அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.
மரம் மலர்வதால், கனிதலால் காயம் படுகின்றது அதற்காக
மரம் மலராமலோ கனியாமலோ இருப்பதில்லை குறிப்பாக காயம் படுத்துபவர்களுக்காகவே மரம் மலர்கிறது
கனிகிறது. அது மரத்தின் தன்னறம். நல்லதை எழுதுவதால்
நல்லதை எழுதாதவர்களால் காயம்படும் மனிதர் நீங்கள். நல்லதை எழுதாதவர்களுக்கும் நல்லதை
எழுதும் எழுத்து உங்களுடையது. உங்கள் தன்னறம் அது.
தன்னறம் என்பதை அறிந்து இருந்தாலும், அதன் பொருளை
அறிந்தது உங்கள் எழுத்தின் மூலம்தான்.
நானும் உங்களை என்பங்கிற்கு கொஞ்சம் காயப்படுத்தினால்
என்ன? வசைப்பாடினால் என்ன? என்று தோன்றியது. எல்லாம் பொறாமை, அங்காரம், எழுதியே எங்களை
கொல்லும் உங்களை வசைப்பாடாமல் ஏன் வாழ்த்த வேண்டும்?..))
நான் உங்களை வசைப்பாட நினைத்தது எங்கள் உயிர் எடுக்கின்றீர்கள்
என்பதற்காக இல்லை. படித்து சாகவேண்டும், படித்தபடியே
சாகவேண்டும் என்று பேராசை இருக்கிறது. ஆசை மட்டும்தான் இருக்கிறது. செயல் எப்போது வரும்
என்று பார்ப்போம்.
துருபதனை ஏன் இந்தப்பாடு படுத்துகின்றீர்கள்? எழுத
தெரியும் என்பதற்காக எப்படி வேண்டும் என்றாலும் எழுதுவீர்களா? உங்கள் காயங்களை, உங்கள்
சுயநலன்களை ஒரு பாத்திரத்தின்மேல் ஏற்றி அந்தப் பாத்திரத்தின் காயங்களில் வடியும் குருதியை.
சீழை மற்றும் அவன் சீறுநீரை எங்களை முகர்ந்துப்பார்த்து ருசிப்பார்க்க சொல்வீர்களா?
இதனால் எழுத்தாளனாகிய உங்களுக்கும், வாசகனாகிய எனக்கும் என்னபயன்? கேள்வியே அபத்தம்தான். அபத்தம்தானே வசையின் ஆரம்பம்.
இப்படி உங்கள் சுயநலத்தை எழுதுவது அபத்தம்,
சுயநலம், கொடூரம் இல்லையா? இந்த கொடூரத்தை உங்கள் கற்பனையின் வண்ணத்துணியால் மறைத்துக்கொண்டு
நடிக்கின்றீர்கள் என்று வசைப்பாட நினைத்தேன்.
இயற்கை முரண்பட்டது. எழுத்தும் முரண்பட்டது. முரணை
அறியாமல் முரணின்மையை அறியமுடியாது என்பதை உங்கள் எழுத்துதான் காட்டிக்கொடுத்தது. பெரிய
எழுத்து பிரம்மாக்களின் எழுத்துகளில் அதை உணர்ந்தாலும், அதன் உச்சியல் ஏறும்போது தடுமாறி
விழுந்துவிடுவேன். அதனால் அந்த உயரம் சிலநேரத்தில் பிரமிப்பில் தள்ளி ஓதுங்கிப்போக
வைத்துவிடும். உங்கள் எழுத்து எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும், எவ்வளவு பிரமிப்பில்
ஆழ்தினாலும் அந்த அந்த உயரத்திற்கு தகுந்த மாதரி, ஹெலிக்காப்டர் லேண்டிங் தளம்போல்
என்னை நிறுத்தி விழுந்துவிடாமல் செய்கின்றது. உச்சமும் எளிமையும் கலந்து வாசகனை தூக்கி
சென்று நிறுத்துவதற்கான எழுத்து உங்களுடையது.
மீண்டும் வசைக்கு வந்துவிடுவோம். பிரயாகை-18ப்படித்தபோதுதான்
வசைப்பாடவேண்டும் என்று நினைத்தமனம் வாழ்த்தவேண்டும் என்று நினைத்தது. நிறைவு அடையும்
வரை குறைகுடம் சத்தம்போடும் என்பது இதுதானா?
வெறும் குடங்களை நிறைகுடங்களாக்க நீங்கள் முயற்சி
செய்கின்றீர்கள். அவை உங்களுக்குள் விழுந்து தண்ணீர் முகந்துக்கொண்டு இருக்கும்போது
அவைகள் நிறைவு அடைவதற்காக தங்கள் சத்தங்களை(வசைகளை) உங்கள்மீதுதான் அவைகள் கொட்டிக்கொண்டு
இருக்கும் என்று அறிகின்றேன்.
