இனிய ஜெயம்,
கிட்டத்தட்ட முதுகில் வெயில் உறைத்து ஒரு மாதத்துக்கு மேல் ஆகிவிட்டது. தமிழகமெங்கும் பெருமழைக்குள், அல்லது சாரல் மழைக்குள் ஊடாகவே பயணம் செய்ய நேரிடுகிறது. என் ஆயுளில் கடலூரில் முப்பது நாளும் மழையைக் கண்டது இதுவே முதல் முறை. பாகூர், தானூர், வீரானாம் என அத்தனை ஏரிகளும் நிறைந்து கொப்பளிப்பது காணக் காண பரவசம் தரும் அனுபவம். இந்த முறை தீபாவளியை வடநாட்டு நாடோடி குழு ஒன்றுடன் கொண்டாடினோம். வடநாட்டிலிருந்து நாடோடிக் குழு ஒன்று நகரத்தின் மைதானத்தின் ஓரத்தில் தங்கி கயிறு மூலம் கைவினைப் பொருட்கள் செய்து பண்டிகைக்கு விற்கும் தர்க்காலிக சந்தை ஒன்றினை அமைத்திருந்தார்கள். அடர் மழை. நகரமே நீருக்குள். அவர்களின் கூடாரம் எல்லாம் மைதான ஏரியின் ஓரத்தில் அமிழ்ந்து, ஒதுங்க கூரை இன்றி சிரமத்தில் இருந்தனர். நாங்கள் நண்பர்கள் கூடி அவர்களுக்கு இடம் தேர்ந்து, தீபாவளிக்கு முதல் நாள் அவர்களுடன் இனிப்புகள் பகிர்ந்து பண்டிகையை துவங்கினோம். புரியாத பாஷைதான், ஆனால் சந்தோஷம் பகிர அது தடையாக இல்லை. விரலளவு மீன்களை பிடித்து தலையைக் கிள்ளிவிட்டு குழம்பு வைத்து, அக் குழம்பிலே சோற்றையும் வேகவைத்து ஒரு வித்யாசாசமான மணமான கூட்டாஞ்சோறு ஒன்றை அக் குழு மின்னல் வேகத்தில் செய்து எங்களை உபசரித்தனர். நான் சைவம் என்று விளம்ப உணவுக்குள் மீன்களை மட்டும் கண்டுபிடித்து விலக்கி மீண்டும் பரிமாறினார். சுவையோ சுவை. மறுநாள் திருவண்ணா மலை பயணம். நண்பர்கள் சந்திப்பு. விடிய விடிய இலக்கியம், கறி நீக்கிய குழம்புடன் உணவு. நானும் திருமதி வினோத்தும் வராண்டாவில் அமர்ந்து நூற்று என்பது டிகிரி கோணத்தில், ஐமாக்ஸ் முறையில் மழை பொழிவதை வெகு நேரம் லயித்து ரசித்தோம். நண்பர் வினோத் குடும்பத்தை சென்னையில் தரை இறக்கிவிட்டு, கடலூர் திரும்ப எண்ணுகையில் திரும்பிப் பார்த்தேன். மேல் மருவத்தூரில் நின்றிருந்தேன். அடடா இத்தனை ஆண்டில் இதற்குள் நுழைந்ததே இல்லையே என்று எண்ணியவாறு கோவிலுக்குள் நுழைந்தேன். எதோ விசேஷ தினம், சிகப்பு வெள்ளத்தில் சிக்கி தத்தளித்தேன், அம்மாவின் மருந்தே, வேப்பிலைக் கொழுந்தே கோஷம் காதை நிறைத்தது. ஏனோ பக்தர்கள் என்னை விநோதமாக நோக்கியவாறே நகர்ந்தனர். மங்கள வாத்தியங்கள் முழங்க அடிகளார் பிரசன்னம் ஆனார். இளைஞ்சர்கள் அவரை புகைப்படம் எடுத்துத் தள்ள, இளைஞ்சிகள் வரிசையாக காலில் விழ, பேரிளம் பெண்கள் சிலர் குலவை இட, எனக்கு சற்றே சாமி வரும் போல ஒரு உணர்வு, அட அடிகளார் என்னயா பார்க்கிறார்? ஆம் என்னைத்தான் பார்க்கிறார். அடிகளாரின் பார்வையைப் பின்பற்றி