Wednesday, November 26, 2014

மகாபாரத அரசியல் பின்னணி
அன்புள்ள ஜெ

மகாபாரதத்தின் அரசியல் சூழல் மிக விரிவாக வந்துகொண்டிருக்கிறது. அந்த அரசியல் சூழலை புரிந்துகொள்ளாமல் மகாபாரதத்தைச் சரியாக புரிந்துகொள்ள முடியாதென்ற எண்ணம் இருக்கிறது. அதைப்பற்றி சுருக்கமான ஒரு மொத்த வரைவை நீங்கள் அளித்தீர்கள் என்றால் அதை வாசகர்கள் புரிந்துகொள்ளவும் அவ்வப்போது சரிபார்த்துக்கொள்ளவும் உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

சிவராமன்அன்புள்ள சிவராமன்

சரி. ரத்தினச்சுருக்கமாக

சிந்து கங்கை இரு சமவெளிகளும் அடங்கிய நிலம் ஆரியவர்த்தம் எனப்பட்டது .மகாபாரத காலத்துக்கு முன்னரே இது 16 மகாஜனபதங்களாக பிரிக்கப்பட்டது. ஜனபதங்கள் என்றால் பலகுலங்கள் கூடி வாழும் நிலப்பகுதிகள். சமூகங்கள்

இவை 16 நாடுகளாயின. இவற்றை ஆள ஷத்ரிய குலங்கள் உருவாகி வந்தன. மலைவேடர்கள், மீனவர்கள் போன்றவர்களில் இருந்தே இவர்கள் உருவாகி வந்தனர். ஆனால் இவர்களின் அதிகாரம் நிலைநிறுத்தப்படும் பொருட்டு இவர்களுக்குரிய அரச உரிமை என்பது இறைச்சக்திகளால் அருளப்பட்டது என்ற எண்ணம் நிலைநாட்டப்பட்டது. அரசர்கள் சூரியகுலம், சந்திரகுலம் என இரண்டாக பிரிந்து அடையாளப்படுத்தப்பட்டனர். நேரடியாக தெய்வங்களில் இருந்து அவர்களின் வம்ச வரிசை போடப்பட்டது.

16 நாடுகள் காலப்போக்கில் 56 நாடுகளாக ஆயின. அவர்கள் பிற இனக்குழுக்களை வென்று தங்களுக்கு அடிப்படுத்தி பெரியநாடுகளாக ஆகும் இடைவிடாத முயற்சியில் இருந்தன. பழங்குடிகளின் அரசுகள் அசுர நாடுகள், அரக்க நாடுகள் என்றெல்லாம் அடையாளப்படுத்தப்பட்டன.

மகாபாரத காலகட்டத்தில் மேய்ச்சல் நிலங்கள் புதியதாகக் கண்டடையப்பட்டன. யாதவ குலங்கள் பெருகினர். மீனவர்கள் எழுச்சி பெற்று அரசுகளை அமைத்தனர். அவர்களை ஆட்சியாளர்களாக அங்கீகரிக்க ஷத்ரியர்களால் முடியவில்லை, ஏனென்றால் அது அவர்களுக்கு நாடாள்வதற்கு இருந்த தெய்வீக உரிமைக்கு மாறானதாக இருந்தது. ஆகவே அவர்கள் அவ்வாறு உருவாகும் அரசுகளை எதிர்த்தனர்

ஆனால் அவர்களை ஷத்ரியர்களால் எளிதில் வெல்லவும் முடியவில்லை.ஏனென்றால் அந்த புதிய  ‘சூத்திர’ அரசுகள் பல்வேறுவகை அரசியல் கூட்டணிகள் வழியாக தாக்குப்பிடித்தன.

மேலும் கங்கை, சிந்து என்னும் இரு நதிகளின் ஓரங்களில் படகுப்போக்குவரத்தை நம்பி உருவானவை ஷத்ரிய அரசுகள். அவை ஒருவகை ‘நகர அரசுகள்’. கிரேக்க நகரங்கள் போல. ஒரு நகரம் அதைச்சுற்றிய கிராமங்களை ஆண்டுவந்தது.

மகாபாரத காலகட்டத்தில் நதிகளை ஒட்டி பெருகியிருந்த சிறிய ஷத்ரிய அரசுகள் ஆதிக்கத்துக்காக போரிட்டன. அதே சமயம் கடல்வணிகம் வலுவாக உருவாகி வந்தது. கடலோர நகரங்கள், துறைமுகங்கள் வளர்ச்சிபெற்றன. அந்நாடுகள் வலுவான நாடுகளாக ஆயின

ஆக, ஒரு அதிகாரப் பரவலாக்கம் தேவையான சூழல். பழைய ஷத்ரிய அரசுகள் அழிந்து புதிய அரசுகளுக்கு இடம்கொடுத்தே ஆகவேண்டும் என்ற சூழல். அந்த அழிவு ஒரு காட்டுத்தீ போல. பழைய மரங்கள் விழுந்தன. புதிய முளைகள் எழுந்தன

மகாபாரதப்போருக்குப்பின்னரே இந்தியாவில் பேரரசுகள் உருவாக முடிந்தது. அதன்பின்னர் தான் சின்னச்சின்ன அரசுகளின் ஓயாத போர்கள் நிலைத்து உள்நாட்டமைதி உருவாகியது. பழங்குடித்தன்மை கொண்ட தொன்மையான அரசுகளில் இருந்து புதிய பேரரசு அமைப்புகள் உருவாகி வந்தது அதன் வழியாகவே

