Friday, November 6, 2015

துறவு 2


   நான் என் பதின்பருவத்தில் இருக்கும்போது எனக்கு துறவு வாழ்க்கை வாழ வேண்டும். திருமணம் செய்துகொள்ளக் கூடாது  என எண்ணம் கொண்டிருந்தேன். அப்போது அவ்வயதின்  காரணமாக அலைக்கழித்த பாலியல் ஈர்ப்பால் அடைந்த அமைதியிழப்பு இன்னும் என்னை துறவை நோக்கமாக கொள்ளவேண்டும் என்பதை நோக்கி என்னை தள்ளியது. படித்த புத்தகங்கள், இருக்கும் மதம், ஈர்த்த விவேகாநந்தர் போன்ற முன்னோடிகள், சமூகத்திற்கு உழைக்க வேண்டும் என்ற பதின்பருவ கனவு எல்லாம் துறவுக்கு சாதகமான மன நிலையில் என்னை தள்ளின.  பிற்காலத்தில் என் தோழி ஒருத்தி இதே போல் தானும் துறவியாகி சமூக சேவை செய்யவேண்டும் என்று கூறினாள். இந்து மதத்தில் பெண்களுக்கு அதற்கான வாய்ப்புகள் குறைவு  என்பதால் கிறித்துவ மதத்தில் இணையலாம் எனக் கருதினாள். எங்கள் இருவரின் மனப்பொருத்தத்தை கண்டு அதிசயித்து  அதனால் ஈர்க்கப்பட்டு  நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் திருமணம் செய்துகொண்டு குழந்தைகள் பெற்று இல்லற வாழ்வில் திளைத்துவருகிறோம்.


      நாங்கள் மிக எளியவர்கள். எங்கள் மனம் பக்குவமற்றது. உண்மையில் துறவு என்றால் என்ன என அறியாதவர்கள். எங்கள் முந்தைய நோக்கத்தை யாரிடமாவது சொன்னால் எள்ளி நகைத்து அலட்சியப்படுத்தி இருப்பார்கள். எங்கள் துறவு எண்ணம் மிக அற்பமான அடித்தளம் கொண்டது.   ஆனால் அரிஷ்டநேமியின் துறவு எண்ணம் கரும்பாறைகளாலான பெரிய மலைபோல மிக உறுதியானதாக இருந்தது. இந்து மதம் துறவை போற்றுகிறது என்றால், அதைவிட நூறு மடங்கு துறவை முக்கியமாக கருதுவது அருக நெறி.  அரிஷ்டநேமியின் உள்ளம்  அருகநெறியில் ஈடுபட்டிருப்பது.  அதனால் அவருடைய துறவு எண்ணம்  எளிதில் சாய்த்துவிடக்கூடியது அல்ல.  இருந்தபோதும் அவர் துறவு எண்ணத்தை கைவிட்டு இல்லறத்தில் இணங்க வைக்க கண்ணனால் முடிகிறது. அவர் கண்ணனுக்கு இணையானவராக காட்டப்படுகிறார். அதனால்  கண்ணனால்  மற்றவர்களைப்போல அவர மனதை மயக்கவெல்லாம் முடியாது. ஆனால் கண்ணனின் வார்த்தகளை அவர் ஏற்றுக்கொள்கிறார்.

   அப்படி என்னதான் கண்ணன் கூறிவிட்டான் என்பதைப் பார்ப்போம்.
"மண்ணில் உள்ள அத்தனை பேருக்கும் உள்ள கடமை தங்கள் குலக்கொடியை நிலைநிறுத்துவது. அதிலிருந்து விலகிச்செல்லும் ஒருவர் தன் மூதாதையரின் நீட்சிமுடிவிலிக்கு பெரும் பழியொன்றை செய்தவராகிறார். அவர்களின் கண்ணீர் அவரை தொடரும். அச்சுமையை ஏற்றபின் அவர் செல்லும் தொலைவென்ன?”

   மண்ணில் பிறப்பெடுக்கும் ஒவ்வொரு உயிருக்கும் தான் உயிர் வாழ்தல் தன் சந்ததியை தொடரவைத்தல் என  இரு பெருங்கடமைகள் இருக்கின்றன.  உயிர் வாழ்தல் தானாக ஒருவன் மேற்கொள்கிறான். ஆனால் தன் சந்ததியை வாழவைக்க மனிதன் முயற்சி எடுக்க வேண்டும். விலங்குகள் அதன் இயற்கை விதித்த தடம் மாறா நிலையின் படி தன் சந்ததிகளை வாழ  வைக்கின்றன. ஆனால் மனிதன்  தன் சிந்தனையின் மூலம் இயற்கை வகுத்த  தடத்திலிருந்து மாறி நடக்க முடிகிறது.  ஆகவே அவன் தன் சந்ததியை தொடர வேண்டாம் என முடிவெடுக்கும் நிலை இருக்கிறது. இதை அவன் தன் கடமையிலிருந்து தவறுகிறான் என்று ஏன் சொல்ல முடியாது?  ஒருவன் துறவு மேற்கொள்வதில் தன் இரண்டாவது கடமையை செய்யாது விடுகிறான். எப்படிப்பார்த்தாலும் இது கடமை மீறல்தானே. 