பக்தர்கள் சிலரும் என்னைப் பார்த்தனர். பரவசம் எல்லாம் ஓய்ந்து, பேக்கரியில் [என்னை விநோதமாக நோக்கியவாறே மாஸ்டர் தேநீர்போட்டார்] தேநீர் அருந்துகையில், அங்கிருந்த கண்ணாடியில் கண்டேன். முற்றிலும் கருப்பு பேன்ட் சட்டையில் இருந்தேன். டிரஸ் கோடு கொஞ்சம் சரி இல்லை என்று கண்டுகொண்டேன். வீடு வந்தேன். வீடு மொத்தமும் தொடர் மழையால் உயிர் சூழல் பொங்கித் ததும்பி வழிகிறது. முழங்கால் அளவு நீருக்குள் நகர். இரவெல்லாம் தவளைகளின் சிம்பனி. வீட்டுப் பூனைக் குட்டிகள் தங்கள் வாழ்நாளில் முதல் முதலாக தவளைகளைப் பார்ப்பதால், குட்டிகள் தவளைகளை பந்தாடி அவற்றுடன் குதித்து விளையாடுகின்றன. வாசக் கால் மூலை. நேற்று காலியாக இருந்த இடம். இன்று எறும்புப்புற்று. அள்ளினால் ஒரு கிலோ மணல் தேறும். ஒரு எறும்பு ஒரு மணல் துகளை சுமந்து வரும் எனில், எத்தனை எறும்பு,? ஒரு இரவுக்குள் எத்தனை உழைப்பு? அம்மாவுக்கு வியக்கும் பிசினெஸ் எல்லாம் இல்லை. கால் லிட்டர் மண்ணெண்ணையை புற்றில் ஊற்றி அரை மணி நேரத்தில் பெருக்கித் தள்ளி விட்டார்கள். ஆனால் ஒரு விஷயத்தில் அம்மா ரொம்ப கண்டிப்பு. சுற்றிலும் ஊரும் நத்தைகளை அறிந்தோ அறியாமலோ கூட யாரும் மிதித்து விடக் கூடாது. ''அது மாடு அதுக்கு அறிவு கிடையாது. உனக்குத்தான் தினமும் சோறு போடுறேன்ல அப்புறம் அத விட்டுட்டு நத்தைய தூக்குனா அது கொழுப்புதானே?'' ரொம்ப சீரியஸாக தலை சாய்த்துஅம்மாவின் அறிவுரையை செவி மடுத்துக் கொண்டிருந்தது ஒரு காக்கை. பக்கத்து வீட்டு எல்கேஜி பாலகன் ஒரு விளையாட்டு சொல்லித் தந்தான். நிஜமாகவே நன்றாக இருந்தது. அதாகப்பட்டது நத்தைகளின் கூட்டுக்கு நெய்ல்பாலீஷ் வர்ணம் பூசுவது . வீட்டை சுற்றி வண்ணம் மினுக்கும் நத்தைகள். இந்தப் புவியை அழகாக படைக்க இறைவனுக்கு தெரியும். அழகை மேலும் அழகாக்க குழைந்தைகளுக்கு தெரியும். அந்தப் பாலகன் சொல்லித் தந்த மற்றொரு விளையாட்டு எனக்கு கட்டுப்படி ஆகவில்லை. அந்த விளையாட்டானது ஓஓ என்று கூவியபடி நத்தைகளை நச் என்று மிதிக்க வேண்டும். அவை நறுச் மொறிச் என சிதையும் ஒலி எனக்கு முதுகுத் தண்டால் கேட்டது. சற்று முன் கிருஷ்ணஅண்ணனுடன் பேசினேன். துருபதன் துரோணருக்கு,இழைத்தது துரோணர் துருபதனுக்கு செய்தது இரண்டில் எது சற்றே அதிக அநீதி என்று போனது விவாதம். துருபதன் துரோணருக்கு செய்தது துரோகம். பிராமனோத்தமரே என விளித்து நட்ப்பைத் துவங்கியவன், அவரை குலம் கேட்டு நிந்திக்கிறான். துரோணர் துருபதனுக்கு இழைத்தது இணையற்ற அவமானம்.