Monday, November 17, 2014

வெண்முரசு தத்துவங்கள்



அன்புள்ள ஜெ

வெண்முரசு நாவல் முழுக்க தனித்தனியாக வந்துசெல்லும் உலகியல் சிந்தனைகள் மலைப்பை உருவாக்குகின்றன. லோகாயதம் என்ற சிந்தனை அக்காலத்தில் இருந்தது என்று தெரியும். இத்தனை நுட்பமான உலகியல்வாதம் அன்றைக்கு இருந்ததா என்று வியப்பாக இருக்கிறது.

இன்றைய பதிவில் வரும் ஊஷரர் ஒரு அற்புதமான கதாபாத்திரம். பிரம்மாண்டமான பாலைவனத்தின் நடுவே அவர் வாழ்ங்கிறார். கண் எட்டாத காட்சி நிறைந்த இடத்தில் தன் கைவிளக்கின் வெளிச்சத்தில் தெரியும் உலகை மட்டும் பார்த்தால் போதும் என்கிறார். அதுவே கையாளக்கூடிய யதார்த்தம், அதுவே உண்மையில் தேவையானது என்கிறார்

புராதனமான பிராக்மாடிசம் என்று சொல்லலாம். அதைத்தொடர்ந்து அவர் மனிதர்களின் நிலையில்லாம பற்றிச் சொல்வதெல்லாம் இன்றைய சிந்தனைகளுக்கு மிகநெருக்கமானவை. பரவசமூட்டும் வாசிப்பை அவை அளித்தன

தத்துவம் மட்டும் என்றால் சலித்துவிடும். ஒருபக்கம் உத்வேகமான வாழ்க்கைச்சந்தர்ப்பம் மற்றொரு பக்கம் அதிதீவிரமான மெட்டஃபர். இரண்டும் சேர்ந்து தத்துவத்தை நிலைநாட்டி விடுகின்றன

சாய்ராம்

அன்புள்ள சாய்ராம்

வெண்முரசில் வரும் தத்துவங்கள் தொன்மையானவை. அவை நவீன மொழியில் மாற்றப்பட்டுள்ளன. அடிப்படை வாழ்க்கைத்தரிசனங்கள் எல்லாமே பழமையானவையும் கூடத்தானே?

ஜெ