Saturday, November 22, 2014

வண்ணத்துப் பூச்சி விளைவு

அன்புள்ள ஜெ,

பூநாகம் - தலைப்பே நிகழப் போவதைச் சொல்லிவிட்டது. அதுவும் கீழ்க்காணும் வரிகளைப் படித்த கணத்திலிருந்து இறுதி வரை ஓர் பதைபதைப்புடனே படித்தேன். உண்மையில் திருதராஷ்டிரரின் ஏமாற்றம் என்னை மிகவும் வேதனைக்குள்ளாக்கியது.
"ஆம், முதன்மையாக அன்புதான் எல்லை மீறலாகாது. அன்பு ஒவ்வொரு கணமும் தன் எதிரொலிக்காக செவிகூர்கிறது. நிகரான எதிரொலி எழாதபோது ஏமாற்றம் கொள்கிறது. சினமடைகிறது. அது வன்மமாகவும் வெறுப்பாகவும் திரிகிறது."

நிச்சயமாக வெண்முரசின் அனைத்து வாசகர்களும் ரசித்த, என் போன்ற ஒரு சில வாசகர்களின் வாழ்வின் குரூரங்களுக்குக் காரணம் தந்ந வரிகள். படித்ததிலிருந்து மீண்டும் மீண்டும் மனது அதையே அசை போட்டுக் கொண்டிருக்கிறது, இரண்டாவது நாளாக. அவ்வரிகளிலே தோய்ந்து ஒரு 'சிந்தனையாளனாகவே' இருக்கிறேன்!!! அந்த திரிபடைந்த மனதின் வன்மம் அழிவில் மட்டும் தான் அடங்குமா? நினைக்கவே பயமாயிருக்கிறது.

வெண்முரசின் சிறப்பே மானுட உணர்வுகளைக் கச்சிதமாக வரையறுக்கும் இத்தகைய சொற்றொடர்கள் தான். பிரயாகையின் துவக்கமே அப்படி ஒரு வரி தானே. இதே போன்று மழைப்பாடலில் குந்திக்கு தேவயானியின் மகுடம் தரப் படும் இடத்தில் வரும் மகிழ்ச்சியைப் பற்றிய, 'உண்மையான மகிழ்ச்சி என்பது அடையப் பெறுவதல்ல, அளிக்கப் பெறுவது' என்ற வரி.
பூநாகம் முதல் அத்தியாயத்தை ஏற்கனவே துருபதன் கணித்திருந்தார். பாண்டவர்கள் திருதராஷ்டிரர் கோபப்படும் படி ஏதேனும் செய்வதற்காக சகுனி காத்திருக்கிறார் என்று தன் அமைச்சரிடம் கூறுகிறார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் அரசு சூழ்தலில் வல்லவர்களாகிய விதுரரும், குந்தியும் கோட்டை விட்டது தான். மேற்கண்ட வரிகளே கூட சௌனகர் தான் சொல்கிறார். யோசித்துப் பார்த்தால் முறைகள் என்று வகுக்கப் பட்டவற்றை மீறுவது, அது எக்காரணத்தைக் கொண்டாகிலும், பெரிய விளைவுகளை உருவாக்கிவிடும்.


இன்றைய திருதராஷ்டிரரின் மனத் திரிபு தான் இனி பாண்டவர்களின் அத்தனை துன்பங்களுக்கும், பெரும் பாரதப் போருக்குமே காரணம். உண்மையில் இந்த வண்ணத்துப் பூச்சியின் சிறகசைவு தான் அத்தனை பெரும் சூறாவளியை எழுப்புகிறது. மீண்டும் இந்தப் பகுதியின் தலைப்பை வியக்கிறேன். பூநாகம் - பூச்செண்டு அல்லது பூவில் மறைந்திருக்கும் மிகச்சிறிய பாம்பு!!!

நகர் நுழைந்ததும் நகுலனும், சகதேவனும் குந்தியை நோக்கிச் செல்வது புரிந்து கொள்ள முடிவது தான். ஆனால் பெரிய ஆச்சரியம் தருமன் செய்வது. மழைப்பாடலிலிருந்தே குந்திக்கும் தருமனுக்கும் ஓர் அமைச்சியல் உறவு தான் இருக்கிறது. உண்மையில் குந்தி தருமனிடம் முதன் முதலில் பேச நேரும் தருணம் பாண்டுவையும் மாத்ரியையும் அவர்கள் தேடத் துவங்கும் சமயம். அப்போதும் தருமன் ஆணையில் நிகழ்வுகள் நடக்கும். அதன் பிறகும் அவர்களிடையே அன்னை மகன் என்ற உறவுக்கான சந்தர்ப்பங்கள் அமையவில்லை. தருமன் மனதில் குந்தியின் மீதான பாசம் என்ன என்பது இதுவரையிலும் பூடகமாகத் தான் இருந்து வந்தது. ஆனால் தங்கள் முதல் வெற்றியைத் தாய்க்கு சமர்ப்பித்த அந்த சமயத்தில் தருமன் தன் சமநிலையை இழந்த, அன்பில் ஆட்பட்ட ஓர் தருணமாகவே படுகிறது. பார்க்கப் போனால் பீமனை விடவும், அர்ச்சுனனை விடவும் குந்தியின் மேல் அதிக அபிமானம் வைத்திருப்பது தருமன் தான் என்று எண்ணத் தோன்றுகிறது.

உண்மையில் பீமனும் அர்ச்சுனனும் திருதராஷ்டிரரிடம் தான் போக வேண்டுமென்று நினைக்கிறார்கள். அவர்களிருவருக்கும் தந்தையின் அன்பு அவரிடமிருந்து கிடைத்தது காரணமாயிருக்கலாம். திருதராஷ்டிரரும் பீமனைத் தான் எதிர்பார்க்கிறார். அவனாவது அவரிடம் சென்று ஆசி வாங்கியிருந்தால் கூட பூநாகம் சிறு சீற்றத்தோடு மறைந்திருந்திருக்கும். எது எப்படியோ மனிதன் என்பவன் தெய்வங்களாடும் பகடை தான் என்பதை மீண்டும் உணர்த்திய ஓர் அத்தியாயம்.

அன்புடன்,
அருணாச்சலம், நெதர்லாந்து
--