     ஆனால் மக்கள் தொகை பெருக்கம் அதிகமாக இருக்கும்போது ஒருவன் குழந்தைகள் பெறாமல் இருப்பதால் என்ன ஆகிவிடப்போகிறது என நினைக்கலாம்.  சற்று சிந்தித்துப்பாருங்கள் நம் தந்தை தன் வாழ்நாளெல்லாம் பாடுபட்டு செல்வம் சேர்ப்பது அவருக்காக மட்டுமா?  நமக்காக  நாம் நம் குழந்தைகளோடு நலமாக வாழவேண்டும் என்பதற்காக. இப்படி நம் மூதாதையர் தம் இரத்தம் சிந்தி, சிலசமயம் தன் உயிரை தந்து தன் குடும்பத்தினரை காத்ததனால் அல்லவா இன்று நாம் இருக்கிறோம். நாம் நம் குலத்தை நமக்கு பிறகு நீடிக்காமல் விடுவோமென்றால் அவர்கள் செய்த தியாகத்தையெல்லாம் அர்த்தமிழக்கச்செய்கிறோம்.  மூதாதையருக்கு நீர்க்கடன் செலுத்துதல் என்பது அவர் குலம் நீடிக்கிறது என்பதை உணர்த்தும் செயல் ஆகும். ஒருவனின் குலம் அவன் பிறகும் நீடிப்பது ஒருவகையில் அவன் வாழ்வின் நீட்சி என்று சொல்லலாம். ஆக ஒருவன் தனக்கு குழந்தைகள் இல்லாமல்   குலத்தை முடித்துக்கொள்வது அவன் மூதாதையர் அனைவரின் இருப்பையும் அழிப்பதாகும். அவர்கள் உண்மையில் இப்போதுதான் முழுமையாக இறக்கிறார்கள். அவர்களின் இந்த  இறுதியான இறப்பிற்கு காரணமான பெரும் பழி அவனை சேர்கிறது.  இந்த வகையில் எந்த மத நம்பிக்கைக்கு அப்பாற்பட்டும் இந்த குல நீடிப்பின் அவசியத்தை உணரலாம். நம் புராணங்களில் கடும் தவம் செய்த முனிவர்களும் குழந்தை இல்லாமையால் சுவர்க்கம் புகமுடியாமல் போகும் கதைகளைக்  காணலாம்.


   குழந்தைகள் இல்லாத தம்பதிகளுக்கு நீங்கள் ஆயிரம் ஆறுதல் சொன்னாலும் அவர்கள் கொள்ளும் துயரம்  மிக ஆழமானது.  அந்தத் துயரம் வெறும் மனோவியல் சார்ந்தது அல்ல. அவர்கள் தம் ஆத்மாவில் அறியும் துயரமாகும். அவர்கள் தம் மனதை சமாதானப்படுத்தி தத்து எடுத்துக்கொள்ளல் மூலம் பிள்ளைகளை அடைந்து அந்தப்பிள்ளைகளை சொந்தப்பிள்ளைகள் என மனமாற ஏற்றுக்கொள்வதின் வழியாக அவர்கள் தம் மூதாதையரின் நீட்சி அழியாமல் காப்பாற்றிவிடலாம். 
   அவ்வாறின்றி ஒருவன் பிள்ளைகளை பெறாமல்  உயிர் பிரிந்த பின்னால் அவனை தீக்கிறையாக்கும்போது அவன் குலம் முழுமையும் அவனோடு சாம்பலாகிறது. அவனை புதைக்கும்போது அவனோடு அவன் குல வரிசை மண்ணில் புதைந்துவிடுகிறது. ஒருவன் தன் சுக துக்கங்களை துறத்தல் என்பது வேறு. ஆனால்  தன்னைச் சார்ந்தவர்களின் , தன் மூதாதையரின் நோக்கத்தை, விருப்பை துறப்பதற்கு உண்மையில் அவனுக்கு உரிமை இருக்கிறதா? இந்தக் கேள்வியை அரிஷ்டநேமியின் உள்ளத்தில் விதைக்கிறான் கண்ணன். அது அரிஷ்டநேமி மறந்த ஒன்றை ஞாபகப்படுத்தி அவனை இல்லறத்தில் ஈடுபடும் முடிவுக்கு கொண்டுசெல்கிறது.

தண்டபாணி துரைவேல்