Friday, November 28, 2014

பிரயாகை-32-எண்ணங்கள்


அன்புள்ள திரு.ஜெக்கு வணக்கம். 


எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்-என்கின்றார் வள்ளுவர். எண்ணம்தான் பொக்கிஷ அறை, திண்மை அதன் கதவு. 

எண்ணம்தான் செயலாக விளைகிறது. “நீ எதுவாக ஆக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்” என்கின்றார் சுவாமி விவேகானந்தர்.

திருதராஷ்டிரன் திண்மை உடையவன், பெரும் வல்லமை கொண்ட பாரவர்ஷத்தின் பெரும்களிறு. அவன் வலிமையால் நிறைந்து இருக்கிறான். கருணையால் நிறைந்து இருக்கிறான். தந்தைமையால் நிறைந்திருக்கிறான். பாசத்தால் பிணைந்து உறவால் நிறைந்திருக்கிறான்.  மகன்களால் நிறைந்திருக்கிறான். மகிழ்ச்சியால் நிறைந்திருக்கிறான். இசையால் நிறைந்து இருக்கிறான். அணிமணிகாளல் நிறைந்திருக்கிறான். உணவால் நிறைந்து இருக்கிறான். நகைச்சுவையால் நிறைந்திருக்கிறான். புன்னகையால் நிறைந்திருக்கிறான். நாம் கைவிடப்பட்டுவிடுவோமோ என்ற பயத்தால்கூட நிறைந்து இருக்கிறான். ஆனால் அவன் எண்ணங்களால் நிறைந்து இருக்கவில்லை.

எண்ணங்கள் எதுவும் அவனிடம் இல்லை. அவனிடம் உள்ள எண்ணங்கள் மழைபோல விழும்போது தெரியும், விழுந்தபின்பு இருப்பதில்லை. எண்ணங்களை உருவாக்கும் சொற்கள்கூட அவனுக்கு பிடிப்பதில்லை ஆகவே சொற்கள் அற்ற இசையில் நீந்தி செல்கிறான்.  சொற்கள் பூமிபோல பொருள்களால் ஆனவை, இசை வானம்போல இருக்கு ஆனால் இல்லை. அந்த வானவெளியில் வாழும் திருதராஷ்டிரன் காந்தாரியை மணம்முடிக்க செல்லும்போது தனது அகம் திறந்து விதுரனுக்கு காட்டுகின்றான்.

//நான் பாரதவர்ஷத்தின் தலைமையான தேசத்தின் அரசன்ஆனால் இன்றுகூட எனக்கு உணவுகிடைக்காமலாகிவிடும் என்ற அச்சம் என்னுள் எப்போதும் உள்ளதுஒரு தட்டில் உணவுண்ணும்போது அருகேகையெட்டும் தொலைவில் மேலும் உணவு இருந்தாகவேண்டும் என்று எண்ணுவேன்இல்லை என்றால் அந்தஅச்சம் என் அகத்தில் முட்டும்அது கடும்சினமாக வெளிப்படும்சேவகர்களைத் தாக்கியிருக்கிறேன்இளமையில்பலமுறை அன்னையையே தாக்கியிருக்கிறேன்” திருதராஷ்டிரன் சொன்னான்//-மழைப்பாடல்-19.

