Thursday, November 20, 2014

பூநாகம் என்பது...

பிரயாகையில்  திரௌபதி கேட்கும் தபதியின் கதை வழியே ஒரு ஆளுமை உருவாவதன் உளவியல் பின்புலம் ஒன்று அதன் அழகியலின் சிகரமாக துலங்கி வந்திருக்கிறது.

முதற்க் கனலில்  அம்பை சகோதரிகள் கேட்கும் பார்வதியின் கதை இதன் துவக்கமாக கொள்ளலாம்.  பொதுவாக ஒரு இணையற்ற ஆளுமை எழும் போதும் வீழும் போதும்  உள்ளுக்குள் தங்களை தான் விரும்பும்  ஏதேனும் ஒரு நாயகப் பிம்பத்துடன் இணைத்தே  அதன் உணர்வு நிலைகளை அனுபவிப்பர்.

திரௌபதி நாளை ஐவரை மணக்க சம்மதம் தேர்விக்கப்போவதின் உளவியல் அடிப்படையை உருவாக்கும் காரணிகளில் ஒன்று திரௌபதி கேட்கும் தபதியின் கதை.

திரௌபதி அறிமுகம் ஆவதே  [முதல் கனல்] கண்ணீர் துளிகள் மார்பில் சிதற  குரு வம்சத்தை காக்கும்படி கண்ணன் வசம் கதறும் கோலத்தில்தான்.  

பிரயாகையின் திரௌபதி சமநிலை கொண்டவள், விவேகம் நிறைந்தவள்.  இந்த ஆளுமை உடையும் தருணங்கள்  அதன் விசைகளின் ஆற்றல்  எத்தகையது என்பதன் ஸ்தூலமே முதற் கனலின் திரௌபதி.

திரௌபதியின் அன்னை  துருபதனின் மற்றொரு மனைவியை  அவளது அசைவுகளை கொண்டு மட்டுமே அடையாளம் காண்பது  மற்றொரு உளவியல் நுட்பம்.

முதற் கனலில் பீஷ்மரின் கடைவாய் இகழ்ச்சி, அம்பையின் உடல் மொழி இவைகளை நாடக தருணம் ஒன்றின் உச்சம் எனக் கொண்டால், இங்கு திரௌபதி அன்னை வழியே நாம் காண்பது, நாம் நமது அன்றாட வாழ்வில் மிக எளிதாக காணக் கிடைக்கும்  ஒவ்வாமை ஒன்றின் சித்திரம். [நாம் பேசுவதை முகத்தை தீவிரமாக வைத்துக்கொண்டு, காலாட்டிக்கொண்டே கேட்கும் ஒருவரை  நமது அகம் எதிர்கொள்ளும் விதமே அது]

சகுனி அடையும் திரிபு நிலை இந்த வரிசையில் மற்றொரு அற்புத தருணம்.  துரியன் தனக்குள் உறையும் பெண்மையைக் கொள்வதும், பீமன் நாகர்லோகம் சென்று நஞ்சை அருந்தி  தனது பிரியத்தை விஷமாக மாற்றிக் கொள்வதும்  ஒரு [மித்]  பூடக நிலையில் உருவாகி வருகிறது.

ஆனால் சகுனியின் திரிபு. துல்லியமான யதார்த்தம்.  வெறி நாய்க் கடி அடைந்தவனின் மரபியல் ரசாயனத்தில் தீர்க்கவே இயலாத திரிபு நிகழ்வது போன்ற நிலை இது. கூடவே சகுனியின் துரியத்தில் படியும் அவனது சகோதரர்கள் குறித்த கதை. இனி உயிர் பிரியும் கணம் வரை அவன் ஓநாய்தான். கூடவே கணிகன் வேறு.சகுனியை  'கையாள' இனி வழியே இல்லை. 

பூநாகம் உளவியல் பிசகு ஒன்றின் மற்றொரு நுட்பம்.  திருதுராஸ்த்ரர் வரும்போதே  'நான் அரசன் அல்ல ஆகவே என்னை நெறிகள் கட்டுப் படுத்தாது' என்று பிரகடனம் செய்துவிட்டே வருகிறார்.

பாண்டவர்கள் குந்தியை நோக்கி நகரும் அக் கணம் கூட, திருதுராஸ்த்ரர் அது சரிதான் என்றே சொல்லி ரசிக்கிறார்.

ஆனால் குந்தியின் தலையில் தான் அணிய விரும்பிய கிரீடத்தைக் காண்கிறார். மக்களின் உற்ச்சாக கூச்சல். 
மனம் துணுக்குறும் மிகச் சரியான கணம் ஒன்றினில், மிகச் சரியாக ஒரு வார்த்தையை விதைக்கிறான் கணிகன்.

கனிகனின் எந்த 'ஆற்றலைக்' கண்டு சகுனி அவனைக் கூட்டணி கொண்டானோ, அந்த ஆற்றல் செயல் புரியத் துவங்கிய கணம் இன்றைய பூநாகம் முதல் அத்யாயம்.

கடலூர் சீனு