Wednesday, July 6, 2016

இழிவினை எதிர்கொள்ளும் பெருந்தேவி (பன்னிரு படைக்களம் - 87)


 
   சாலையில் நடந்துகொண்டிருக்கும்போது காலணி அறுந்துவிட்டால் அதுகூட நமக்கு அவமானமென்றாகுகிறது. காலணியை சுமந்து செல்லுதலைக்கூட தனக்கு ஒரு இழிவெனக் கொள்பவர்களை பார்க்கிறோம். வகுப்பறையில் ஆசிரியர் கேள்வி கேட்டு விடை தெரியாமல் நிற்பதில் நாம் மிகவும் வெட்கிப்போகிறோம். குடும்ப விழாவில் தன் சேலையில் ஒரு ஓரத்தில் சிறு கிழிசல் ஏற்பட்டதால் மிகுந்த பதட்டம்கொண்டு, முகம் வாடி உடன் அங்கிருந்து சென்றுவிட்ட ஒரு உறவினரை கண்டிருக்கிறேன். மனிதர்கள், தோல்விகளை, துயரங்களை, பொருளிழப்புகளைக்கூட தாங்கிக்கொள்கிறார்கள். ஆனால் இழிவினை சற்றும் அவர்களால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. தன் இழிவினை போக்க எதையும் செய்யத் துணிகிறார்கள். அது மற்றவரை கொடுந்துன்பத்திற்கு ஆளாக்கும் அளவுக்கு செல்கிறது. இந்த இழிவினை எதிர்கொள்ளமுடியாமல் தன் உயிரையே சிலர் இதற்காக மாய்த்துக்கொள்வதை பார்க்கிறோம். 
 
    திரௌபதி,  தவமிருந்து பெற்ற திருமகள், சிறு வயதிலிருந்தே பீடுடன் வளர்க்கப்பட்டவள், பெற்றோராலும் குடிகளாலும் தெய்வமென போற்றப்பட்டவள், அவளுக்கு இணையாக ஒரு ஆணை நிறுத்தமுடியாது என ஐந்து சிறந்த ஆண் துணைவர்கள் என ஊழால் அமர்த்தப்பட்டவள், கிருஷ்ணனையே நேர்கொண்டு நோக்கி நிகரென நிற்பவள், ஓர் அரசிக்கு இலக்கணமென அகிலத்தில் எடுத்துக்காட்டாய் இருந்தவள்,  ஒரு பெருநகரை கட்டி எழுப்பியவள், தான் நினைத்தைதையெல்லாம் குறைகளின்றி நிறைவேற்றிக்கொண்டவள்.  
 
      ஆனால் அந்தப் பெருமகள், பேரன்னை, பெருந்தேவி, பேரரசி, தெருக்கோடியில் சிறு குடிலில் வாழும் ஆதரவற்ற அபலைப் பெண்ணுக்குக்கூட ஏற்படமுடியாத பெரும் இழிவினை எதிர்கொண்டு நிற்கிறாள். ஒரு நொடியில் தொழும்பிஎன ஆக்கப்படுகிறாள். அவளை அன்னையென்று போற்ற வேண்டிய அவள் கணவனின் தம்பிகள் அவளை தம் அடிமை என அறிவிக்கின்றனர்.  அதுமட்டுமல்லாமல் ஒற்றையாடையில் இருக்கும் அவள் ஊர்பார்க்க தலைமுடி பற்றி இழுத்து வரப்படுகிறாள்.  ஆடவர்கள் நிறைந்த அவையில்  அவளிடம்  மனம்கூசும் இழிசொற்கள் சொல்லப்படுகின்றன.   அனைத்துக்கும் மேலாக அரச அவையின் நடுவே அவளின் ஆடையை களைந்து அவமதிக்க நினைக்கின்றனர். ஒரு பெண் இதற்கு மேல் என்ன இழிவினை இவ்வுலகில் சந்திக்கமுடியும்.     ஒரு பெரும்பாறைக்குன்றை அழுகி நாறும் கழிவுகளாலான சகதி வெள்ளம்  தன்னுள் ஆழ்த்தி கரைத்துவிட முற்படுவதைப்போல் வஞ்சம் கொண்ட ஆண்களின் இழிவுகள் என் அன்னையை  சூழ்ந்து மூழ்கடித்து வீழ்த்தப்பார்க்கின்றன.
 
