ஒரு ஆண் தன் பதின்பருவத்தில் அடியெடுத்து வைக்கையில் பெண்ணால் சீண்டப்படுகிறான். விளையாட்டுகளில் மட்டுமே ஆர்வம் கொண்டிருந்த அவனை பெண்மை பிடித்து இழுத்து அவனை தடுமாறி விழவைக்கிறது. குளத்து நீரில் கொடிகளில் கால் சிக்கி மூச்சு திணறுவதுப்பொல அவன்புத்தி பெண்ணுடல், பெண் பாவனைகள், பெண்னின் குரலினிமை ஆகியவற்றில் சிக்கி மூச்சு திணறுகிறது, அதிலிருந்து அறுத்துக்கொண்டு தன்னை விடுவித்துக்கொள்ளவேண்டும் என அவன் போராடுகிறான். அது பெண்மீதான வெறுப்பென வளர்கிறது, ஆம் அவனை மீறி அடங்காமல் எழும் பெண் விருப்பு எனும் பெரு நெருப்பை வெறுப்பு என்ற போர்வைபோட்டு அணைக்க முயல்கிறான். அவள் இதழ்களில் மட்டுமென இல்லாமல் விழி ஓரங்களில், கன்னக்குழிவில், முகத்தில் விழுந்தாடும் முடிக்கற்றைகளில், ஆடைகளின் விலகலில் பளிச்சிடும் அவள் மேனி வண்ணத்தில், கைவளைகளின் சிணுங்கும் ஒலியில், அங்கங்கள் தன்னை ஒளிந்திருந்து வெளிப்படுத்தும் அசைவுகளில், மேனியெங்கும் மலர்ந்திருக்கும் மென்மையில், கால் கொலுசுகளின் மெல்லொலியில், முயல்களைப்போல் அஞ்சி ஓடுவதாக பாவனைசெய்யும் வெண்பாதங்களில், எல்லாம் அவள் சிரிப்பு வெளிப்பட்டு அவனை பரிகசிப்பதாக உணர்கிறான். தன் அகங்காரத்தை சிறுமை செய்து அடிபணிய வைக்கும் பெண்மைக்கு எதிராக அவனுள் பொங்குகிறது சினம். அந்த சினத்தை பலவாறு வெளிப்படுத்துகிறான். அவளை வார்த்தைகளால் செயல்களால் சிறுமை செய்கிறான். எவ்வித தொடர்பும் இல்லாத ஏதோ ஒரு பெண்ணென்றாலும் அவள் பெண் என்பதற்காவே அவளை இழிவு செய்ய நினக்கிறான். அவளை திகைக்கவைத்து பயமுறுத்தும் செயல்களை செய்கிறான். அவளை தன் கூரிய பார்வைகள், உடல் சீண்டல்கள் மூலமாக தொந்தரவுகள் செய்கிறான். அவளை இழிவுபடுத்தும் வார்த்தைகளை எவ்வித காரணமுமின்றி பொதுவெளியில் சொல்லித் திரிகிறான். அவதூறு வாக்கியங்களை பொதுச்சுவர்களில் எழுதுகிறான். இந்த பதின்பருவ சிறுமை ஒருவனுக்கு வயதாக வயதாக குறையும். பெண்களிடம் நட்பு, கொள்கையில், ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்து காதலிக்கையில், குடும்பத்தில் தன் உறவுப் பெண்களின் பாசத்தில் இந்த சிறுமையை வெகுவாக குறைத்துக்கொள்ள முடியும். ஆனாலும் இது முற்றிலும் அழியாத வித்தென அவன் உள்ளத்தில் ஒளிந்துள்ளது. ஒரு சிறு தூண்டலில் வெளிவந்து கோரைப்பல்காட்டி சீறி எழுவது அவ்வப்போது நடக்கிறது.
தன்னை மிகவும் ஈர்த்த பெண் தன் காதலை அல்லது நட்பை மறுத்து அதை அங்கீகரிக்காத போது அவனுள் இருக்கும் அந்தச் சிறுமை பேருருக்கொண்டு எழுவதுண்டு. இச்சிறுமை அந்த ஒரு பெண்ணிடம் மட்டுமல்லாது கண்ணில்படும் அனைத்துப் பெண்களிடமும் அவன் வெளிப்படுத்துகிறான். இதை வெறும் காமம் அல்லது கோபம் எனக் கூற முடியாது. இந்த அர்த்தமற்ற வஞ்சத்தின் காரணமாக நாள்தோறும் எவ்வளவோ பெண்கள் வீதிகளில் கல்விநிலையங்களில், அலுவலகங்களில் பல்வேறு விதங்களில் துன்புறுத்தப்படுவதை காணலாம். இந்தச் சிறுமை செய்தல் சில சமயம் எல்லை மீறி வன்புணர்வு, கொலை என்ற அளவுக்கு விபரீதமாகிவிடுவதுண்டு. ஒவ்வொரு ஆணின் உள்ளத்திலும் இந்த நாகம் கரவுகொண்டுள்ளது. அந்நாகம், பொதுவெளியில் பேரெடுத்த பிரபலங்கள், அரசியல்வாதிகள், இலக்கியவாதிகள், சமூக சேவகர்கள், பத்திரிக்கையாளர்கள் தத்துவ அறிஞர்கள் போன்றவர்களிடமிருந்துகூட வெளிப்படுவதைப் பார்த்து திகைத்திருக்கிறோம்.
பெண்ணைச் சிறுமைப்படுத்தும் இந்தப் பெருவஞ்சம் இன்று அஸ்தினாபுர அவையில் பெரு நாகமென நஞ்சு வெளிப்பட சீறி நிற்பதைப் பார்க்கிறோம். துரியோதனனிலிருந்து வெளிப்படும் அந்நாகம், கர்ணன், மற்ற கௌரவர்களில் உள்ளத்தில் இருக்கும் நாகங்களையெல்லாம் தூண்டி எழுப்புகிறது. இந்த நாகங்கள் பின்னிப் பிணைந்து ஒற்றை நாகமென ஆகி திரௌபதியின் மேல் நஞ்சுகக்க எழுந்து நிற்கின்றன.