குடம் சப்தத்தை குளத்தில் நிரப்புகிறது
குளம் தண்ணீரை குடத்தில் நிரப்புகிறது
குளத்தை அழுக்காக்க
சப்தம் குளத்தில் விழுகிறது
விழுந்தது கேட்டது
இருப்பிடம் எது?
குடமும் தேடிக்களைக்கிறது
சப்தம் வெளுத்துவிட்டது
இன்னும் சப்தத்தோடு வரும் குடத்திற்காக
குளம் குளிர்ந்தே இருக்கிறது
குடத்தில் விழுந்த நீரை குடம்குடிக்கவில்லை என்று
சொன்னாலும்
குடம் சுத்தமானதை குடம் சொல்லாவிட்டாலும்
குடமும் அறியும்
குடம் சுத்தமானதை.
நீங்கள் இதை அறிந்து இருக்கிறீர்கள். உங்கள் அறிதல்
உங்களை அதன் உயரத்திற்கு அழைத்துச்செல்லும். வெண்முரசு சிறகாகும். அந்த சிறகின் காற்றில்
எங்குள் வியர்வைகள் உலர்கின்றன. மகிழ்ச்சி.
பிரயாகை-18ற்கு வருகின்றேன்.
துருபதனின் உடல்காயம் அதற்கு அவன் எடுத்துக்கொள்ளும் மருத்துவமுறை. உடம்புபடும் பாடு என்று ஒரு கதையாசிரியனாய்
நுணுக்கமாக எழுதி கதையை உயிர்பெற வைத்துவிட்டீர்.
துருபதனின் உள்ளம்பாடும் பாடு, அதனால் அவன் வாழ்க்கை
முறை மாறி ஒரு நடைபிணமாய் வாழும் வெளியை விளக்கிக்காட்டி ஒரு தேர்ந்த எழுத்தளனாய் நுட்பத்தில்
உயர்ந்து நிற்கின்றீர்கள்.
வெண்முரசு என்ற இந்த கதைக்கு ஜெயமோகன் என்ற ஆசிரியரின்
இந்த பங்கு பெரிது என்றும் இதுவே போதும் என்றே நினைக்கின்றேன்.
ஜெயமோகன் என்ற ஞானியும், அந்த ஞானிக்குள் இருக்கும்
கதையாசிரியனும் இது போதாது என்று நினைப்பதை கண்டு பிரமிக்கின்றேன். அந்த ஞானகதையாசிரியனால்தான்
அத்தனை அடியாழத்திற்கு சென்ற ஒரு கதாப்பாத்திரத்தை அவனுக்கு உரிய பெரும் இடத்திற்கு
தூக்கி வரமுடியும். இனி எழவே முடியாத பெரும் அழத்தில் அழுத்தத்தில் கொண்டு சென்று அழுத்தி
வைக்கும் துருபதனை அதன் உச்சிக்கு எப்படி தூக்கிவருவீர் என்று தவித்தேன். அந்த பாத்திரத்தை
கைமீறிய ஆழத்தில் போட்டுவிட்டாரே என்று முகம் திரும்பிக்கொண்டுவிட நினத்தேன். அந்த
ஆழம் ஜெயமோகனின் ஞானக்கைகளுக்கு ஒரு சாண்கூட இல்லை என்று காட்டிவிடுகின்றீர்.
சுவாமி விவேகானந்தர். கடைசிக்கீழ்நிலைக்கு சென்றாலும்
அதற்குமேல் கீழ்நிலைக்கு செல்லமுடியாத நிலையில் மேலேவந்தே ஆகவேண்டும் என்று சொல்கின்றார்.
கந்தபுரணாத்தில் தேவர்களை சிறைப்பிடித்த பானுகோபன்
அமராவதி நகரத்தை அழித்து கேட்டதை எல்லாம் தரும்
கற்பகமரத்தையும் தீவைத்து எரித்து கரியாக்கிவிடுவான்
என்று ஒரு காட்சி உள்ளது.
சூரபதுமனை
வென்று மயிலாகவும். சேவற்கொடியகவும் கொண்ட
கந்தபெருமான் ஞானபண்டிதன் தேவர்களை சிறைமீட்டு அமரவதி நகரையும் எழுப்பித்து
தருவான்
என்ற காட்சியில். கரியான கற்பகதோட்டத்தையும், உயிர்பெற வைத்து தந்தார்
என்றும் சொல்வார்கள்.
அமராவதி நகரத்தை முருகபெருமான் உருவாக்கித்தந்தார் என்பது அவர் கருணைக்கு
முன் பெரிதில்லை. புதிதாக கற்பமரம் வைத்து தோட்டம் உண்டாக்கி தந்தார்
என்பதும் பெரிதில்லை. கரியான மரத்தை உயிராக்கி தந்தார் என்பதைப்படித்தபோது
சிலிர்த்தேன்.
