Saturday, November 22, 2014

விழிகளின்மை



இனிய ஜெயம்,

கணிகன் திருதுராஸ்த்ரரை 'கையாள' பயன்படுத்தும் உத்தி துணுக்குற வைத்தது.

மனிதகவனித்தல்  ஆற்றலின் என்பது சதவீதம் கண்களால் செலவு செய்யப்படுகிறது என்கிறார்கள். எனில் விழிகள் அற்ற  திருதுராஸ்த்ரர் நிலை [இத்தகு சூழலில்] பெரும் சிக்கலுக்கு உள்ளானதாக இருக்கிறது.

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் தம்மை  விழியற்றவன் அறிய இயலாது. மேலும் விழி அற்றவன் கேட்கும் ஒலிகள் லேசர் ஒளிக் கற்றைக்கு இணையானவை. ஒளி தடையில் மோதி பிரதிபலிக்கும். லேசர் தடைகளை ஊடுருவும்.

ஆக விழி அற்றவன் என்பதால்தானே 'என்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டீர்கள்' என திருதுராஸ்த்ரர் ஒரு வினா எழுப்பினார் எனில், அது அவ்வாறல்ல என திருதுராஸ்த்ரர் ஒப்புக்கொள்ளும் வண்ணம்   நிகழ்வுகளை  நிறுவ  யாராலும் இயலாது.

பொதுவாக  ஒரு கூட்டத்தில் அதன் மத்தியில் இருந்து நம்மை நோக்கி பேசப் படும் மெல்லிய குரல்களை அதிக கவனம் குவித்து கேட்போம் .இது இயல்பு. விழி அற்றவனுக்கு இந்த இயல்பு இன்னும் நூறு மடங்கு. இதையே கணிகன் சரியாக பயன்படுத்திக் கொள்கிறான்.

சஞ்சயன் அரசனுக்கு விவரிக்கும் புறத்துக்கும், கணிகன் விவரிக்கும் புறத்துக்கும் இடையேதான் எத்தனை வேறுபாடு.

பெரும் ஆலமரத்தை கரையான்கள்  சரிப்பதுபோல  கணிகன் திருதுராஸ்த்ரர் மீது கவிகிறான்.

இனிய ஜெயம்கடந்த சில அத்யாங்களில்  திருதுராஸ்த்ரர் 'வழி நடத்தப்படும்'வகையைக் காணும்போது சரிவை அஞ்சும் யானை போல, உணர்வு நிலையில்  மிக மிக பதட்டமாக இருக்கிறது.
கடலூர் சீனு