Sunday, November 30, 2014

குணச்சித்திரங்கள்அன்பு ஆசிரியருக்கு,
இதுநாள் வரை தங்கள் கருத்துக்களை, கதை மாந்தர்களின் இயல்புகளை படிக்க படிக்க அப்படியே ஏற்று கொண்டு வந்த மனம், தற்பொழுது சிறிது குழம்பி உள்ளது.
தருமன், விதுரர், கண்ணன், பீமன், அர்ஜுனன், முதலான கதாபாத்திரங்களின் மனநிலைகளும், அவர்களின் உணர்ச்சி வெளிப்பாடுகளும் நான் இதுநாள் வரை அறிந்து வந்ததற்கு அப்படியே எதிர்மறையாக இருப்பதை மனம் சற்று உள்வாங்கிக்கொள்ள அச்சப்படுகிறது!
தருமன் என்றுமே அர்ஜுனன் மற்றும் பீமசெனருக்கு தெய்வத்தின் நிலையில் என்றே அறிந்துவந்த மனம், இன்று தருமனின் ஒவ்வொரு கருத்தையும் மறுத்தும் கேலி செய்தும் பேசும் அர்ஜுனன், பீமனின் உருவகம் ஏற்க்கனவே எனது மனதில்   இருக்கும் உருவங்களை தள்ளிவிட சற்று சிரமப்படுகிறது. குந்தி குறித்து கூட பீமன் விமர்சிக்கும் கணமும், அர்ஜுனன் உள்ளிட்ட ஐவருமே என்றுமே குந்திக்கு அருகாமையில் இல்லை என்பதையும் அறிந்து கொள்ளவே மனம் சற்று கவலையுறுகிறது!
உச்சம் என்னவெனில், விதுரரை கண்ணன் தாக்கி பேசுவது! அவ்விதம் பேசாவிடில், விதுரர் வாதம் செய்து கொண்டே இருப்பார் என்று அறிந்தாலும், அவ்விதம் விதுரரை அவமதிக்க கண்ணன் துணிவான் என்று அறிய மனம் ஒப்ப சற்று சிரமப்படுகிறது.
இது, மகாபாரத கதைமாந்தர்கள் குறித்து நாங்கள் அறிந்து வைத்திருக்கும் அளவு மிகக்குறைவு என்பதால், என்று தெளிவாக தெரிந்தாலும், இதுவரை நாங்கள் எங்கள் மனதில் உருவாக்கி வைத்திருக்கும் மகாபாரத கதாபாத்திரங்களை அப்படியே மாற்ற வேண்டி இருப்பதால் என்னை போன்ற சற்று சாதாரண வாசகர்கள் சற்று சிரமப்படுகிறோம்!

ஆனால் செய்து கொண்டிருக்கின்றோம்! மனதில் ஏற்க்கனவே இருக்கும் அத்துணை கதாபாதிரங்களையும் அழித்து விட்டு புதிதாக பதிந்து கொண்டிருக்கின்றோம் தங்கள் எழுத்தின், உருவகத்தின் வாயிலாக! நன்றிகள்!
தாழ்மையுடன்,
சரவணகுமார்.


அன்புள்ள சரவணக்குமார்,

பொதுவாக நாம் மகாபாரதத்தை பக்திச்சொற்பொழிவின் ஒருவகையாக அறிந்திருப்ப்ம்ம். இளமையில் குழந்தைக்கதையாக கேட்டிருப்போம். அந்த மகாபாரதச் சித்தரிப்புக்கும் வியாசனின் சித்தரிப்புக்கும் நிறையவேறுபாடு உண்டு. 

பக்திக்கதைகளிலும் குழந்தைக்கதைகளிலும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நிலையாக இன்னார் இன்னகுணச்சித்திரம் உடையவர் என்ற சித்தரிப்புடன் காட்டியிருப்பார்கள். அது அந்தவகை கூறுமுறைக்கு அவசியமும் கூட. கதாபாத்திரங்களின் பரிணாமத்தை குழந்தைகள் புரிந்துகொள்ள முடியாது. பக்தியின் ஒற்றைப்படையான உணர்ச்சியே சாத்தியம்

வெண்முரசின் மகாபாரதம் அத்தகைய எளிய சித்தரிப்புகளால் ஆனது அல்ல. பெரும்பாலும் வியாசனின் குணச்சித்தரிப்பை அடிப்படையாகக் கொண்டது. இடைச்செருகல்களின் மேலோட்டமான உணர்ச்சிகள், பக்திப்பெருக்கு ஆகியவற்றை தவிர்த்து மூலக்கதையை விரித்தெடுக்கிறது

வியாச மகாபாரதத்தில் பாண்டவர்கள் நடுவே தெளிவான குணச்சித்திர வேறுபாடும் மோதலும் இருந்துகொண்டே இருக்கிறது. பீமனும் அர்ஜுனனும் தர்மனை கொல்வதற்காக வாளுடன் செல்லும் இடங்களும் மிகக்கடுமையான சொற்களால் பேசிக்கொள்வதும் இருக்கிறது. 

அவர்களின் கதாபாத்திரங்கள் பல்வேறு வாழ்க்கை நிகழ்ச்சிகள் வழியாக மெதுவாக பரிணாமம் கொண்டு செல்வனவாகவே வியாசபாரதத்தில் உள்ளன. அந்தப்பரிணாமத்தைச் சித்தரிக்கவே வெண்முரசு முயல்கிறது. அது நாமறிந்த எளிய மகாபாரதச் சித்தரிப்புக்கு மாறாகவே இருக்கும். அந்த மகாபாரதத்தில் இருந்து இங்கே வந்துதான் ஆகவேண்டும்

கிருஷ்ணனின் கதாபாத்திரம் மகாபாரதத்தில் பலமுகங்கள் கொண்டது. வேதாந்தி, ராஜதந்திரி, விளையாட்டு நிறைந்தவன், சூதாடி அத்துடன் குரூரமானவனும் கூட. பல தருணங்கள் மகாபாரதத்தில் உள்ளன. கடும் சொற்கள் பேசுமிடங்கள். கொல்லும் இடங்கள். கொல்வதற்குத் திட்டமிடும் இடங்கள். 

அப்படி அவன் இருப்பதற்கான அரசியல்- உளவியல் பின்னணியை நோக்கித்தான் வெண்முரசு செல்கிறது. அதை நீலத்திலேயே பார்த்திருக்கலாம்.

இத்தனைச் சிக்கலான கதாபாத்திரத்தை கூர்ந்து கவனித்து அதன் முரண்பாடுகளின் ஒருமை வழியாக புரிந்துகொள்வதே நல்ல வாசகனின் வழி. நாமறிந்த எளிய பக்தி - குழந்தைக்கதை சார்ந்த சித்திரத்தைக் கொண்டு ஒப்பிடுவது அல்ல. 

ஜெ