திருதராஷ்டிரன் அகத்தில் இருக்கும் அச்சம் என்னும்  எண்ணவிதை முளைக்க நீறு உற்றப்படவில்லை. அதை உறுவாக்கும் யாரும் அஸ்தினபுரியில் இல்லை. சகுனியால்கூட அந்த எண்ணவிதையை முளைக்க வைக்கமுடியாது. மண் மண்ணோடு சேர்ந்து மலையாவதுபோல எண்ணங்கள் எண்ணங்களோடு சேர்ந்து எண்ணத்தின் மலையாக, அச்சம் அச்சத்தோடு சேர்ந்து
அச்சத்தின் மலையாக திருதராஷ்டிரன் ஆகவேண்டும் என்றால் எண்ணங்களை உருவாக்கும், எண்ணங்கள் வழியாக அச்சததை உருவாக்கும் ஒருவன் தேவை என்பதை சகுனி எண்ணுகின்றான். அந்த எண்ணம் அந்த நேரத்தில் அதற்கு உரிய எண்ணத்தோடு சேர்கிறது. அப்படிக்கிடைத்தவன் கணிகன்.
//கணிகர் “நான் யாஜரையும் உபயாஜரையும் அறியமாட்டேன்அவர்கள் என் குருகுலத்தைச் சேர்ந்தவர்களும் அல்லநான் பாஞ்சாலத்துக்குச் செல்லவுமில்லைநான் அதர்வவேதம் பற்றிச் சொன்னதுமே நீங்கள் யாஜரைப்பற்றி எண்ணினீர்கள். அவர்களை துருபதன் தேடிச்சென்ற செய்திதான் நீங்கள் இறுதியாக அறிந்ததுஅந்த எண்ணத்தை நான் தொட்டேன்அதை என் கையில் எடுத்துக்கொண்டேன்நான் கேள்விப்பட்ட கதையைச் சொன்னேன்” என்றார். “இப்போது நீங்கள் எண்ணிக்கொண்டிருக்கும் அனைத்து எண்ணங்களும் ன்னால் உருவாக்கப்பட்டவை.”

சகுனி சிலகணங்கள் கழித்து “நாளை நீர் என்னுடன் வாரும்” என்றார்.என்னுடன் இரும்உமது பணி எனக்குத்தேவை” கணிகர் சிட்டுக்குருவி ஒலி போல மெல்ல நகைத்து “நான் விழைந்ததும் அதுவே” என்றார்// 

ஒருவன் எண்ணங்களோடு ஒருவன் எண்ணங்களை சேர்க்கும் அந்த வித்தையை முதன் முதலில் கணிகன் இடம் காணும் சகுனி அந்த இடத்தில் இவன்தான் தனக்கு வேண்டியவன் என்று அறிகின்றான். நதிக்கு பாதை தேவை இல்லை அதுபோகும் பாதையே நதியாகி விடுகின்றது. சகுனி திட்டம் தீட்டி ஒருவனை உருவாக்க வில்லை. அவன் எண்ணம் பயணக்கும் திசையில் அவன் கண்டது அது. விதியும் மானிடர்வாழ்வில் இணைந்து பிணைந்து செல்கிறது என்பதை இதன் மூலமாக அறிய முடிகின்றது.

ஒருவனுக்குள் உள்ள எண்ணம் இன்னொரு ஒத்த எண்ணத்தை ஈர்த்துவிடுகின்றது. பாண்டர்வகளை ஒழிக்கவேண்டும் என்று எண்ணுவதற்கு முன் சகுனியின் எண்ணத்தில் திருதராஷ்டிரன் அகத்தில் எண்ணங்களை விளைவிக்கவேண்டும் என்ற எண்ணம்தான் இருந்து இருக்கிறது. அந்த எண்ணம்தான் எண்ணங்களை விளைவிக்கும் கணிகரின் தேவையை அவனுக்கு தருகின்றது. திருதராஷ்டிரன் என்னும் பூவுக்குள் எண்ணம் என்னும் நாகத்தை ஏற்றி வைக்க முடிந்தவன் இவன் என்னும் கணிப்பை சகுனி அடைகிறான்.   

