Saturday, November 29, 2014

பிரயாகை-34-தேனீ கூடு


அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

உடல் நலமாக இருக்கும், வாழ்க்கை நலமாக இருக்கும், குடும்பம் நலமாக இருக்கும், காலம் நேரம் மற்றும் சுற்றமும் நட்பும் நலமாக இருக்கும் ஆனாலும் சிலர் சொல்வார்கள் ஏதோ ஒன்று நடந்துவிடடும்போல் உள்ளது என்பார்கள். கேட்பவர்களுக்கு அது கற்பனை என்று தோன்றும் இல்லை என்றால் அது வெறும் சொற்களாக மட்டும் உதிரும். அவர்களிடம் உள்ள அந்த ஏதோ நடக்கும் என்பது சொல்லாக முடியாத இருட்டாக மட்டும் இருக்கும்.

பிரயாகை பாத்திரங்கள் ஒவ்வொருவரின் மனதிலும் இந்த சொல்லாகாத ஏதோ ஒன்று உள்ளது. அது என்ன என்பது வாசகர்களாகிய நமக்கு தெரியும். ஆனால் அது அதுதான் என்பது பாத்திரங்களுக்கு தெரியாது. தெரியாத அதை தெரியாததாகவும், அதே நேரம் அது இல்லாமல் இல்லை என்பதாகவும் பாத்திரங்களை படைத்து வாசகர் உள்ளத்தை களிப்படை வைக்கின்றீர்கள் ஜெ. தேன் அடையில் உள்ள ஈக்கள் எல்லாம் ஒரு உடல்போல தெரியும்,பறக்கும்போதுதான் தனித்தனியாக இருக்கும். அஸ்திரனபுரியின் மன்றில் அனைவரின் எண்ணமும் ஒரே உடல்போலத்தான் இருக்கிறது ஆனால் அவை அனைத்து தனித்தனியாக பறக்க காத்திருக்கும் தேன் ஈக்கள்தான். 
//மனித அகத்தை கணித்தல் வெட்ட வெளியின் தீபம் எந்த திசையில் அசையும் அன்பதை கணிப்பது போன்றது ' –பிரயாகை-33// 

விதுரருக்கு இன்று இந்த வரிகளின் பொருள் பெருகிவருகின்றது.  விதுரர் எல்லா அகங்களையும் கணித்து வைத்து உள்ளார் என்பதும் தெரிகிறது. காலததை இடத்தை கணிக்க முடியாமலும் தவிக்கிறார். எல்லாமும் எழுதி வைத்து நிகழ்வதுபோல இருக்கிறது என்ற விதுரருக்கு, காத்திருக்க காலமோ, காத்திருக்க இடமோ கொடுக்கப்படவும் இல்லை அதனால் விளைவு எதனை நோக்கி செல்லும் என்பதை வாசக நெஞ்சம் ஊதித்து அறிய விடுகின்றீர். இல்லாத அந்த ஒன்று இருக்கு என்பதை மையம் கொண்டு தவிக்கவிடுகின்றீர்.

எதையும் சரியாக பார்க்கும் ஆயிரம் விழிக்கொண்ட  அர்ஜுனன் இதையும் பார்த்துவிடுகின்றான்.எழுதிவைத்து நடத்துபவர் காந்தார இளவரசர்….” என்றான் அர்ஜுனன்-பிரயாகை-33. பார்ப்பதோடு அர்ஜுனன்வேலை முடிந்துவிடுகின்றது. அதை சொல்லாக்க வேண்டியவன் அவன் இல்லை. அவன் சொல்லை நம்புபவன் இல்லை. வில்லை நம்புபவன். இங்கு சொல்லாக்கும் திறன்படைத்த தருமன் தாயின் அகத்தை சொல்லாகி மேலும் பெரும் சிக்கை உண்டாக்கி வைத்துவிட்டான்.  

சகுனி என்ன எழுதி என்ன நடத்துகின்றார் என்ற கேள்வி வருகின்றது. நமக்கே வரும் இந்த கேள்வி மகாஞானியான விதுரருக்கு வராமல் இருக்குமா? கணிகன் மன்றில் இருக்கக்கூடாது என்று அவர் நினைக்கிறார் ஆனால் அவன் அங்கு இருக்கிறான். அவன் அங்கு அவனுக்கு உரிய இடத்தில் அவனக்கு உரிய உடல்மொழியோடு இருக்கிறான். இருட்டில் இருக்கிறான். உடலை மடித்து வைத்ததுபோல் இருக்கிறான். பூநாகம் என்னும் தலைப்புக்கு உருவாமாகி வரும் நாகக்காட்சி.

