அன்புள்ள திரு.ஜெ
வணக்கம்.
அன்னை திரௌபதியை
தெய்வத்திருவுருவாய் படைத்தமைக்காக முதலில் எனது வணக்கத்தை
தெரிவித்துக்கொள்கின்றேன்.
திரௌபதி எங்கு
தெய்வீகமாய் படைக்கப்பட்டு உள்ளாள் என்றால்? அது அவர் அவரும் உணரும் தருணம்தான்.
நான் தெய்வப்பிறவியாய் உணர்கின்றேன். திரௌபதியின் கால்சிலம்பொலி துருபதனுக்கு
மந்திரம்போல் இருப்பதில் உணர்கின்றேன். அவள் அமர்ந்திருக்கும் அழகில்
உணர்கின்றேன். //அவள் அடை சிலையின்
ஆடைபோல் அவள் மேலாடை எப்போதும் உடலில் வரையப்பட்டதுபோலிருக்கும். உடலில் அணிகள் சிற்பத்தின் செதுக்கல்கள் போலிருக்கும்// என்பதில் உணர்கின்றேன்.
ஒரு
சிலை தெய்வமாகிவிடுமா? என்றால்… எல்லா சிலையும் தெய்வம் இல்லை.
தெய்வமாகும் சிலைகள் முழுமையை கொண்டுவந்து தருகின்றன. முழுமை என்று
நம்பிக்கைத்தருகின்றன. அந்த நம்பிக்கை வழியாக உயிர்பெறுகின்றன. அந்த
நம்பிக்கை தெய்வீகம். இந்த முழுமை திரௌபதியிடம் இருப்பதைக்காண்டு
தெய்வீகமாகப்படைக்கப்பட்டு
உள்ளால் என்று உணர்கின்றேன். //தன்னை பிழையின்றி வைத்துக்கொள்ள அவள் எதுவும் செய்வதுமில்லை. எதைச்செய்கிறாளோ அதிலேயே முழுமையாக இருக்கிறாள்.// அதற்கெல்லாம் மேலாக இந்த பிரயாகை-28ம் பகுதி
ஆரம்பமே நிமிர்ந்து முழுமையில் உட்கார வைத்து விட்டது. //துருபதன் திரௌபதியிடம் விடைபெற்று// என்ற மூன்று வார்த்தைகளும், அங்கு உள்ள பிருஷதியும்,
துருபதனும் குழந்தையாவை உணர்த்தியது. “நீ எனக்கா மகளானாய்
நான் உனக்கு மகனானேன்” என்ற கண்ணதாசனின் பார் மகளே பார் என்ற படப்பாடல் காற்றில்
மிதந்து வந்து தழுவுகின்றது.
தெய்வம் என்பதை யாரும் கட்டி அமைத்து இது தெய்வம் என்று சொல்லிவிட
முடியாது. அப்படி சொன்னாலும் அது நமக்குள் தெய்வமாகத்தான் இருக்குமா? என்றால் வெறும்
சொற்களாய், எண்ணங்களாய்தான் இருக்கும். தெய்வம்,தெய்வீகம் என்பது உணர்வு. அந்த உணர்வை
கொண்டுவருவதன் மூலமாக பாரதமண்ணில் அன்னைத்தெய்வமாக வாழ்ந்துவரும் திரௌபதியை அதன் ஆதியும்
அந்தமும் ஒளிபெற்று பிரகாசிக்க இந்த பாத்திரத்தை
செய்து உள்ளீர்கள். வெண்முரசு அதன் ஆட்சிப்பீடத்தில் அழகாக உட்கார்ந்து உள்ளது. நன்றி.
திரௌபதியை தெய்வீகப்பெண்ணாக நான் காணவில்லை என்பவருக்கு பகுத்தறிவின்
நுண்ணிய கூரோடு வந்து திசைகளை, வெளிகளை, அகத்தை பிரகாசிக்க செய்கின்றாள்.
