எனக்கு இனிய அதிர்ச்சி என்றே
சொல்ல வேண்டும். அதில் உள்ள வரிகள், என்றும் என் நினைவில் இருக்கும் மிக
உயர்ந்த பாராட்டாகவே எண்ணுகிறேன். நன்றி.
நேமிநாதரைப்
பற்றி நீங்கள் மதுரை சந்திப்பில் கூறியது மயிலாடுதுறை பிரபு மின்னஞ்சலில்
நினைவு படுத்திய பிறகே ஞாபகம் வந்தது. அப்போது முற்றிலும் புதிய தகவலாக
இருந்தது, கட்டுரைகளில் வாசித்த பிறகு சில மாதங்களில் அறிந்த ஒன்றாகவே
மாறிப் போனது. எனக்கு காந்தியின் பலிபீடம் கட்டுரை முதல்முறை வாசித்த போது
மிகப் பெரிய மன எழுச்சியை தந்தது. எனவே நேமிநாதரின் கதை உங்களுக்கு கொடுத்த
மன எழுச்சியை நன்றாகவே புரிந்து கொள்ள முடிகிறது.
தேரோட்டி 16-வது அத்தியாயம் கீதை உரைக்கப்படும் தருணத்திற்கான முன்னோட்டம் என்றே தோன்றுகிறது. அர்ஜுனன் கஜ்ஜயந்தபுரி ஆலயங்களி ன்
முன், அருகர்கள் துளித்துளியாக தங்கள் ஒவ்வொருவர் உள்ளத்திலும் இருக்கும்
கருணையை திரட்டி பேருருக் கொண்டு மானுட அகத்தின் அடிப்படை உணர்ச்சியான
வன்முறையை வென்றதை அறிகிறான். கொல்லாமையின் சிறப்பை உணர்கிறான். விஷாத
யோகத்தில் அர்ஜுனனின் சொற்கள் ஆலமரம் என்றால் அதற்கான விதை இங்கே
குறிப்புணர்த்தப் படுகிற்து.
மறுபுறம் பெரு
வெள்ளம் போல், போர் தொடங்கும் கணத்தில் களிவெறி கொண்ட படைகள் போல் வரும்
யாதவர்களை கண்டு அவனறியாமலே அவன் முகம் மலர்கிறது. கர்மத்தில் (கொலை
புரிதலில்) அவன் உள்ளம் ஈடுபடுகின்றது. இரண்டுக்கும் நடுவே கீதை இல்லையே
என்று துணுக்குற்றேன். இன்றைய அத்யாயத்தில் அதற்கான விடையை நெருங்கி
விட்டேன் என நினைக்கிறன். இன்று அர்ஜுனன் நேமிநாதரின் துறவு அளித்த மன
எழுச்சியில், ஞான மார்க்கம் உயர்வானதோ என்று எண்ணுகிறான். கர்மத்தை
துறந்து செல்ல முடிவெடுக்கிறான். ஆனால் ஞானமும், கர்மமும் இரண்டு வழிகளே,
அவற்றில் உயர்வோ, தாழ்வோ ஏதுமில்லை, அர்ஜுனனுக்கு உகந்தது கர்ம மார்க்கமே
என்ற கீதையின் சாரத்தை மிக குறைந்த வார்த்தைகளில் உரைத்த சுபத்திரையை
முதன் முதலாக கண்டதே அன்று அர்ஜுனனின் மாற்றத்திற்கு காரணமாய் இருக்கலாம்
என நினைக்கிறேன்.
நன்றி.
லட்சுமிபதி ராஜன்