    அந்த நேரத்தில் திரௌபதி அதை எப்படி எதிர்கொள்கிறாள் எனப் பார்க்கிறேன்.  சூதாட்டம் நடக்கும் இடத்தில் அவள் இல்லையென்றாலும் அவள் விழிப்போடு இருக்கிறாள். அங்கு நடக்கும் நிகழ்வுகள் அவளுக்கு அறிந்தவையாக இருக்கின்றன.  அவள் தான் இழிவுபடுத்தக்கூடும் என்பதை அறிகிறாள். அதனால் தன் சேடியரை அதற்காக தயார்படுத்தி வைக்கிறாள்.  முதலில் காளிகன் வருகிறான். அவனை அவள் அன்னையென எதிர்கொள்கிறாள். அனைவர் ஆழ் மனதில் என்றும் உறையும் அன்னையின் பேரன்பை நினைவூட்டி வெளிக்கொணர்கிறாள்.   அவனிலிருக்கும் ஆண் என்ற அகங்காகரத்தை நீக்கி   அவன் தாய்மடியமர்ந்து பாலருந்தும் சிறு மகவின் மனநிலையை சில பாவனைகளில், சில சொற்களில் ஏற்படுத்துகிறாள். ஒரு தாய் தன் மேல் சேற்றை தெளித்துவிட்ட சிறுமகனை  எதிர்கொள்வதைப்போல்  இருக்கிறது அவள் முதல் செய்கை. துரியோதனனுக்கு அவள் கேட்டனுப்பும் வினாக்களில் தென்படுவது ஒரு மகனை அறிவுறுத்தி சீர்படுத்தும் அன்னையின் வார்த்தைகள். தன் குடும்பப் பெண்களுக்கு செய்ய விழையாத ஒன்றை பிற பெண்களுக்கு செய்யக்கூடாது என்ற அடிப்படை அறத்திற்கு புறம்பானது அவன் செயல் என அவனுக்கு புரிய வைக்க முயல்கிறாள். அவள் சொற்கள் ஒரு அபலைப்பெண்ணின் மன்றாடும் வார்த்தைக்ள் அல்ல. உயர் பீடத்தில் இருந்து கனிவுடன் கூறப்படும் அறிவுறுத்தல்கள்.  இவர்களின் சிறுமை என்ற சகதியாறு அவள் காலைக்கூட நனைக்க முடியாத உயரத்தில் இருக்கிறாள் என்பதை அவள் கேட்டனுப்பும் கெள்விகளில் நாம் அறிகிறோம்.
  அடுத்து காமிகன் வருகிறான். அவன் சொன்னதைக் கேட்கும் செவியை அடைத்துக்கொண்டு வருகிறான். ஆகவே அவனுக்கு காட்சியுருவில் அவள் பதிலளிக்கிறாள். அவள் பெண்மையில் வீற்றிருக்கும் ஆதிப்பேரன்னையை அவனுக்கு உணர்த்தி, அவர்கள் இழிவு செய்ய நினைப்பது பெண்ணில் எழும் அந்த பெருந்தெய்வத்தை என்ற எச்சரிக்கையை அவன் மூலம் அவள் அனுப்பிவைக்கிறாள். 
 
   பின்னர் வருகிறான் துச்சாதனன். அவன் தன் அறத்திற்கான கண்களை மூடி காதுகளை பொத்தி ஒரு விலங்கென வருகிறான். அவள் தலைமுடி பற்றி இழுத்துச் செல்கிறான். அவள் மனம் உடைந்து ஒரு கேவல் சத்தமோ, முறையீட்டுக்குரலோ எழுப்பாமல், கள்வர் கையில் கொண்டுசெல்லும் தெய்வச்சிலையென சலனமேதுமற்று போகிறாள். அந்த இழிசெயல் அவளைச்சென்று தொடக்கூட மூடியவில்லை. அவள் மேலும் தன்னை தெய்வமாக்கிக்கொள்கிறாள்.
 
   அரசவையில் அவளை தொழும்பியென அழைக்கப்பட்டு அவ்வாறு அவளை சிறுமைப்படுத்த முயல்கிறார்கள். அவள் யாரோ ஒருவர் பொருட்டு  பேசுவதுப்போல் அறம் எதுவென்று எடுத்துரைக்கிறாள். அவள் தன்னைச் சிறுமை செய்யாதீர்கள் என கோரவில்லை.  கதறித்துடித்து தன்னை காப்பாற்றும்படி கெஞ்சவில்லை.   துரியோதனன் அவளிடம் எதிர்பார்ப்பது அவள் சிறுமைகொண்டு இழிவுபட்டு நிற்க வேண்டும் என்பதை. அதை அவன் சொல்லவும் செய்கிறான்.
 நீ என் அரியணைக்கருகே கால்மடித்து நெற்றியால் நிலம்தொட்டு வணங்கவேண்டிய அடிமை வணங்கு!” அவள் மெல்ல சிரித்தது அவையெங்கும் கேட்டது. “வணங்கு! இல்லையேல் இப்போதே உன் தலையைச் சீவி எறிய ஆணையிடுவேன். வணங்கு கீழ்மகளே!” என துரியோதனன் பெருங்குரல் எழுப்பி தன் கைகளை ஓங்கி அறைந்தான்.
 
அவன் செய்யும் சிறுமைகள் அண்டாத உயரத்தில் இருந்துகொண்டு அவள் சொல்கிறாள் “பெண் என நான் எந்த ஆண் முன்னும் இன்றுவரை தலைவணங்கியதில்லை” என்றாள். “முலையூட்டுகையில் உளம்கனிந்து குனிந்து நோக்கியிருக்கிறேன். மைந்தருடன் ஆடும்போது அவர்களின் கால்களை சென்னிசூடியிருக்கிறேன். அவர்களை நெஞ்சில் ஏற்றி அணைத்திருக்கிறேன். ஒருபோதும் பணிந்ததில்லை.”
 
