)
இரு சிறு வயது பிள்ளைகள் சந்தித்துக்கொண்டால் அவர்கள் சிறிது நேரத்தில் ஒரு விளையாட்டை உருவாக்கிக்கொண்டு விளையாட ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் அப்படி அறிந்துகொண்டு மனதில் நெருக்கம் கொள்கிறார்கள். அது கொண்டாட்டமும் மகிழ்ச்சி கூவல்களும், சிறு சண்டைகளும், சமாதானங்களும், விட்டுக்கொடுத்தல்களும் நிறைந்ததாக இருக்கும். அங்கே அவர்களுக்கு என ஒரு உலகம் உருவாகும். உணவை மறந்து, பெற்றோரை மறந்து ஆர்வத்துடன் விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைகளை காணுதல் என்றும் சலிக்காத இன்பம்.
அதைப்போன்று இளைஞர்களான ஆணும் பெண்ணும் சந்தித்துக்கொள்ளும்போது பல்வேறு விளையாட்டுகள் விளையாடப்படுகின்றன. அவற்றில் அவர்கள் அறிந்து ஆடுவது சிறிது என்றால் அவர்கள் தாங்கள் ஆடுகிறோம் என அறியாது விளையாடுவது அதில் அதிகம். அந்த விளையாட்டுகளை பின்வருமாறூ வகைப்படுத்திக்கொள்ளலாம்.
தங்கள் உள்ளத்தில் அவர்களால் ஏற்படும் உணர்வுகளை வெளிப்படுத்தாமல் ஒளித்துக்கொள்வார்கள். அடுத்தவரின் உள்ளத்தில் என்ன இருக்கிறது என ஆவல் கொண்டு அதை அறிந்துகொள்ள முற்படுவார்கள். அவ்வப்போது சில குறிப்புகள் சொற்களில் வெளியிட்டு எதிர் பாலினரை கண்டுபிடிக்கச் சொல்கிறார்கள். அப்போது அவர்கள் விளையாடுவது கண்ணாமூச்சி.
எதையோ சொல்ல வருவதாக காட்டிக்கொள்வார்கள். ஆனால் சொல்லாமல் விட்டுவிடுவார்கள். அவர் என்ன சொல்ல வருகிறார் எனபதை அறிவது இன்னொருவருக்கு ஒரு சவாலென ஆகிவிடும். ஒருவர் சொல்லாமல் நழுவ நழுவ மற்றொருவர் அவரை சொல்ல வைக்க முயல என ஒரு ஓடிப்பிடித்தாடும் விளையாட்டு அங்கே நடக்கும்.
ஒருவர் தன் கருத்தை பல வார்த்தைகளுக்கு நடுவே புதைத்து வைத்துவிடுவார். அவ்வாறு ஒளித்த வைத்த அவர் உளக் கருத்தை மற்றொருவர் கண்டுபிடிக்க வேண்டும். இது ஒளித்து வைத்து கண்டுபிடிக்கும் விளையாட்டு.
ஒருவர் எவ்வித பிடியும் கொடுக்காமல் விலகிச்செல்ல மற்றொருவர் அவரை தன் சொற்களால், உடல்மொழியால், தன்பால் ஈர்த்து அவர் மனதை தொட முயல்கிறார்கள். இது ஒற்றைகாலில் விரட்டி சென்று மற்றவரை தொட்டு விளையாடும் நொண்டிப்பிடிக்கும் விளையாட்டு ஆகும்.
ஒருவரிடம் சீண்டும் வண்ணம் எதையாவது சொல்லி அதற்கு பதிலைப் பெறுவதும் அதற்கு வேறொன்றை சொல்லி வேறொரு பதிலைப்பெறுவது எனத் தொடர்ந்துகொண்டிருப்பார்கள். இது போட்டு பிடித்து விளையாடும் பந்து விளையாட்டு.
மற்றொன்று ஒருவர் சொல்ல வருவதை மற்றொருவர் புரிந்துகொள்ளாததைப்போல நடிப்பது. அல்லது வேறொன்றென புரிந்துகொண்டதாக காட்டிக்கொள்ளுதல். இந்த விளையாட்டில் பெரும்பாலும் ஒரு பெண்தான் வெற்றிபெறுவாள். பெண் விரும்பும் மற்றொரு விளையாட்டு, சொற்களில் விருப்பம் இல்லாததைப்போல் விலகி விலகி ஓடுதல் ஆனால் கைக்கெட்டும் தூரத்திலேயே அவள் இருந்துகொண்டு ஒரு கண்ணசைவில், ஒரு நளினமான செய்கையில் பிடிபார்க்கலாம் என சீண்டுவது.
இப்படி பல விளையாட்டுகளை அர்ச்சுனனும் சுபத்திரையும் ஆடிக்கொண்டிருப்பதை காண்டீபத்தில் பார்க்கிறோம். அதற்கான களம் அமைத்துக்கொடுத்து கண்ணன் புன்னகைத்துகொண்டிருக்கிறான். ஒருவை ஒருவர் அறிந்துகொள்ள. அவர்களுக்கிடையில் நட்பை உருவாக்க, இருவரையும் தனித்து விளையாடவிட்டால் போதும் என கண்ணன் கருதுகிறான். எப்போதும்போல் அவன் எண்ணப்படி எல்லாம் நடக்கின்றன
தண்டபாணி துரைவேல்