துரோணர் ஆயுளுக்கும் அவமானத்தில் உழல வேண்டும் என்ற திட்டமிடல் எதுவும் துருபதன் வசம் அன்று இல்லை. ஆனால் துரோணர் கொண்டது ஆண்டாண்டுகால வன்மம். இங்கே இந்த ஒரே ஒரு புள்ளியில் துரோணரின் தட்டு தாழுகிறது. நாவலுக்குள்ளேயே ஒரு வரி வருகிறது. அவமதிப்பின் துயரம் அறிந்தவன் ஒரு போதும் அதை பிறருக்கு வழங்க துணிய மாட்டான். இந்த எல்லையில்தான் துரோணர் சரிகிறார். அஸ்வத்தாமன் துரோணரை வெறுக்கப் போகிறான் எனில் அதன் முதல் விதை இங்கே விழுந்து விட்டது. அப்பன் செய்த பாவம் பிள்ளைக்கு எனும் கொச்சையான சொல்வழக்கு உண்டு. அஸ்வத்தாமன் இந்த பாவத்தின் பலனை சுமக்க தயாராகி விடுகிறான். ஒரு வகையில் அஸ்வத்தாமனும் பாவம்தான் மீட்ப்பே இல்லை என்று தெரிந்த பிறகு, செய்யப் போகும் அறப் பிழைகளில் சிறியதென்ன? பெரியதென்ன? அவனுக்கான வாசல்களை தந்தையே அடைத்து விட்டார். கீழ்மையின் சித்திரம் இது எனில் மேன்மையின் சித்திரம் இரு கூர் வாள் இறுதி அத்யாயம். தருமன் இறந்தாலும் சரி, அர்ஜுனன் பீமனைக் கொண்டு பைசாசிக முறைப்படி அரியணையைக் கைப்பற்றுவேன் என்கிறாள் குந்தி. சபையில் அர்ஜுனனும் பீமனும் தருமன் பின் நிற்பது மேன்மை. திருதுராஸ்த்ரர் பெருந்தன்மை மேன்மையின் சிகரம். திருதுராஸ்த்ரர் எத்தனை முறை கட்டி அணைத்தாலும் வாசிக்கையில் பரவசம் கூடிக் கூடியே வருகிறது. பெருந்தன்மைக்கு மிஞ்சிய பேரறம் எதுவும் இல்லை போலும். நேற்று இந்த அத்யாயம் அளித்த உன்மத்தத்தின் தத்தளிப்பு வகுத்துரைக்க இயலா ஒன்று. கால்கள் தன்னியல்பாக நடந்து அலைவாய்க் கரையில் நின்றது.அகத்தின் உணர்சிக் கொந்தளிப்புக்கும் ஒலிகளின் கொதிப்புக்கும்,அலைகளின் நிலையின்மைக்கும் எதோ மௌனத் தொடர்பு இருக்கிறது. சாரல் மழை. கைவிடப்பட்ட துறைமுகம். மனிதர்களே அற்ற நிம்மதி. பாறைகளை வந்து மோதும் அலைகளில் ஏறி வந்து விழும் நண்டுகள். மழை போல் கடந்து செல்லும், கண்ணாடி ரெக்கை கொண்ட பொன்வண்ணத் தும்பிகள். விண்ணும் மண்ணும் மூடிய சாம்பல் வண்ணம். தொடுவானக் கோடு அழிந்து அந்தரத்தில் மிதப்பதுபோல உள மயக்கு அளிக்கும் கப்பல்கள். என்னருகே மாரி வந்து நின்றான். தலையை சொரிந்து சிரித்தான். அவனுக்கு சில்லறைகள் தந்து அனுப்பினேன். திரும்புகையில் கண்டேன் குப்பத்தைத் தவித்து விலகி, சம்பந்தமே இல்லாத தூரத்தில் மாரி அவனே கட்டிக் கொண்ட குடிசை வாசலில் யாரோ ஒரு கிழவி. சில பத்தாண்டுகளாக மாரியை அறிவேன். கடலூர் துறைமுகத்தில் துப்புரவு தொழிலாளி. அரசு சம்பளம் போக தனியாக, செப்டிக் டேன்க் சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்வான். காதல் மணம் புரிந்தான். ஆண் குழந்தை பெற்றான்.