//மனிதர்கள் அனைவரும் பிறர் மேல் கொண்ட விருப்பத்தாலும் வெறுப்புகளாலும்தான் வாழ்க்கையை அமைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று கற்றிருக்கிறேன்.” பிருஷதி “உன் நூலறிவுப்பேச்சு சலிப்பூட்டுகிறது… எனக்கு வேறு வேலை இருக்கிறது” என எழுந்தாள்.// என்று சொல்லும் இடத்தில் வெறும் நூலறிவுக்கொண்டுதான் இயங்குகின்றாளோ
என்று நினைக்கம்போதே. “இப்போது நீங்கள் அவர்களை வென்றுவிட்டீர்கள். இன்று தந்தைமுன் இருந்து எழுந்துசென்றபோது அவர்களிடம் நீங்கள் கசப்பு கொள்ளும் அது இருந்ததா என்ன?” என்ற
இடத்தில் திரௌபதியின் நுண்ணறிவை தழைக்கவைத்து. கற்றல் கேட்டல்
தாண்டி தனது கண்ணோட்டம் எத்தனை நுட்பமானது என்பதை விளக்கி காட்டுகின்றார்.
திரௌபதியின் பாத்திரத்தோடு இணைந்து ஒளிர்ந்து உயிர்பெறும் இந்த
கண்ணோட்டம்தான் துருபதனிடம் அறம் தவறாமல் இருக்கும் வழியை
கொண்டு வந்து தந்தது. அரசுத்தேவை இல்லை, அகல்யையை வென்றால் போதும் என்ற
தனது அன்னையிடம் உண்மையை விளங்கிக்கொள்ள வழி செய்தது. தெளிவு இல்லாதவன்
யாரையும் தெளிய வைக்கமுடியாது.
கண்ணோட்டம் என்னும்
கழிப்பெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் உலகு-என்னும் திருக்குறள் திரௌபதியின் அகமாக ஆகியிருப்பதை அறிந்து மகிழ்கின்றேன்.
சமநிலை, அறிவு,
நுண்ணுறிவு, ஞானம், கண்ணோட்டம் அனைத்தையும் தாண்டி “மறுபடியும் கற்பனை செய்கிறீர்கள்” என்றாள் திரௌபதி என்ற இடத்தில் இவள் யாரோ வெறும் காவிய மகள் அல்ல என் குலக்கொடி என்ற
எண்ணம் ஏற்படுகின்றது.
விருப்பு, வெறுப்பு, கற்பனை, புன்னகை.
கண்ணீர் என்று தாவித்தாவி சென்று வாழ்தலை நடித்து, நடிப்புகளை வாழ்ந்து செல்லும் இப்பிறவியில்
சமநிலை என்பது தீபம்போல் அனைத்து திசைகளிலும் நிறைகின்றது என்பதை விளக்க, விருப்பு, வெறுப்பு,
கற்பனை. புன்னகை, கண்ணீர் அனைத்தையும் எழுத்துக்கள் ஆக்கி இந்த பகுதியை உயிர்பெற வைத்துள்ளீர்கள்.
“கடம்பவனத்துக் கொற்றவையின் குகைகோயிலுக்குள் ஒரு சுடர் உள்ளது. அது அசைவதே இல்லை. இளையதேவிக்குள் அச்சுடர் எரிந்துகொண்டிருக்கிறது தேவி!” என்றாள்
என்ற வரிகளில் கண்டையும் அசையா சுடர் என்றசொல் சமநிலையில் நின்று வாழ்க்கையை திரும்பிப்
பார்க்கச்சொல்கிறது.
விருப்பு, வெறுப்பு, கற்பனை, புன்னகை,
கண்ணீர் என்னும் அன்றாட வாழ்வியல் உணர்வுகள் அனைத்தும் சமநிலை என்னும் அசையாச் சுடர் முன் பொருள் அழியும் பொருள் தருகின்றது.
நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.