பயன் தராத கடமை எதாவது மண்ணில் உண்ணடா? இல்லை. பலனை எதிர் பார்க்காமல்
ஏன் பணி செய்யவேண்டும்? உண்மையான பலனை அடைவதற்காக பலனை எதிர்ப்பார்க்காமல் பணி செய்யவேண்டும்.
எது உண்மையான பயன்? வானம்போல் பயனாக மட்டும் இல்லாமல் இருக்கும் பயன்.
“செல்வத்துக்கு என்ன பொருள் மன்னரே? அது அளிக்கும் பயன் மட்டுமல்லவா அது?
நாடக ராஜா கொடுக்கும் தானத்திற்கும், நாடகராஜா வாங்கும் பிச்சைக்கும்
ராஜவேடம்போட்ட நடிகனின் ஆன்மா கட்டுப்படுவதில்லை. நான் நடிகன் என்பதை மறக்க வைக்கும்
இந்த பிறவியும், பிறவியின்மீது படிந்து அகக்கண்களை மறக்கவைத்துவிடும் அகங்காரம்தான்
கடமைமேல் ஏறி நான் செய்கின்றேன் என்றும் எல்லா கடமைக்கும் தானே பொறுப்பு என்றும் நம்ப
வைக்கிறது, அனைத்து பயனுக்கும் தானே பொருப்பு என்றும் மயங்குகிறது. நடிகன் நடிகன் என்பதை
மறந்து ராஜா என்றே நம்புகின்றான். இந்த நாடக ராஜாவைப்பார்த்துதான் கண்ணன் “கடமையை செய்
பலனை எதிர்ப்பார்க்காதே“ என்கின்றான்.
மயக்கதிரைகளில் விழும் காட்சியின் திரைப்படம் நடந்துக்கொண்டே இருக்கிறது.
ரசிகர்கள் மட்டும் அல்லாமல் நடிகனும் நிஜம் என்கின்றான். நவரசங்களும் நிஜமாகிவிடுகின்றது.
நடகத்திற்கு வெளியில் நின்று பார்க்கும், இந்த நாடக சூத்ரதாரியான பிரம்மம் நாடகத்தில்
இருந்துக்கொண்டே நாடகத்தை விட்டு வெளியிலும் நிற்கின்றது. “அது” இது பயன் இல்லை என்கிறது.
நமக்கு திகைப்பாக இருக்கிறது.
மகாயாஜரும் துருபதனிடம் இதைத்தான் சொல்கின்றார். நல்லதோ தீயதோ மனிதர்கள்
அனைவரும் ஒரு காலத்தில், ஒரு கணத்தில் வெறும் பாவைகள் மட்டும்தான். நாம் இயங்குவதுபொலவும்,
நாமே இயக்குவதுபோலவும் இருக்கும் இந்த மயக்கம் ஒரு மின்னல் கணத்தில் யாரே ஒருவன் கையில்
பாவை என்பதை அறியவைக்கிறது.
//மன்னனே, நான் மீண்டும் சொல்கிறேன். இது சாதாரணமான வேள்வியே அல்ல. அதர்வம் பாதாளத்தில் உறையும் பிரம்மாண்டமான நாகங்களை துயிலெழுப்பும் குரல் போன்றது. அதில்பிறக்கும் பேரழிவுச்சக்திகளின் கையில் நீயும் உன் எதிரிகளும் ஏன் மானுடகுலமே வெறும் பாவைகளாக வேண்டியிருக்கும். பின்பு மனம் வருந்தி பயனில்லை…அனைத்தையும் மும்முறை எண்ணி இறுதியாக முடிவெடு//
துருபதனுடன் துரோணரை நண்பனாக்கியது எது? நண்பன் வந்து ஒரு பசுகொடு
என்று இரந்தபோது “பிச்சைக்கேள்” என்று சொன்னது எது. உடல் உள்ளம் அனைத்தும் செயல்படாத
நிலை அடைந்து நண்பன் பாதத்தில் தலைப்பட கிடக்க வைத்தது எது? நண்பன் பாதி நாடுகொடுத்து
அனுப்பிய பின்னும் துயிலவிடாமல் செய்து நடை பிணமாக்கியது எது? மீண்டும் நண்பனின் தலையை
எனது பாதத்தில் வைக்கவேண்டும் என்று அதர்வனத்திற்கு நுழைய செய்வது எது? எதுவும் இல்லை.
எதுவும்
இல்லை என்று துருபதன் நினைத்து இருந்தால் இந்த பெரும் நெஞ்சக்கனல்
அணைந்து இருக்கும். நடிகனுக்குள் ஒரு நடிகன் தோன்றி இதை நடித்துக்கொண்டு
இருக்கிறான். அந்த நடிகனின் வழியாக பிரபஞ்சம் தன் நடனத்தை
நடத்திக்கொள்கின்றது.