நன்கு வளர்த்தான். குடியில் விழுந்தான். எங்கோ பிசக மனைவி விலைமகள் ஆனாள். ஒரு நாள் தகராறு உச்சத்தை எட்ட காதல் மனைவியே மாரியை எண்ணை ஊற்றி கொளுத்த முயல, மாரி சித்தம் பேதலித்தான். மாரியின் வேலை மனைவிக்கு போய் சேர, மாரியையும் மகனையும் கை விட்டு அவள் பிரனுடன் விலகி மறைந்தாள். வருடம் செல்ல பைத்தியமாகத் திரிந்த மாரி, மெல்ல மீண்டான் குப்பைகளைப் பொருக்கி விற்று வயிறு வளர்த்தான். எங்கிருந்தோ இங்கு வந்து இதே குப்பை பொருக்கி வயிறு வளர்க்கும் பெண் ஒருவளைக் கண்டான். இதோ இருவரும் ஒன்றாக வசிக்கின்றனர். குப்பைகள் பொறுக்கியும், தூண்டிலில் சிக்கும் மீன்களை விற்றும் ஜீவனம் நடத்துகின்றனர். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை. அனாதைக் கிழவி ஒருவள் அடைக்கலமாக வந்து சேர்ந்தவள் அந்தக் குழந்தையை கவனித்துக் கொள்கிறாள். ஊருக்கு வெளியே அவர்களின் குடிசை. ரேஷன் கார்டு கிடையாது, கரண்ட் கிடையாது. அந்தக் குடிசைக்குள் எட்டிப் பார்த்தேன். குப்பைக்குள் கண்டடைந்த கடவுளர் படங்கள் எல்லாம் நீக்கமற உள்ளே ஓட்டப் பட்டிருந்தது. மனிதன் காட்டுமிராண்டி. ஆசீர்வதிக்கப்பட்ட காட்டுமிராண்டி. ஆம் அவன் நம்ப கடவுள் உண்டு. இனிய ஜெயம். மாரி தனது மகனை நகரின் மிகச் சிறந்த மெற்றிக் பள்ளியில் படிக்கவைத்தான். அந்த மகன் எங்கே ? யாருக்கும் தெரியாது. கடலூர் மாவட்டத்தில் மொத்த மெற்றிக் பள்ளிகள் நூற்று பதினெட்டு. அதில் இரண்டாயிரத்துப் பதினொன்றில் அங்கீகாரம் ரத்தானவை இருபத்து மூன்று. இந்த இருபத்து மூன்று பள்ளிகளும் நகரின் டாப் மோஸ்ட் பள்ளிகள். இதில் பிள்ளைகள் படிப்பது பெற்றோர்களின் ஸ்டேடஸ் சிம்பல். இப்படி அங்கிகாரம் ரத்தான இந்த இருபத்து மூன்று பள்ளிகளும் இன்றும் இயங்கிக் கொண்டிருக்கிறது. எனது நண்பர் தகவல் பெரும் உரிமை சட்டத்தின் கீழ் மாவட்ட கல்வி அலுவலகத்திடம் கேள்வி ஒன்று கேட்டார். அதற்க்கான பதில். அங்கீகாரம் அற்ற பள்ளிகளில் எழுதப்படும் பத்து பன்னிரண்டு தேர்வுகளின் சான்றிதழ் செல்லாது. ஆக பதினொன்று துவங்கி பத்து பன்னிரண்டாம் தேர்வு எழுதும் மாணவர்களின் எதிர்காலம்? அங்கீகாரம் இல்லாத பள்ளி எனவே சான்றிதல் செல்லாது. அரசே நடத்திய தேர்வு சான்றிதழ் செல்லும். இந்த இரண்டு தீர்ப்பில் ஒன்று வருவதற்குள். எத்தனை மாணவனின் வாழ்வு சிதயுமோ? இதற்க்கு யார் பொறுப்பு. ? இப்படி அங்கீகாரம் ரத்து ஆகி தொடர்ந்து இயங்கும் பள்ளிகளின் ஒன்றின் முதல்வர்தான் கல்விக் களப்பணியாளரும் எழுத்தாளருமான நடராஜன். பாவம் மாரி. இந்தக் கல்வி அமைப்பு பற்றி ஏதும் அறியாதவன். இனிய ஜெயம் 'அறம் செய விரும்பு' என்று கற்பிக்க இன்றைய கல்வி அமைப்புக்கு யோக்யதை இல்லை. |
ஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்