எண்ணங்கள் நல்லவை, தீயதை என்று இரண்டாக இருந்தாலும், நல்ல எண்ணங்களைவிட தீய எண்ணங்களை எளிதில் வளர்க்க முடிகின்றது ஏன்? நல்ல எண்ணங்கள் திங்கும் கரும்புபோல் வாயை கிழிக்கிறது. தீய எண்ணங்கள் நொதிக்க வைத்த கருப்பம் சக்கைச்சாறு, யாரோ உருவாக்க யார  மூலமாகவோ வந்து கிடைக்கிறது. எச்சில் ஊறுகிறது.  அடிப்படையில் கண்ணில்லாமையால் அச்சத்தால் பிடிக்கப்பட்டு இருக்கும் திருதராஷ்டிரன் இடம் கரும்பைக்கொடுத்தால் எப்படி தின்பான். கணிகனுக்குள் நொதித்த புளித்த சறக்கு அவனுக்கு இதமாக இருக்கிறது. அச்சப்படும் திருதராஷ்டிரனை அச்சப்படுத்தும் கதைகள். பலகீனமானவன் சாரயம் குடித்து இன்னும் பலிகீனமாகி இருப்பதையே பலமாக இருப்பதாக நினைக்கும் வேதனை நிகழ்வு. விதைகளை தூவிவிட்டால்போதும் மண் பின்பு விதைகளை காடாக்கிவிடும். காட்டுமரங்களின் வேர்கள் கோட்டையை பிளந்துவிடும். சகுனி தனது சூழ்ச்சிப்போரின் பகடையாய் கணிகனைப்பயன்படுத்துவது அற்புதம். 
வீரம் கருணையில் மகிழ்கின்றது குந்தியின் அந்தபுரத்தில் அள்ளிக்கொடுத்து. அது ஒரு முரண்.  அறிவு கலையில் மகிழ்கிறது கவிதைநூல் படித்து. அது ஒரு முரண். இந்த இரண்டு முரண்களும் காலத்தால் உண்டானவை. நேற்று பாண்டவர்கள் நகர் நுழைந்தபோது திருதராஷ்டிரன் அங்கு இருக்கையில் அவர்கள் அன்னையிடம் நேராக சென்றது இடத்தால் நிகழ்ந்த முரண்.   சூழ்ச்சி எப்போதும் சூழ்ச்சியிலே மகிழ்கிறது. எந்த நேரமும், எந்த காலமும் அதற்கு இல்லை. அதனால் சூழ்ச்சி முரணை முரணாக முகம் காட்டுவதில்லை. 
நேற்றுவரை இருந்த முரண்படா திருதராஷ்டிரன் இன்று முரண்படுகின்றான். ஆனால் அவனுக்குள் உள்ள முரண் அவனுக்கு தெரிவதில்லை. அவன் கொண்ட முரண் குந்தி உண்டாக்கிய முரண், குந்தியால் பாண்டவர்கள் உண்டாக்கிய முரண். திரு.ஜெ சொல்வதுபோல //பெரிய முரண்பாடுகள் மிகமிக மென்மையாகவேவெளிப்படும்நடத்தைகளில்சொற்களில்பலசமயம் எளிய உடலசைவுகளில்ஏனென்றால் பெரியமுரண்பாடுகளை முரண்படுபவர்களே அஞ்சுகிறார்கள்அவற்றை முழுமையாக மறைத்துக்கொள்ளமுயல்வார்கள்நாம் காண்பது அனைத்து திரைகளையும் கடந்து வரும் மெல்லிய அசைவை மட்டுமே.”திருதராஷ்டிரர் பெருமூச்சுடன் தன் பெரிய கைகளை மெல்ல உரசிக்கொண்டு அசைந்து அமர்ந்தார்//

ஒரு மனிதன் முரண்பட்டு இருக்கிறான் என்பதை அவனால் உணரவே முடியவில்லை என்பதுதான் மாறாத நிஜம். பெரிய முரண்பாடுகளை முரண்படுபவர்களே அஞ்சுகிறார்கள் என்பது நிஜமாக இருப்பதால்தான், முரண்படுபவர்களுக்கு முரண்படுவது தெரிவதே இல்லை.

விதி முரண்பாட்டையே தனது ஆடல்களமாக ஆக்கி விளையாண்டு வீழ்த்துகிறது. வெற்றிடத்தில் நிறையும்நீர்போல எண்ணம் இல்லாத திருதராஷ்டிரனுக்குள் எண்ணம் நிறைகிறது, எண்ணம்தான் முரணாகிறது. எண்ணத்திற்கு தகுந்த முரண். 
தந்தைப்பேச்சை தட்டாத ராமனும் முரண்பட்டவன்தான். தந்தைப்பேச்சை கேட்காத பிரகலாதனும் முரண்பட்டவன்தான்.இவர்களின் முரண் விண்ணை நோக்கி.
மனைவிப்பேச்சை தட்டாத தசரதன் முரண்பட்டவன்தான். மனைவிப்பேச்சை தட்டிய வாலியும் முரண்பட்டவன்தான். இவர்களின் முரண் மண்ணை நோக்கி. 
அஸ்தினபுரியில் இன்று உருவாகும் முரண் மண்ணுக்காகவா? விண்ணுக்காகவா? காத்திருப்போம். 
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகுங்கதி யில்லை நுஞ் சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந் துய்மினே-திருமந்திரம்


நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.