”துருபதனே, உம் காலடிகளை தொடர்ந்துவரும் நிழல்களை நான் காண்கிறேன். இங்கிருந்து போய்விடும்…” -உபயாஜர்.
அக்னிவேசர் குருகுலத்திற்கு துருபதன் பாடம் கற்க சென்றபோது, துருபதனின்
வயது முதிர்ந்து உள்ளது என்பதால் அக்கினிவேசர் மறுத்து துருபதனை திருப்பியபோது “பிராமணோத்தமரே”
என்று துரோணரின் பாதம் பிடித்தவன் துருபதன். இந்த பாதம் பிடித்தலை மறைக்க மறக்க நண்பன்
என்று வேடம்போட்டான். அந்த வேடத்தைக்கலைக்க, அன்று துரோணரின் காலின் விழுந்த தலையை
நிமிர்த்திக்கொள்ள துரோணரை பிச்சைகேட்டு தொங்க வைக்கிறான். நாடக நடிகன் நடிக்க வந்த
பாத்திரத்தில் இன்னொரு நடிகனாவதால் வந்த பிழை இது.
அன்று துருபதன் தோல்வி அடையக்கூடாது என்று துரோணர் கால்பிடித்து
வில்லாளி ஆனான். வில்லாளி ஆனாதாலேயே இன்று பெரும் தோல்வியை அடைந்தான்.
அகங்காரம் என்னும் நெருப்பு இல்லாமையில் எரிவது இல்லை, எதாவது கிடைத்தால்
அதைப்பற்றிக்கொண்டு எரிகின்றது. அன்று துருபதன் ஆசையில் ஏறி அமர்ந்து எரிந்தது. அதன்
பின் மன்னன் வீரன் என்ற வில்வித்தையில் எறி அமர்ந்து எரிந்தது. இன்று பொருள்மீது எரி
அமர்ந்து எரிகின்றது. துரோணர் பாதி நாட்டையும், செல்வத்தையும் கொடுக்கவில்லை என்றால்
எதைப்பற்றிக்கொண்டு இந்த வஞ்சத்தை பற்றி எரிய வைப்பான். மகாயாஜரை அழைப்பான். சாம்பல்
ஆகும்வரை தீ அணைவதில்லை என்பது எத்தனை உண்மை.
தேவபிரயாகை மலைக் காட்டில் இன்னும் தீ. இன்னும் தீ என்று பெரும்
தீ வளர்த்த துருபதனை ஆச்சர்யம் கலக்க விழி விரியப்பார்த்தேன். தீ வளர்ப்பதில் ஆச்சர்யப்பட
எதுவும் இல்லை. தீ அணைப்பவனைப்பார்த்துதான் ஆச்சரியப்பட வேண்டும்.
கன்னத்தில் அறைந்தவன் கையைப்பிடித்துக்கொண்டு உங்கள் கை வலிக்குமே
என்று கண் கலங்குபவன் கோழையா? அடுத்தவன் தலை தனது பாதத்திற்கு வரவேண்டும் என்று நினைப்பவன்
எல்லாம் எத்தனை பெரிய கோழைகள். கோழைகளின் கோழைத்தனம்
முடிவதே இல்லை. துருபதன் இதைத்தான் சொல்லாமல் சொல்கிறான். இந்த கோழைத்தனத்தைதான் வீரம்
என்று சரித்திரம் சொல்கிறது.
துருபதன்
மட்டும் மல்ல மனிதர்கள் அனைவரும் நடிகனுக்கள் இருக்கும் நடிகன்தான்.
அப்படி நடிக்கத்தொடங்கும்போது முதலில் இழப்பது அறத்தைத்தான். அறம்
வெற்றிடமாகும்போது அந்த இடத்தல் அகங்காரம் வந்து உட்கார்ந்து அறிவை
வழிநடத்துகின்றது. அழிவின் கதவுகள் திறந்துக்கொள்கின்றது.
மனிதன் நடிகனாக இருந்தாலும், நடிகனுக்குள் நடிகனாக இருந்தாலும் திரு.ஜெவின் இந்த வார்த்தைகளை மனதில் பதியம்போடுவது நல்லது.
//அறிவதெல்லாம் நம்முள் சென்று அகங்காரமாகவே மாறுகிறது. அறத்தா ல் வழிநடத்தப்படும் அறிவு மட்டு மே மனிதனுக்கு பயன் தரக்கூடியது …” என்றார்//
நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.