   அவள் தனக்கு ஏற்படுத்தப்பட்ட சிறுமையை அலட்சியப்படுத்தி அடிப்படை அறம்   தவறிப்போவதைப்பற்றி அங்கே அங்கேஅவள் ஒரு அறிவார்ந்த விவாதத்தை நடத்துகிறாள். அறம் என்பது அரசவை உருவாக்குவது அல்ல. உலகத்தில் உயிர்கள் உருவாகி தழைத்து வளர்கையில் அதனுடன் சேர்ந்து வளர்ந்து நிற்பது அடிப்படையான அறம் ஒன்று.  விலங்குகள் ஒன்றையொன்று கொல்லலாம். ஆனால் அவை ஒன்றையொன்று இழிவு செய்துகொள்ளவில்லை.  உணவுக்காக அல்லது தன் எல்லைகளை பாதுகாப்புக்கென அல்லாமல் ஒன்றையொன்று துன்புறுத்திக்கொள்வதில்லை. அதாவது வெறும் இன்பத்திற்காக ஒன்றையொன்று இழிவுபடுத்திக்கொள்வதில்லை.   அந்த அறத்தின் நீட்சியாகவே மற்ற சமூக அறங்கள் எற்படுத்தப்படுகின்றன. அந்த அடிப்படை அறங்களுக்கு சமூக அறங்கள் முரண்படுமானால் திருத்தப்படவேண்டியவை சமூக  அறங்களேயாகும். கிருபர், துரோணர், பீஷ்மர் அரசனே முதன்மை அவன் சொல்லே இறுதி, அவன் சொல் கேள்விகளுக்கு அப்பாற்பட்டது என்று  ஏற்படுத்தப்பட்டுள்ள ஒரு பழைய சமூக அறத்திலேயே தேங்கி நிற்கிறார்கள்.  திரௌபதி சொல்வது அடிப்படையான அறம். தவறிழைக்காத ஒருவருக்கு கேடு செய்ய நினைப்பது. இழிவுபடுத்த முற்படுவது, அடிப்படை அறனுக்கு முரணானது என்பதை கூறுகிறாள்.
 
   ஆனால் ஆடவர்களின் அவை அவள் சொற்களை  செவி கொள்ளாமல் இருக்கிறது.  துச்சாதனன் திரௌபதியின் ஆடையை அகற்ற வருகிறான். பெண்ணுக்கு ஆடையை அளித்தவன் ஆண்தான். அவளிடம் ஆட்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளவே அவளுக்கு ஆடையை விலங்கென இட்டவன் ஆண். அந்த ஆடையை பெண்ணிடமிருந்து அவன் களையும்போது அவன் தன்னைத்தானே சிறுமைபடுத்திக்கொள்கிறான். அந்த இழிவு அப்பெண்ணுக்கு காலப்போக்கில் மறைந்துவிடும். ஆனால் அந்த சிறுமை செய்தவன் அடையும் இழிவு சந்ததிதோறும் தொடரும். அவன் எத்தனை பிறவி எடுத்தாலும் அவன் ஆன்மாவில்  அழியாக்கறையென நிற்கும். 

   அவர்களின் வீழ்ச்சியை இனி தடுக்கமுடியாது என அறியும் திரௌபதி இந்த அநீதிக்கு துணை நிற்கும் இந்த சமூக அறனை, அதற்கு துணை நிற்கும் வேதங்களை,  முடித்து வைக்க, அவற்றை மாற்றி புது வேதத்தை எழுத கண்ணனை அழைக்கிறாள்.  “எழுக புதியவேதம்! ஒவ்வொருவருக்கும் உரியது என எழும் அழியாச்சொல்! ஆழிவண்ணா, ஆயர்குலவேந்தே, உன் அறம் எழுக! ஆம், எழுக!” என்று கூவியபடி  இரு கைகளையும் தலைக்குமேல் கூப்பியபடி கண்மூடி நின்றாள்.    இனி அவளுக்கு ஏற்படப்போவது எதுவும் அவளுக்கான தனிப்பட்ட இழிவல்ல. அறத்திற்கான இழிவென உணர்த்தி தன்னை இழிவுக்கு அப்பாற்பட்டவளாக உயர்த்திக்கொள்கிறாள்.

   
கண்ணன்தான் அங்கில்லையே. அதனாலென்ன  அந்த மாயவன் தன் இருப்பை அங்குள்ள பெண்களின் மனதினில் நிறுவியிருக்கிறான். அங்கிருக்கும் ஒவ்வொரு பெண்ணின் உள்ளத்தில் இருந்தும் வெளிப்பட்டு எழுந்து வருகிறான். திரௌபதிக்கு ஆடைகளை அள்ளித் தருகிறான்.  அங்கு காக்கப்படுவது திரௌபதியின் மானம் என்று சொல்ல முடியாது. அங்கு காக்கப்படுவது மனித சமூகத்தின் மானம். அறத் தேவதையின் மானம். மனித இருப்பை காத்து நிற்கும் மகாதருமத்தின் மானம். 

தண்டபாணி துரைவேல்