அன்புள்ள ஜெ,
வெண்முரசு விழாப் படங்கள் பார்த்து மகிழ்ந்தேன். அழகான அரங்கம். ஷண்முகவேலின் பிரம்மாண்டமான படங்கள். இலக்கிய ஆளுமைகள். இலக்கியத்தை மதிக்கும் ஆளுமைகள் என மிகச் சிறப்பாக விழா அமைந்ததில் மிக்க மகிழ்ச்சி. இதற்கு பேருழைப்பு செய்த உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். நீங்கள் கூறியது போல சொந்த செலவில் விழா எடுத்து பிரபலங்கள் மூலம் வெளியிடப்பட்டால் தான் உங்கள் ஆக்கங்கள் இன்னும் சில ஆயிரம் வாசகர்களையாவது சென்றடையும். இதில் உங்களுக்கு ஒரு லாபமும் கிடைக்காது என்பது தமிழ் இலக்கிய சூழலை அறிந்த அனைவரும் எளிதில் உணரக் கூடியதே.
தளத்தில் மனுஷ்யபுத்திரன் மற்றும் ஞாநி விமர்சனங்கள் பார்த்தேன். மனுஷ் வெண்முரசு நாவல் வரிசையையும் மோதி ஆட்சிக்கு வந்ததையும் இணைத்திருப்பது நல்ல நகைச்சுவை.
"இந்த நூற்றாண்டின் மனித வாழ்வின் அவலங்களுக்கும் ஆன்மீக நெருக்கடிகளுக்குமான பதில் பதில் மகாபாரதத்தில் மட்டுமல்ல வேறு எந்த காப்பியத்திலும் இல்லை என்பதுதான் உண்மை. இன்றைய எழுத்தாளன் தனது எலலா பண்பாட்டு வேர்களின் மண்ணையும் உதறிக்கொண்டுதான் சமகாலத்தின் குழம்பிய கனவுகளையும் உடைந்த எதார்ர்த்தங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது." என்று அவர் எழுதுவது அவர் தீவிர இடதுசாரி என்பது மட்டுமில்லாமல் கோஸம்பி கற்காத சராசரி இந்திய இடது சாரி என்பதைத் தான் காட்டுகிறது. லெனினும், ஸ்டாலினும், மாவோவும் தங்கள் பாரம்பரிய, பண்பாட்டு வேர்களைப் பிடுங்கிப் போட்டு புதிய உலகை சிருஷ்டிக்க முயன்றது போல இந்தியாவிலும் எதிர் பார்க்கிறாரோ என்னவோ. நவீன ஐரோப்பிய கலாச்சாரம் கிரேக்க, ரோம பாரம்பரியத்தை சார்ந்தே இருக்கிறது. அரசியல், சமூகவியல், மானுடவியல், மெய்யியல் சம்பத்தப்பட்ட கட்டுரைகளில் கிரேக்க ரோம புராணங்கள், சிந்தனைகள் பரவலாக சுட்டிக் காட்டப்படுவதை காணலாம். கிறித்தவ மெய்யியலும், சிந்தனை களும் பரவலாக தொட்டுச் செல்லப்படும். தன் பாரம்பரியத்தை மறுத்து எழுதும் சிந்தனையாளர் ஒரு சிந்தனையாளரே கிடையாது. அதை ஒரு இலக்கியவாதி செய்வது மன்னிக்கவே முடியாதது.
மனுஷ் மகாபாரதம் இந்திய இலக்கியம் அல்ல, இந்து இலக்கியம் தான் என்று புரிந்து வைத்திருக்கிறார் போலும். ஜாவாவில் மகாபாரத பொம்மலாட்டத்தைப் பேணி வருவது இந்தோனீசிய முஸ்லிம்களே. நம்மை விட அவர்கள் பாரதத்தில் ஈடுபாடு கொண்டவர்களாக இருக்கிறார்கள். நீங்கள் மகாபாரதம் எழுதுவது யாருக்கு பயன்படும் என்று மனுஷ் கேட்பது அவர் இலக்கியத்தை விட்டு விட்டு முற்றிலும் சமூக மற்றும் அரசியல் ஆளுமையாக உருமாறி விட்டாரோ என்று நினைக்க வைக்கிறது. தன்னிடம் புதிய ஆக்கங்களுடன் வரும் இளம் எழுத்தாளர்களிடம் இதையே கேட்பாரோ. பாவம் அவர்கள்.
