அன்புள்ள ஜெ,
நேற்றைய கிருஷ்ணன் குந்தியிடம் பேசும் அந்த முதல் தூதின் அத்தியாயத்தைப் படித்தவுடன் தோன்றியது கிருஷ்ணனின் சாதுர்யமான பேச்சிற்கும் கணிகனின் பேச்சிற்கும் என்ன வித்தியாசம்? இன்று காலை எழும் போதும் அதே எண்ணத்தோடு தான் எழுந்தேன். மிகச் சரியாக கடலூர் சீனு அவர்களும் இதையே தொட்டிருந்தார்கள். கூடவே கணிகன் பிரிவினை என்பதை எதிர்நிலை அம்சமாக திருதராஷ்டிரர் மனதில் விதைப்பதையும், இங்கே கிருஷ்ணன் அதே பிரிவினையை குந்தியைப் புகழ்வதின் மூலம் சாதிப்பதையும் சுட்டிக் காட்டியிருந்தார். நான் அந்த சித்திரத்தையே கொஞ்சம் விரிவாக்கி கிழே இணைத்திருக்கிறேன்.
முன்பு ஒரு முறை பாரதத்தின் game players (வினை கர்த்தாக்கள் என்று சொல்லலாமா?) என்று சகுனி, விதுரன் மற்றும் குந்தியைச் சொல்லியிருந்தீர்கள். ஆனால் இப்போது பார்த்தால் அது கிருஷ்ணனும், கணிகனும் ஆடும் ஆட்டம் போலல்லவா தெரிகிறது!!!
கிருஷ்ணனுக்காவது யாதவர்கள் அதிகாரம் பெற வேண்டும் என்ற ஓர் அரசியல் காரணமாவது இருக்கிறது. ஆனால் இந்த கணிகனுக்கு என்ன காரணம் தான் உள்ளது? உண்ண, உடுக்க, இருக்க என்று அனைத்திற்கும் சகுனியைச் சார்ந்து இருக்க வேண்டிய ஒரே காரணம் மட்டும் தானா? அந்த ஒரே காரணத்துக்காகவா அத்தனை பெரிய சதியைச் செய்யத் துணிகிறான் அவன்? அல்லது அவனுக்கு வேறு ஏதாவது பூர்வீகம் இருக்கிறதா??
வில்லேர் உழவர் பகை கொளினும் கொள்ளற்க
சொல்லேர் உழவர் பகை.
என்ற வள்ளுவர் வாக்கு தான் நினைவுக்கு வருகிறது.
அன்புடன்,
அருணாச்சலம், நெதர்லாந்து