மக்கள் கூட்டத்தை வெள்ளமென காணும் பார்வையை வெண்முரசு தருகிறது:
மலையின் அடிவாரத்தில் இருந்து பெருகி மேலெழுந்த யாதவர்களின்
கூட்டம் பெருவெள்ளமொன்று மலையை நிரப்பி மேலெழுந்து கொண்டிருப்பது போல் தோற்றமளித்தது. சருகுகளும் செத்தைகளும் நுரைக்குமிழிகளும் அலைகளுமென அது பெருகி வர அதன் விளிம்புவட்டம் குறுகிக்குறுகி மலைமுடி நோக்கி சென்றது.
சபரிமலையில் பக்தர்கள் வழிபாட்டுக்கு நிற்கும் வரிசைஅமைப்புக்கும் மற்ற
இடங்களில் இருக்கும் வரிசை அமைப்புக்கும் மிகப் பெரிய வேறுபாடு உண்டு. மற்ற இடங்களில் ஒருவர் பின் ஒருவர் என இருப்பதுதான் வரிசை எனப்படும். சபரிமலை வரிசை அமைப்பில் ஒரு மைல்தூரம் அளவுக்கு நீண்ட பகுதி இருபது பேர் தோளோடு தோள்தொட்டு நிற்கும் அளவுக்கு அகலமானது. அதில் பக்தர்கள் பல நூறு மைல்கள் பயணம் செய்து வந்திருப்பர்கள். இன்னும் சிலர் நாற்பது மைல் அளவில் மலைகளை கால்நடையா ஏறி இறங்கி வந்து சேர்ந்திருப்பார்கள். நான் சில சமயம் அந்த வரிசையில் எட்டு மணி நேரத்திற்கும் அதிகமாக நின்றிருக்கிறேன். அப்போது அந்த வரிசையில் நிற்கும் போது மனிதர்களின் நகர்வு ஆற்று நீரின் நகர்வுக்கு ஒத்திருப்பதை கண்டிருக்கிறேன். அவர்களோடு ஒருவனாக நிற்கும்போது மனம் ஒரு தனித்தவனாக நம்மை உணர்ந்தாலும் உடல்கள் அனைத்தும் ஒன்றிணைந்து ஆற்றின் நீர்போல மெல்ல ஒழுகிச்செல்லும். ஆற்றின் கரை ஒட்டிய ஓரத்தை விட நடுப்பாகத்தில் நீரின் விரைவு அதிகம் இருக்கும். அவ்வாறே இவ்வரிசையில் நடுவில் இருப்பவர் ஓரத்தில் இருப்பவர்களைவிட சற்று விரைவாக செல்ல முடிகிறது. நின்றிருக்கும் வரிசையில் நெருக்கத்தால் வரும் அழுத்தம் அவ்வப்போது அலைகளைப்போல் நம்மைத்தாண்டி போய்க்கொண்டிருப்பதை அறியலாம். ஆற்றின் கரையில் உடைப்புகளில் நீர் வெளியேறுவதைப்போல் வரிசையின் அரணில் இருக்கும் சில இடைவெளிகளில் சிலர் பிரிந்து காட்டு வெளியில் வேறு குறுக்கு பாதையில் செல்ல முற்படுவார்கள். சில சமயம் வரிசை நிறுத்திவைக்கப்பட்டு பகுதி பகுதியாக அனுப்பப்படும். முன் இருந்தவர்கள் பகுதி முழுதும் சென்ற பின்னர் அடுத்த பகுதியை தடுத்திருந்த கயிறை தளர்த்தி செல்ல அனுமதிப்பார்கள். அப்போது அணையைத்திறந்த வெள்ளம்போல் மக்கள் ஓடி முன்னால் இருக்கும் பகுதியை நிரப்பிக்கொள்வார்கள். என்னைப்போன்ற ஒரு சிலர் ஒருவருக்கொருவர் இடைவெளை விட்டு நிற்கலாம் ஓட வேண்டாம் என அருகிருப்பவரிடம் எவ்வளவோ சொல்லிப்பார்ப்போம். எதுவும் கேட்கும் மன நிலையில் அவர்கள் இருக்கமாட்டார்கள். ஒரே ஏச்சும், பேச்சும், சபித்தல்களும் வாய்ச்சண்டைகளும் நுரைத்து கொப்பளித்துக்கொண்டு அந்த மனிதக்கூட்டம் இருக்கும். அந்த வரிசை மனித உடல்களாலான ஆறு என்பது எவ்வளவு சரியான உவமைஎன இப்போது எனக்கு தோன்றுகிறது. அந்த பக்தர்களின் ஆறு, பதினெட்டுபடிகள் என்ற திறப்பில் குறுகிப் பாய்ந்து ஐயப்பனின் திருமேனியில் பார்வைகளாக பொழிந்து செல்கிறது எனக் கொள்ளலாம அல்லவா?