சகுனி இயக்குனர் முகம் தெரியவேண்டியது இல்லை, ஒளியும் ஓலியும் ஒளிபரப்பட்டால்போதும்.  கண்ணில்லா திருதராஷ்டிரனிடம் உடல் அசைவு மூலம் எந்த சொற்களையும் விதுரர் பாண்டவர்களுக்கு அங்கு கடத்திவிடக்கூடாது என்பதாலும், விதுரரின் ஒவ்வொரு அசைவும் திருதராஷ்டிரனுக்கு எண்ணமாக வேண்டும் என்பதாலும், திருதராஷ்டிரன் எண்ணம் கணிகரின் உள்ளத்தில் சொல்லாகும் என்பதாலும் விதுரரின் இருக்கை திருதராஷ்டிரருக்கு முன்னால் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த  இருக்கை விதுரருக்கு இடராகவும், கணிகனுக்கு சாதகமாகவும் இருக்கும்படி அமைந்து உள்ளது. பொருந்தாத இடம் கொடுக்கப்பட்டு பாண்டவர்கள் அங்கு குழப்பமான உடல் அசைவுகளை காட்டும்படி வைக்கப்பட்டு உள்ளனர். இதுவரை விதுரனின் அருகில் நிற்கும்படி இருந்த பாண்டவர் இன்று வேறு இடத்தில் நிற்கின்றார்கள். 

திருதராஷ்டிரன் பாண்டவர்கள் அங்கு இருப்பதையே காட்டிக்கொள்ளவில்லை. //அறைக்குள் சுவர் ஓரமாகநின்றிருந்த பாண்டவர் மூவரும் குழப்பமான உடலசைவுகளைக் காட்டினர்அவர்களை திருதராஷ்டிரர்அறிந்ததாகவே காட்டிக்கொள்ளவில்லை// பெரும் கதை சொல்லும் துரியோதன் அஸ்தினாபுரியில் பாண்டவர்கள் என்ற ஐந்துபேர் இருப்பதாகவே சொல்லவில்லை. 
//“தனிப்போரில் வெல்லற்கரியவராகிய என் ஆசிரியர் உளம்கலங்கி கண்ணீர் விடுவதைக் கண்டேன்நான் அவரதுகால்களில் முட்களை எடுத்துக்கொண்டிருந்தேன்அப்போது அவர் “இவ்விழிவுடன் மாள்வதே என் விதியோ!” என்றுசொன்னபோது நான் அவர் கைகளைத் தொட்டு “நானிருக்கையில் அது நிகழாது குருநாதரேஅஸ்தினபுரிஇருக்கிறதுநூற்றுவர் தம்பியர் இருக்கிறார்கள்பாரதவர்ஷத்தின் முதல் வில்வீரனாகிய என் நண்பன் கர்ணன்இருக்கிறான் என்றேன்” என்றான் துரியோதனன்//

சகுனி எழுதிவைத்து நடத்துவது இதுதானோ? என்று நினைக்கையில், துரியோதனன் தெரிந்தோ தெரியாமலோ தூதுவந்து சொல்லும் கதையின் நாயகன் ஏகலைவன் பழிவாங்குவது நாடுகடத்தப்பட்ட அத்தைகளுக்காக. வில் எடுத்தது அத்தைகளுக்காக
//மெலிந்து சோர்ந்து கந்தலாடை அணிந்து பசித்து வந்த தன் அத்தையைக் கண்ட ஏகலவ்யன் உளம்கொதித்துஅங்கேயே வில்தூக்கி மதுராவை அழிப்பேன் என்று வஞ்சினம் உரைத்தான்//

‘’அத்தை’’ என்ற இடத்தில் உள்ளம் அசைவின்மையை அடைகின்றது. கண்ணனையும் குந்தியையும் நினைத்து. 

//அவர்களில் ஒருவருக்குக் கூட கம்சரின் கொலைநடத்துக்குத் துணைபோனதன் ஊழ்வினை அது என்றுதோன்றவில்லைதாங்கள் குற்றமற்ற எளியமக்கள் என்றே அவர்கள் உண்மையில் நம்பினார்கள்.”//-அசைவின்மையை அடைந்த அகம் இங்கு அசைகிறது குருசேத்திரத்தை நினைத்து.

கண்ணின் தாய் தேவகியின் அகத்தைப் பார்க்கும்போது மனித அகத்தின் இருட்டின் திண்மை உடைக்கமுடியாத பெரும்பாறையாகி நிற்பதை காணமுடிகின்றது. //'விளங்கமுடியா விருப்புகளாலும் புரிந்துகொள்ளவே முடியாத வெறுப்புகளாலும்நெய்யப்பட்டிருக்கிறது வாழ்க்கை'//

உண்மை எல்லா இடத்திலும் உண்மைதான்.

நன்றி
அன்புடன்
ராமராஜன்மாணிக்கவேல்.