ஞானி எழுதியிருப்பது தட்டையான விமர்சனம். இருவரும் நீங்கள் எழுதுவதைப் படிப்பதில்லை என்று தெரிகிறது. எனக்கு வெண்முரசு பற்றி விமர்சனங்கள் உண்டு. இன்னமும் முக்கிய கதை மாந்தர்களிடையே அமைந்த இணக்கு பிணக்குகள் ஆழமாக அமையவில்லை என்று நான் உணர்கிறேன். பாண்டவ கவுரவ முரண் வலுவாக என் மனதில் பதியவில்லை. இந்திய தத்துவ சிந்தனைகள் அனைத்தையும் பரவலாக நீங்கள் தூவியிருப்பது சரியாக ஒட்டாமல் நாவலின் ஓட்டத்தை மட்டுப்படுத்துகிறது என்றும் நான் நினைக்கிறேன். பீஷ்மர், அம்பை, பாண்டு, திருதிராஷ்டிரர் தவிர்த்து பின் வந்த கதாபாத்திரங்களின் ஆளுமைகள் பிரகாசிக்கவில்லை. இது என் ஆரம்ப விமர்சனங்கள் தான். இன்னும் சில நாவல்கள் தாண்டினால் என் பார்வை கட்டாயம் மாறக்கூடும். மகத்தான ஒரு ஆக்கத்தை தொடர்ந்து எழுதி தினமும் வெளியிட்டு அதன் விமர்சனங்களையும் எதிர்கொண்டு பதிலளித்து செல்லும் ஆசிரியர் உலகிலேயே நீங்கள் ஒருத்தர் தான் இருக்க முடியும். உங்கள் படைப்பாக்கத்தையும் செயலூக்கத்தையும் பற்றி எந்த கருத்தும் இல்லாமல் சும்மா விமர்சனம் செய்பவர்களை சிறிதளவு கூட கண்டு கொள்ள மாட்டார்கள் இலக்கிய வாசகர்கள்.
ஞானி "நாற்பதுகளிலும் ஐம்பதுகளிலும் தமிழ்ப் புலவர்கள் சிலரால் பின்பற்றப்பட்டு காலாவதியாகிப் போன ஒரு இலக்கிய உரைநடையை அவர் மீட்டுருவாக்கம் செய்ய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறார்." என்று கூறியிருப்பதற்கு அவர் தான் வருத்தப்பட வேண்டும். சாரு நிவேதிதாவே நீலம் மொழியைப் பற்றி சிலாகித்து எழுதியிருந்தார். வெண்முரசு மூலமாக, குறிப்பாக நீலத்தில் தமிழ் மொழியே புது அவதாரமெடுத்துள்ளது என்பது தான் உண்மை. பாரதி, சுஜாதா வழியாக நவீன தமிழிலக்கிய மொழி மாறியது போல உங்கள் எழுத்து வழியாக கண் முன்னே தமிழ் மாறிக் கொண்டிருப்பதை வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்கிறேன். உங்கள் மொழி மிக நவீனமாக இருக்கிறது. அதே சமயம் உங்கள் மொழியின் வேர்கள் சங்க காலம் வரை நீண்ட தமிழிலக்கிய அடிமண்ணில் ஆழமாக வேரூன்றி கம்பீரமாக எழுந்து நிற்கிறது. நீலம் வாசிக்கும் போது போது இரண்டாயிரம் வருடங்கள் தமிழ் அடைந்த மாற்றம் எனக்குத் தெளிவாக புலன் படுகிறது. வரும் காலங்களில் தமிழிலக்கியத்தில் உங்கள் மொழி பெரும் பாதிப்பை ஏற்படுத்தப் போகிறது என்பது தான் உண்மை. இனி ஜெயமோகன் தமிழ் என்றே இது அறியப் படும்.புதிதாக எழுத வருபவர்கள் உங்கள் மொழியின் பாதிப்பில்லாமல் தமிழில் எழுதவே முடியாது.
கடைசியில் ஞாநியும் "அவரிடம் இருக்கும் படைப்பாற்றலை, இந்த வெண்முரசு எழுத்துப் பணி வீணடிக்கிறது என்பதே என் வருத்தம்." என்று எழுதுவது மிகவும் சலிப்படைய செய்கிறது. இதற்கெல்லாம் என்ன தான் பதிலளிக்க முடியும். உங்கள் வாசகர்களை ரசிகர் மன்றம் என்று கூறுகிறார். தமிழ் ஹீரோ தன் ரசிகர்களுக்கு படமெடுப்பது போல நீங்கள் எழுதுவதாக கூறி உங்களையும் எங்களையும் சேர்த்து அவமானப் படுத்தி விட்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறார். பரிதாபமாக இருக்கிறது. முதன் முதலில் ஒரு இலக்கியகர்த்தா தமிழில் முன்னை விட பரவலாக வாசிக்கப்படுகிறார் விமர்சிக்கப்படுகிறார் என்பது தான் இந்த விமர்சகர்களை அதிருப்தி கொள்ளச் செய்கிறது. அதனால் தான் படிக்காமலேயே விமர்சனம் செய்கிறார்கள்.
அன்புடன்
சிவா