மழைப்பாடலில் குந்தி அர்ஜுனனை கருவில் சுமக்கும் போது அவர்கள் சரத்வான் முனிவரின் குகையில் இருப்பார்கள். அந்த அத்தியாயங்களில் ஒரு வரியை படித்தேன். சரியாக இப்போது தேடி கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் அது உருவாக்கிய கற்பனைகள் நான் சிந்தித்திடாத கோனத்தை எனக்கு திறந்துவிட்டது.
அந்த வரி கிட்டதட்ட இப்படி இருக்கும். 'குளிருக்காக அனகை விரகுகளில் தீ மூட்டினால். நெருப்பு குஞ்சு அதில் முளைத்து எழுந்து படர்ந்தது.' இந்த வரி தீ என்பது ஒரு உயிர் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.
தீ ஒரு உயிரா? தீ தகிக்கிறது, அசைகிறது, வண்ணங்களை காட்டுகிறது, ஓசை எழுப்புகிறது. அதன் உணவை தேடி பிடித்து பற்றி எரிகிறது. வேறேன்ன வேண்டும் ஒன்றை உயிரென சொல்ல? அந்த உயிர் எப்படி பிறக்கிறது. காட்டு தீ எப்படி முளைக்கிறது? யார் மூட்டுகிறார்கள் காட்டு தீயை. இரு மரங்கள் உராய்ந்து தீ பிறக்கிறது. அப்போது அங்கு பிறந்த முதல் நெருப்பு துளி இருமரங்களின் உராய்வினால் விளைந்த விளைவு.
பிறந்த அந்த துளி தீ படர்வது மரமும் தீயும் சேர்ந்தால் நடக்கும் விளைவு. விளைவுகளாலேயே ஒரு உயிர் பிறந்து இயங்குகிறது. அந்த விளைவுகள் நடக்காமல் போனால் அந்த உயிர் மறைகிறது. இறந்த அந்த தீ எங்கு செல்கிறது? எங்கு செல்ல வேண்டும்? அது விளைவின் வெளிப்பாடே. விளைவுகள் முடிந்தால் மறைகிறது.
ஏன் உயிர் ஒரு விளைவாய் இருக்க கூடாது. ஏன் அது குறிப்பிட்ட இரு பொருள்கள் சேரும் போது எழும் வெளிப்பாடாக இருக்ககூடாது. அதை வெளிப்படுத்தும் மூலம் இருக்கும் வரை அது வாழ்கிறது அதன் பின் அது இறக்கிறது. அதற்கு மறுப்பிறப்பு என்று ஏன் ஒன்று இருக்கவேண்டும்.
இப்படியாக கற்பனை ஓடியது. பின் வண்ணக்கடல் படிக்கும் போது அதன் 48வது அத்தியாயத்தில் வைசேடிக மெய்யியல் பற்றிய விவாதத்தில் இப்படி வருகிறது,
“ஆனால் உயிர்?” என்று இருளுக்குள் எவரோ கேட்டனர். “உயிரென்பது ஒரு அறிதலே. வெற்றிலையும் சுண்ணமும் பாக்கும் கலந்து செந்நிறம் பிறப்பதுபோல இப்பருப்பொருட்களின் கூட்டால் உயிர் பிறக்கிறது. வெற்றிலைச்சாற்றை உமிழ்ந்து அது வெயிலில் காய்ந்தால் அச்செந்நிறம் எங்கே செல்கிறது? அது பிறிதொன்றாக மாறிவிடுகிறது. உயிரென்பது உடலின் ஒரு நிலை. இன்னொரு உடலின் அறிதல். உயிர் என்றால் என்ன என்று நான் கேட்டேனென்றால் நீங்கள் சொல்லும் அனைத்து விடைகளும் உயிரை இன்னொரு உயிரான நாம் அறியும் முறைகளைப்பற்றியதாகவே இருக்கும்.”
வைசேடிக மெய்யியலின் இந்த சிறு பகுதியை கற்பனையால் எட்ட முடிந்தது உவகை அளித்தது.
அப்படி என்றால் எனது கற்பனையின் மூலம் நான் அடைந்தது ஒரு தரிசனமா? தரிசனத்தின் சிறு பகுதியா? கதைக்கும் இந்த கற்பனைக்கும் சம்பந்தமே இல்லையே? ஒரு கவித்துவத்துக்காக சொல்லப்பட்ட வரிதானே இது.
ஹரீஷ் கூகுல் குரூப்ஸ் விவாதக்குழுமத்தில்