Thursday, November 27, 2014

கிருஷ்ணனின் குருவி




அன்புள்ள ஜெ,

கண்ணன் வந்தே விட்டான். நீங்கள் முன்பு சொன்ன அதே தருணம். தன் குடிகளுக்காக உதவி கேட்டு. வெண்முரசில் அவனுடைய முதல் சொல் என்னவாக இருக்கப் போகிறது என்று ஆர்வத்துடன் இருந்தேன். “சிட்டுக்குருவிதானே? அது உள்ளே பறந்தால் என்ன?”, என்று சிட்டுக்குருவியில் இருந்து துவங்குகிறான். ஏன்?


வெண்முரசு நாவல் வரிசையில் நீலத்துக்குப் பிறகு சிட்டுக்குருவி வரும் இரண்டாவது இடம் இது. சிட்டுக்குருவி என்பது மானுட மனதின் அற உணர்ச்சியின் குறியீடாகவே வருகிறது. அற உணர்வு என்பது குற்ற உணர்வின் உன்னதமாக்கப் பட்ட வடிவம் தானே!!. நீலம் நாவலில் மொத்த மதுராவும் மதுக் களிப்பில், தன் குழவிகளின் குருதியில் தானே குளித்துக் கொண்டிருந்த போது தனிமையிலிருக்கும் கம்சனிடம் வருகிறது ஓர் நீலக் குருவி. அதுவும் அவனுக்கு முதலில் எரிச்சலைக் கொடுக்கிறது. பின்பு தன் செயலையே ஓர் யோகமாக மாற்றி கண்ணனை மட்டுமே நினைக்கும் ஒருவனாக கம்சனை மாற்றுகிறது. ஆம். அக்குருவியின் வரவுக்குப் பிறகு கம்சன் கண்ணனைக் கொல்ல மட்டுமே ஆள் அனுப்புகிறான். கண்ணனை மட்டும் நினைப்பவனாக ஆகிறான். அவன் அக்குருவியை அறிகிறான். தன்னையே அறிகிறான்.


இங்கு தருமனின் மன்று சூழ் அறைக்குள்ளும் ஓர் குருவி வருகிறது. அது தருமனின் குற்ற உணர்வு தான். அக்குருவி பலநாட்கள் அவனை வதைப்பதாக சொல்கிறான். இங்கும் குருவி தருமனின் குற்ற உணர்வாகத் தான் வருகிறது. குற்ற உணர்வில் வாடுபவர்கள் செய்பவை என்ன?


1. அவ்வுணர்வு தமக்கு இல்லை என்று கடந்து போக முயல்வது - குருவியை தருமன் புறக்கணித்திருக்கிறான். அதனால் தான் அது அவ்வறைக்குள் கூடும் கட்டி, முட்டையையும் இட்டிருக்கிறது.


2. அது முடியாத போது, அவ்வுணர்வை வெல்வதற்கான நியாயங்களைத் தேடுவது. அந்த நியாயங்களைக் கண்டறிந்து அவ்வுணர்வை நீர்க்கச் செய்வது.இங்கே தருமன் தன் வேலையாட்கள் மூலம் செய்வது அதைத் தான்.


ஆனால் குற்ற உணர்வு என்பது நமது தர்க்க புத்தியிலிருந்து வருவதில்லை. அது நம் நனவிலியிலிருந்து வருவது. எனவே எத்தனை நியாயங்களைக் கொண்டு துரத்தினாலும், எங்கோ திறந்திருக்கும் பின்புற வாசல் வழியாக அது உள்ளே வந்துவிடத் தான் செய்யும். குற்ற உணர்வு பின்பு சுய வெறுப்பாகவும், அதை வெல்ல நினைத்துப் பார்க்க முடியாத சமரசங்களுக்கும் தான் இட்டு செல்லும். 


அதை வெல்ல ஒரே வழி, அதை அதன் போக்கில் சென்று அது வேண்டுவதைக் கொடுத்து ஓர் ஓரமாகவைப்பது தான். கண்ணன் அதைத் தான் செய்யச் சொல்கிறான். கொஞ்சம் கொஞ்சமாக அதன் கூட்டை கூரை நோக்கி கொண்டு சென்று அறைக்குள் வராதவாறு செய்யச் சொல்கிறான். அவ்வாறு சொல்வதற்கு முன் கிருஷ்ணன் கேட்கும் கேள்வி நுட்பமானது. "இந்த திரைசீலையை புதிதாக அமைத்தீர்களா?'. தருமன் கிருஷ்ணன் வருவதற்கு முன் தன் தம்பியரிடம், அந்த குருவி அங்கு பல நாட்கள் வருவதாக சொல்கிறான். ஆனால் கிருஷ்ணன் அவனாகவே அதை உய்த்து உணர்கிறான். அக்குருவி மீண்டும் மீண்டும் வருவதைப் பார்த்தவுடனே அது அவ்வறைக்கு பழக்கமான குருவி என்பதையும், அதன் வழக்கமான இடத்தில் வேறு ஏதோ ஓர் புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதையும் எளிதாக உணர்ந்து கொள்கிறான்.