அதாவது இரு உலகப்போர்களுடன் உலகமெங்கும் முடியாட்சிகள், காலனியாதிக்கம் ஒழிந்து புதிய ஜனநாயக அரசு அமைப்புகள் உருவாகி வந்ததைப்போல

அதை நோக்கியே அனைத்தும் நகர்ந்து கொண்டிருக்கின்றன

இதில் காந்தாரம் ஷத்ரிய அரசு. குந்தி யாதவப்பின்னணி கொண்டவள். அவர்களுக்கிடையே உள்ள முரண்பாட்டின் அடித்தளம் இதுவே. போரில் பெரும்பாலான ஷத்ரியர்கள் துர்யோதனனை ஆதரித்ததும் இதனாலேயே

வென்றது யாதவத்தரப்பு. அது சில நூற்றாண்டுக்காலம் நீடித்திருக்கலாம். அந்தக் காலகட்டத்தில்தான் கிருஷ்ணனை அவர்கள் பெரிய தெய்வமாக ஆக்கினார்கள்.

காந்தாரம் பாலை நிலம். யாதவர் புல்வெளி. இது இரு நிலங்களின் போர். காந்தாரம் புதிய வரிப்பணம் மூலம் உருவாகி வந்த ஆதிக்கம். யாதவர் மேய்ச்சல் மூலம் உருவாகிவந்த புதிய சக்தி.

பழைய அரசுகளில்  ராமன் ஆண்ட அயோத்தி போன்றவை மகாபாரத காலத்தில் வலுவிழந்து சிறிய அரசுகளாக ஆகிவிட்டிருக்கின்றன  . துறைமுக வலிமையால் மகதம் வலுவாக ஆகியது.

இந்த சித்திரத்தை விரிவான நிலக்காட்சிகளின் பின்னணியில் மழைப்பாடல் அளிக்கிறது.
நாடுகள்

அஸ்தினாபுரம் - இன்றைய டெல்லி அருகே இருந்தது

இந்திரபிரஸ்தம் - டெல்லி என்று சொல்லப்படுகிறது

மணிபுரம் - இன்றைய மணிப்பூர்

கோசலம் - இன்றைய அயோத்திக்கு அருகே

காந்தாரம்- இன்றைய காந்தஹார் முதல் [ புருஷபுரம்] பேஷாவர் வரை-

மூலஸ்தானநகரி: இன்றைய மூல்தான். பாகிஸ்தானின்

அங்கநாடு - இன்றைய பிகாரின் பாகல்பூர்

காசி- இன்றையகாசி

மகதம்- இன்றைய பிகாரில் புத்தகயை அருகே உள்ள ராஜகிருக நகரைச் சுற்றி

மதுரா- இன்றைய மதுரா. ஆக்ரா அருகே

மாளவம்- மகாராஷ்டிரம்

ஆசுரம் - இன்றைய ஜார்கண்ட் சத்தீஸ்கர்


கலிங்கம் - இன்றைய ஒரிசா வடகிழக்கு

காமரூபம்: இன்றைய ஒரிசா வின் வடமேற்கு

காம்போஜம்: இன்றைய பலுச்சிஸ்தான்

கூர்ஜரம்- வடக்கே சிந்து முதல் தெற்கே குஜராத்தின் கட்ச் வரை.

துவாரகை - இன்றைய கட்ச் பகுதி. குஜராத்

விதர்பம்- மகாராஷ்டிரத்தின் விந்தியமலையடிவாரப்பகுதி, பூனா வட்டாரம்

வேசரம்- கிருஷ்ணைக்கும் கோதாவரிக்கும் இடையே உள்ள நிலம்

பாஞ்சாலம் - உத்தரப்பிரதேசத்தின் பைரேலி மாவட்டம்

திராவிடம்: கிருஷ்ணைக்கும் தென்பெண்ணைக்கும் நடுவே உள்ள நிலம்

தமிழ்நிலம்: தென்பெண்ணைக்குக் கீழே குமரி முனை வரை - கடல்கொண்ட பழைய குமரி நிலமாக இருக்கலாம்

ந்த விக்கிபீடியா வரைவு மிகவிரிவான சித்திரத்தை அளிக்கிறது பெரும்பாலும் சரியான ஊகங்கள்

மகாபாரதம் -விளையாடுபவர்கள் ஒரு வரைபடம்

மகாபாரதமும் சமணமும்

அத்தியாயங்கள்

காந்தார அரசின் தொடக்கம் - மழைப்பாடல் 12

யாதவர் வரலாறு  மழைப்பாடல் 27 
யாதவர் குல வரலாறு மழைப்பாடல் 29

யாதவர் வரலாறு நீலம் 30

யாதவர் வரலாறு சுருக்கமாக மீண்டும் பிரயாகை 34

பரசுராமனின் கதை
வண்ணக்கடல் 2 1
வண்ணக்கடல் 22
வண்ணக்கடல் 23

பாரத அரசியல் வரலாறு, விருரரின் பார்வையில் சுருக்கமாக

மழைப்பாடல் 3