Tuesday, November 11, 2014

காவியும் ராமனும்



அன்புள்ள ஜெமோ!

வெண்முரசு விழாவிற்கு வாழ்த்துக்கள்.தமிழும் நமது இந்திய சமய மரபும் கலக்கும்அனைத்துக்கட்டங்களும் புனிதத்தையும் மீறிய அழகு பெற்றவை,அத்தகைய அழகுப்பெட்டகத்தை செதுக்கி வருகிறீர்கள்.

ஒரு சிறிய வினா.. தேவப்பிரயாகையில் இராமனுக்குக்கோயில் இருந்ததாகக்குறிப்பிடுகிறீர்கள். முதன்முறையாக இராமன் தெய்வ வடிவம் பெறுவதாக (இந்த நாவற்றொடரில்) இங்கு தான் அறிகிறேன் (பிரயாகை அத் 19).

அதிலும் காவி நிறக்கொடியுடன். காவி என்ற நிறமே புத்தமதத்திலிருந்து பெறப்பட்டது என்று எங்கோ படித்த ஞாபகம். முன்பு மழைப்பாடலில் இராமனைப்பகடி செய்து அதை பீஷ்மர் ரசித்த அத்தியாயம் உடனே நினைவுக்கு வந்தது.

பெண்கள் எளிதே கொற்றவையாக வணங்கப்படுகின்றனர் (அம்பை, பூதனை, ராதை)ஆண்கள் தெய்வங்கள் ஆவது கடினம் என்றே தோன்றுகிறது.இந்த இரு(இராமன் தெய்வம், மற்றும் காவி நிறம்) விஷயங்களையும் தெளிவுபடுத்த முடியுமா ?

அன்புடன்,
ஜெய்கணேஷ்.


அன்புள்ள ஜெய்கணேஷ்

புராணக் காலக்கனிப்புப் படி ராமாயணம் மகாபாரதத்துக்கு முந்தைய யுகத்தைச் சார்ந்தது. திரேதாயுகம். மகாபாரதம் துவாபரயுகம்

புறவயமான காலக்கணிப்பின்படிப் பார்த்தாலும்கூட ராமாயணம் நடந்து சில நூற்றாண்டுகள் கடந்தே மகாபாரதம் நடந்தது. மகாபாரதம் முழுக்க ராமனைப்பற்றிய குறிப்புகள் வருகின்றன, தொன்மையானவனாக மூதாதையாகவே ராமன் குறிப்பிடப்படுகின்றான்.

பல குறிப்புகள் தெளிவான வரலாற்றுச்செய்திகளாகவே அளிக்கப்படுகின்றன உதாரணமாக ராமனின் தம்பி சத்ருக்னன் லவணர்களை வென்று மதுரையை அமைத்த கதையை கிருஷ்ணனின் கதையில் வாசித்திருப்பீர்கள்[மழைப்பாடல்] அதன்பின்னர்தான் மதுராவை ஆளும் யாதவ வம்சமே உருவாகிறது

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்பது இந்திய மரபு. ஆகவே மூதாதையரும் முனிவரும் வீரரும் தெய்வங்களாவது தொடர்ந்து நிகழ்ந்து வந்தது. ராமன் விவேகமும் புகழும் மிகுந்த மன்னன் என்றவகையில் தெய்வமாக ஆனது இயல்பானதே.

ஆனால் இந்தியா முழுக்க ராமன் வழிபடப்பட்டிருக்க வாய்ப்பில்லை. அது வைணவம் பெருகிய பின்னர் நிகழ்ந்ததாக இருக்கலாம். தேவப்பிரயாகையின் ராமர், வசிட்டர் ஆலயங்கள் ஐந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டவை, ஆனால் அங்கே  மிகத்தொன்மையான ஆலயம் ஒன்று உள்ளது என்று சொல்லப்படுகிறது

ஆகவே அங்கே ராமன் ஆலயம் இருந்ததாக எழுதினேன். பழைய ஆலயம் மீளக்கட்டப்பட்டது இன்றிருக்கும் ஆலயமாக இருக்கலாம் என்ற கோணத்தில்

காவிக்கொடி மகாபாரதத்திலும் ராமாயணத்திலும் குறிப்பிடப்பட்டதுதான். பகவா என்று சொல்லப்பட்டது அது. அது துறவு, தியாகம் ஆகியவற்றைக் குறிப்பது

இருகாரணங்களால் காவி துறவின் நிறம் ஆகியது. ஒன்று அது மரவுரியின் இயல்பான நிறம். ஆகவே அது துறவிகளின் உடை. துறவின் நிறம். இன்னொரு காரணம் பச்சைநிறம் சூழ்ந்த காடுகளில் குடில்களின்மேல் காவிநிறமான கொடி தெளிவாக நெடுந்தொலைவுக்குத் தெரியும். குருகுலங்கள் அடையாளப்படுத்தப்படவும் ஆலயங்கள் தெரிவதற்கும் அது உதவிகரமானது

பௌத்தமும் இந்துமதமும் துறவு சார்ந்த விஷயங்களில் ஒரே வகை மதிப்பீடுகளை பகிர்ந்துகொண்டவைதான்.

ஜெ

<a href="http://venmurasudiscussions.blogspot.in/">வெண்முரசு பற்றிய அனைத்து கதைகள்</a>