காரணம் எது தனது கடைசி நிலைக்கு சென்று வாழ்விழந்து நிற்கின்றதோ அதற்கு
வாழ்வின் மேன்மை
நிலைக்கிடைக்கும்படி செய்தல் என்பதுதான் கருணையின் உச்சம். கருணைகூர்
முகங்கள் ஆறும்
என்பார் கச்சியப்பர். கருணைகூர் முகங்கள் ஆறும் வாழ்க!
துருபதன் ஆன்மா கரியாகிவிட்டது. அது உடைந்து உடைந்து
உதிர்ந்து நீறாகி அழியவேண்டியதுதான் பாக்கி. அந்த நிலையில் துருவாசரின் ஞானம் வெளிப்படும்
இடம். அந்த திருவடி கடாச்சம். நண்பன் பாதத்தில் பட்டு எரிந்த தலையை, ஆன்மாவை துருவாசர்
என்னும் ஞானபண்டிதர் பாதம்பட்டு துளிர்த்து எழும்படி செய்தார் என்று எழுதி கதையை காட்டிய
இடத்தில் சிலிர்க்கின்றேன்.
துருபதன் உடல் பட்ட காயம், மனம் பட்ட காயம் இரண்டுக்கும்
இடையில் உள்ளது துரோணரின் துரோகம் இல்லை. துருபதனின் அகங்காரம் என்பதை காட்டும் இடத்தில்
அறம் தனது அசைவின்மையைக்காட்டுகின்றது. முரண்கள் தனது முரணின்மையைக்காட்டுகின்றது.
இருமைகளாய் அசைந்த துருபதன் வாழ்க்கை மும்மையை கண்டமைகின்றது.
//“அகங்காரமே மிகப்பெரிய பாவம். அது அழியட்டும். அங்குள்ள படித்துறையில் சமஸ்தாபராதபூசை செய். நீ உன் அகங்காரத்தால் துரோணருக்கு இழைத்த பிழைக்கு கழுவாய்தேடு!”
துருபதன் அடிவாங்கியவன் போல நிமிர்ந்து ஏதோ சொல்ல வாயெடுக்க
“அவர் உனக்கிழைத்த பிழைக்கும் உனக்கும் தொடர்பில்லை.
அது அவர் தீர்த்தாகவேண்டிய கடன்.
நீ தீர்க்கவேண்டிய கடன் நீ இழைத்த பிழை மட்டுமே//
இதுவரை இரண்டு பக்கமும் ஆடிக்கொண்டு
இருந்த தராசுமுள் அசைய மறுக்கும் அறவெளி இது.
துர்வாசரின் வாய்மொழி மூலம் நடைமுறை
வாழ்க்கைக்கு வாய்மைமொழியை ஆசிரியர் கொடை அளிக்கின்றார். அந்த ஒரு சிறு நெல்லிக்கனியை
நமக்கு கொடை அளிக்க இந்த ஜெயமோகன் என்னும் அதியமான் தேடிஅலைந்த நெல்லிமரக்காடு எத்தனை
பெரியது.
எனது
வெண்முரசு வாழ்த்து செய்தியை உங்கள் தளத்தில் வெளிவந்ததைப் பார்த்து
மகிழ்ச்சி அடைந்தேன் நன்றி. நண்பர் திரு.அருட்செல்வ பேரரசன் தனது
முழுமகாபாரதம் தளத்தில் இணைப்பு தந்து உள்ளார் இரண்டையும் பார்த்தபோதுதான்
என் பேச்சி எனக்கே பிடித்தது. என் பேச்சை நானே கேட்பது ஒரு பயமாகவே
இருப்பதை உணர்ந்தேன். நண்பர்கள் கேட்டார்கள் என்றதை அறிந்தபோதுதான் எனது
வார்த்தைகள் என்னை விட்டு இறங்கியதுபோல் கனம் குறைந்தேன். நீங்கள்
சொல்வதுபோல //பிரம்மன்
அனைத்து மிருகங்களையும் படைத்தபின் அவற்றை கூர்ந்து
நோக்கிக்கொண்டிருந்தார். அவர் நெஞ்சில் ஒரு நகைப்பு எழுந்தது. சிவனும்
விஷ்ணுவும்கூட புரிந்துகொள்ள முடியாத ஒரு பிறவியைப்படைக்க எண்ணினார்.
அவர்கள் யுகயுகமாக அப்பிறவியுடன் ஆடி சலிக்கவேண்டும். அப்பிறவியை தாங்களும்
அடைந்தாலாவது அதைப்புரிந்துகொள்ளமுடியுமா என்று முயலவேண்டும். அப்போதும்
புரிந்துகொள்ள முடியாமல் பிரம்மனை எண்ணி வியக்கவேண்டும்.”// -பிரயாகை-11
நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.
|
ஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்