அடப்பாவமே ''நம்மால் ஆனதை செய்வோம்'' என்ற கனிந்த விவேக கூற்றுக்குப் பின் இப்படி ஒரு 'குசும்பா'?
உணர்வு நிலையில் மிக மிக குதூகலமும் நெகிழ்வும் கூடிய தருணம் இன்றைய குந்தி கிருஷ்ணன் சந்திப்பு. கணிகன் திருதுராஸ்த்ரர் மனதில் , துரியன் மனதில் எந்த நிலையை எதிர் நிலை அம்சமாக முன்வைத்து பிரிவினை சதியை முன்னேடுக்கிரானோ,
அதே நிலையை குந்தி மனதில் நேர் நிலை அம்சமாக விதந்தோதி தனக்கான கிருஷ்ணன் தனக்கான விஷயங்களை சாதித்துக் கொள்கிறான்.
இந்தக் கசவாளி தூது வந்தவனாக உள்ளே நுழைந்து தனக்கு தேவையானதை கோரிப் பெற்று செல்கிறான். வாசலருகே படை ஏவலர்களை 'யாதவப் பேரரசியின்' சொல்லுக்காக காத்திருக்க வைத்து விட்டு சபைக்கும் நுழைவது ... என்ன சொல்ல? கிருஷ்ணன் அவனது லீலைகளை துவங்கி விட்டான்.
தருமனின் பதட்டமும் பீமனின் குறுநகையும். கிருஷ்ணா கிருஷ்ணா.. அனைத்தையும் ஒரே கணத்தில் சிறு மதலைகள் பாவைகளை வைத்து கூடி விளையாடும் விளையாட்டாக மாற்றி விட்டானே . காலிப்பயல்.
குந்திக்குள் உறையும் அன்னையை மாயக்கண்ணன் பூக்கவைக்கும் இடம்தான் எத்தனை அழகு?
பீமனும் அர்ஜனுணனும் [கர்ணன் மீது அடைந்த பொறாமையை அவர்கள் இப்போது அடையாதது மற்றொரு உன்னத உளவியல் தருணம்] அவர்களின் தனிமையை மதித்து, அவர்களை தனித்திர்க்க விட்டுவிட்டு விலகுவது இந்த அத்யாயத்தின் உணர்வு நிலை அதன் உச்சத்தை தொடும் தருணம்.
இனி விதுரரை குளிர்விக்க தருமனும், திருதராஷ்டிரரைச் ''சமாளிக்க'' விதுரரும் என்னென்ன பாடு படப் போகிறார்களோ?
இனிய ஜெயம், தமிழலக்கிய உலகம் கண்டடைந்த பாத்திரங்களில் இணை சொல்லவே இயலாத, பாத்திரமாக உருவாகி வருகிறான் இந்த 'நவீன கிருஷ்ணன்'. ஒரு படைப்பாளியாக ஒரு பாத்ரத்தின் உருவாக்கம் முன்வைக்கும் அனைத்து சவால்களையும் ஒருங்கே கொண்ட கண்ணனின் கதாபாத்திரத்தை அனாயாசமாக உருவாக்கி செல்கிறீர்கள்.
கடலூர் சீனு