Thursday, November 20, 2014

தற்குறிகளா வாசகர்கள்?

அன்பு ஆசிரியருக்கு,
கண்டிப்பாக இந்த மெயில் தேவை இல்லாத ஒன்று என்று நினைப்பீர்கள். இருந்தாலும் பொறுத்துக்கொள்ள முடியாத கோபத்தில் எழுதுகிறேன்.
என்னதான் வேண்டும் இவர்களுக்கு? எதற்கு இந்த பொச்செரிப்பு?
இவர்கள் படித்து கூட பார்க்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. வன்மத்தை தவிர எந்த விசயமும் இருவரின் விமர்சனத்திலும் இல்லை.

தொலைகாட்சியில் எதோ மாயஜால தொடர் போல எடுத்துகொண்டிருக்கும் பாரதத்தின் ஆதார சுருதியாக விளங்கும் ஒரு பெரும் காவியத்தை அதன் சாரத்துடன் வாசகர்களுக்கு தருவது ஒரு தலையாய எழுத்தாளரின் பணி  இல்லையா? அதற்க்கு அவர் தன் வாழ்நாள் முழுவதும் மெனக்கெட்டாலும் அது தகும் இல்லையா? அதற்க்கு சக எழுத்தாளர்கள் செய்ய முடிவது அவரை உற்சாகபடுத்துவது மட்டுமே அல்லவா? 
இந்த மாபெரும் பணியில் உள்ள எழுத்தாளரை, இத்தகைய வெறும் வன்மம் மட்டுமே நிறைந்த விமர்சனங்களால் மனரீதியில் பின்னடைய செய்வது தமிழுக்கே செய்யும் துரோகம்.
வாசகர்கள், வரலாற்று பின்புலத்துடன் கூடியவகையில், காவியங்களை படிக்க எவ்வளவு விரும்புகிறார்கள் என்று இவர்கள் அறியவில்லையா அல்லது அத்தகைய தரமான வாசகர்கள் அவர்களுக்கு அமையவில்லையா?
இந்துத்துவ அரசியல் எல்லாம் இங்கு ஏன் எழுப்பப்படுகின்றது?
நல்ல நண்பர் என்ற வாக்கியம் வேறு..ஒவ்வொரு மகாபாரத கதை மாந்தரின் உருவகமே ஒரு மாபெரும் நாவல்! எல்லா நீதி நெறிகளும், அறம் சார்ந்த அறிவுரைகளும் வெண்முரசிலேயே இருக்கின்றன! உயிர் ஊற்றி ஒருவர் எழுதி கொண்டிருக்கும் காவியத்தை இப்படி எதோ நீயா நானாவில் பேசுவதுபோல் பேசி தள்ளிவிட்டு போக எப்படித்தான் முடிகிறதோ?
வாசகர்கள் ஜெயமோகன் என்பதற்குதான் படிக்கிறார்களா? திரைத்துறை உதாரணம் சொல்லவேண்டும் எனில், கமல் திரைப்படங்கள் கமல் நடித்துள்ளார் என்பதற்காக மட்டுமே பேசப்படுகின்றனவா? நாங்கள் என்ன தற்குறிகளா? வென்முரசை பொறாமையில் விமர்சிக்கும்  ஒரு பக்கத்தை கூட எழுதிவிட மட்டுமல்ல, அதன் பொருளை புரிந்துகொள்ள லாயக்கு இல்லாதவர்கள் என்றே சொல்வேன்.
வெறுமனே படிப்பதில்லை, வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொரு மகாபாரத கதை மாந்தருடன் சேர்ந்து கற்பனை செய்து வாழவே செய்கிறோம் நாங்கள். அது பிடிக்கவில்லையா இவர்களுக்கு? எதற்கு இப்படி நடந்து கொள்கிறார்கள்? எதற்கு இத்தகைய பொய்யான விமர்சனங்கள்?
விட்டு தள்ளுங்கள்!
தாழ்மையுடன்,
சரவணகுமார்.