உடல்கள் ஒன்றிணைந்து நடந்துகொள்வதைப்போல் சமூகம் எனத் திரண்டிருக்கும் மனிதர்களின் மனங்களும் தன் தனித்தன்மைகளை நெகிழ்த்திக்கொண்டு நீர்மைகொள்கின்றன. ஒவ்வொரு மனிதனும் தனித்தனி குணங்கள் கொண்டவர்கள். அவர்கள் ஒட்டியே பிறந்தாலும் அவர்கள் குணங்கள் வேறுபட்டிருப்பதை பார்த்திருக்கிறோம். மனிதர்கள் தனி ஒரு மனிதனாக, எந்த ஒரு தனிப்பட்ட ஒருவனுடனும் மன ஒற்றுமை கொள்ளாதவர்கள் மற்றும் ஏதாவது வேறுபாட்டை முதலில் கண்டடைய முயல்பவர்கள். ஆக தனியர்களாகத்தான் மனித குலத்தில் பிறக்கிறார்கள், மழைத்துளிகளைப்போல. ஆனால் ஒரு மக்கள் கூட்டம் வெறும் தனியர்களின் தொகை என ஆவதில்லை. அவர்கள் மக்கள் திரள் என ஆகும்போது ஒரு குளத்து தண்ணீர் போல ஆற்று நீரைப்போல தன் தனித்துவம் இழந்து ஒன்று கலந்து விடுகின்றனர். அப்போது அவர்கள் குணங்கள் ஒற்றையாக குறுகிவிடுகிறது. அவர்கள் ஒரு கூட்டத்தில் ஒருவராய் இருக்கும்போது ஒரு பொது மனநிலைக்கு தன்னை ஆட்படுத்திக்கொள்கின்றனர்.
ஒரு மக்கள் கூட்டம் ஒரு குளம்போன்றது. அதில் ஒரு உணர்வை ஓரிடத்தில் கரைத்துவிட்டால் அவ்வுணர்வு குளம் முழுதும் பரவிவிடுகிறது. பெரும்பான்மையான நீர் கொண்டிருக்கும் சுவையயே தன் சுவையென அத்த குளத்து நீரும் கொள்கிறது. அப்படியே. மக்கள் பெரும்பான்மையினரின் கருத்துக்கேற்ப தன் கருத்தை மாற்றிக்கொள்கின்றனர். இந்தப் பண்பை வெகு சாமர்த்தியமாக அரசியல்வாதிகள், வணிகர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். ஒரு அரசியல்வாதி தன்னை பெரும்பான்மையினர் தேர்ந்தெடுக்க விரும்புகிறார்கள் என்ற ஒரு கருத்தை சாமர்த்தியமாக பரப்பிவிட்டால் அவன் வெற்றிபெற்றுவிடுகிறான். ஒரு வணிகன் தன் பொருளை பெரும்பாலானோர் வாங்குகிறார்கள் என மக்கள் நம்பும்படி விளம்பரப்படுத்துவதன்மூலம் தன் பொருளை அதிக அளவில் வாங்கவைக்கிறான்.
மக்கள் கூட்டம் ஒரு ஆறுபோல, தான் போகும் முழுப் பாதை அதற்கு தெரியாது. அடுத்த அடி ஒன்றுதான் அதன் கண்ணுக்கு தெரியும். ஆனால் வெகு அரிதான மனிதர்கள் தன்னை மக்கள் கூட்டத்திலிருந்து பிரித்துக்கொண்டு வெளிவந்து மக்கள் கூட்டம் செல்ல வேண்டிய பாதையை சற்று வழிமாற்றுகிறார்கள். அதன் மூலம் மக்கள் கூட்டத்தின் பெரும் வீழ்ச்சிகளை தவிர்க்கிறார்கள். மக்கள் சமூகம் முன்னேற்றமின்றி தேங்கி நின்றுவிடாமல், முன் செல்ல வழிவகுக்கின்றனர். அந்த மக்கள் பொறியாளர்களால்தான் மக்கள் சமூகம் இப்போது இந்த அளவுக்கு முன்னேறி வந்திருக்கிறது. கையில் மண்வெட்டியுடன் முன் நடக்கும் தலைவனின் பின்னே மொத்த கூட்டமும் ஒரு வாய்க்கால் நீரென பின்தொடர்ந்து செல்கிறது.
தண்டபாணி துரைவேல்