குந்தியின் தலையில் சௌவீர நாட்டின் மணிமுடியை வைத்தது, விதுரர் காத்திருந்த போதும் தாயை மீறி சென்று காணாதது, திருதராஷ்டிரரைப் பார்த்தவுடன் அவரிடம் பேசாமல் சகுனியின் வார்த்தைகளுக்குப் பதில் சொல்லத் துவங்கியது என தருமன் கடந்த சில நாட்களாகவே சில தவறுகளைச் செய்து இருக்கிறான். அவைகளும் அவனுள் குற்ற உணர்வை எழுப்பியிருக்கும். ஆனால் அவன் அதனோடே வாழப் பழகி இருப்பான். அந்த உணர்வோடு ஏதேனும் புதிதாக ஓர் தவறு, அதுவும் இது வரை செய்த தவறுகளை விடவும் பெரிய தவறு ஒன்று நிகழ்ந்தால் அதனால் உருவாகும் குற்ற உணர்வு இன்னும் அதிகமாக சஞ்சலப்படுத்தும். அந்த புதிய திரைச்சீலை அதைத் தான் குறிக்கிறது. ஆம்,. மொத்தம் நான்கு முட்டைகள்.


அந்த குருவிக்கு கிருஷ்ணன் சொன்ன அதே தீர்வு தருமனின் இப்போதைய இக்கட்டுக்கும் பொருந்துகிறது தானே. துரியோதனன் தருமனிடம் ஒரு நூற்றுவர் படையையாவது தரும்படி தான் கேட்கிறான். தருமன் சொல் தேறாது மொழிந்து ஓர் பேரிடைவெளியை உருவாக்கி விடுகிறான். இப்போது கிருஷ்ணன் கேட்பது அத்தகைய ஓர் படை தான். ஆனால் அது தாக்குவதற்காக அல்ல. யாதவர்களைத் தற்காத்துக் கொள்வதற்காக. இப்போதும் கூட ஒன்றும் கேட்டுப் போகவில்லை. தருமன் சென்று துரியனிடம் அவன் கேட்டவாறே படை அளிப்பதாகவும், ஆனால் அது யதார்வர்களின் காவல் படையாக இருக்குமென்றும் சொல்லலாம். அந்தக் குருவியை இவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக கூட்டை நகர்த்திச் சென்று மறக்க வைக்கலாம். ஆனால் தருமன் அதைக் கேட்கப் போவதில்லை. 


இத்தகைய தருணங்களில் மானிடர் என்ன செய்வர்? அந்த உணர்விலிருந்து தப்பித்து வெளியே ஓடுவர். இங்கே தருமனும் அதைத்தான் செய்கிறான். வேறு ஓர் அறைக்கு தருமனை கிருஷ்ணன் அழைக்கிறான். எளிமையாகத் தீர்ந்திருக்க வேண்டிய சிக்கல், சரியான முடிவெடுக்காமையால் தானிருக்கும் இடத்தை விட்டே வெளியேற வைக்கிறது. இப்படித் தான் தருமன் இந்திரபிரஸ்தம் போகிறான், வனவாசம் போகிறான். இறுதியில் வேறு வழியின்றி போரிடுகிறான். அந்த கடைசி முடிவை இன்றே பீமன் சொல்கிறான், "மிகச்சிறிய பறவை. மூத்தவரே. அதைவிட அக்குருவியை தண்டிப்பதல்லவா எளிது". 


"சிட்டுக்குருவிதானே? அது உள்ளே பறந்தால் என்ன?", என்று கிருஷ்ணன் கேட்பதன் மூலம் அக்குருவியை அறியச் சொல்கிறான். அதன் மூலமே தனக்கான தீர்வை தேறும் படி குறிப்புணர்த்துகிறான். குருவியை வைத்து இனி வரும் பாரதத்தையே சொல்லிவிட்டீர்கள் ஜெ. இங்கும் கிருஷ்ணன் தான் வழிநடத்துகிறான். ஆனால் தருமன் தானே முடிவெடுத்ததாக எண்ணுகிறான்!!!

அன்புடன்,
அருணாச்சலம், நெதர்லாந்து.