உடலின் தன்மைப்பற்றி கூறவந்த ஜெ ஒவ்வொரு
கணமும் ஒன்று என்று சொல்கின்றார். அது வாழ்க்கைக்கும் பொருந்திவருவதை கண்டுக்கொண்டேன்.
வெண்முரசுக்கும் அது பொருந்தும் என்றால் அது மிகை இல்லை. இப்படிக்கூறுவதால் ஜெயமோகனின்
வாசகனா? ஜெயமோகனின் ரசிகனா? என்று கேள்விக்கேட்பார்கள் என்றால் இரண்டுக்குமே ஜெயமோகன்
தகுதியானவராக இருக்கின்றார் என்பதுதான் என்பதில்.
வாசகனையோ, ரசிகனையோ ஜெயமோகன் உருவாக்குவதில்லை. ஜெயமோகன்
செய்யும் நூலில் இறக்கப்படும்சொற்களில் கருகொள்ளும் ஞானம் வாசகனையும், ரசிகனையும் உருவாக்குகின்றது.
வாசகனாய், ரசிகனைாய், பக்தனாய் இருப்பது அவன்
அவன் சுயதர்மம். படிக்காமலே ஒரு படைப்பையும், அதன் வாசகரையும் குறைகூறுவது எந்தவித
மனிதத்தர்மம்.
வெண்முரசு ஒவ்வொரு கணமும் ஒன்று என்பதற்கும்மேலாக
ஒவ்வொரு கணமும் இரண்டு என்பது சரியாக இருக்கும் என்று நினைக்கின்றேன். ஒரு மனிதன் என்பவன் ஒவ்வொரு கணமும் உடலும் உள்ளமும் என்ற
இரண்டாகத்தான் இருக்கின்றான். உடல் பார்த்தால் உள்ளம் பார்க்க முடியவில்லை உள்ளம் பார்த்தாள்
உடல் பார்க்க முடியவில்லை. வெண்முரசும் கண்முன் வைக்கும் காட்சி ஒன்று அதே நேரத்தில்
அகமாகி நடிக்கும் காட்சி வேறு.
//வெள்ளியாலான மணிக்கோலை வலக்கையில் எடுத்து நெற்றிமேல் வைத்து கண்மூடி வணங்கி “வெள்ளைக்கலையுடுத்தோள் தாள் போற்றி! அவள் உள்ளம் கவர்ந்தோன் எண்விழி போற்றி! வாரணமுகத்தோன் எழுதுகோல் போற்றி! சொல்கடந்த சொல்லன் கிருஷ்ணதுவைபாயனன் நா போற்றி போற்றி!” என்று வெண்கலமணிக்குரலில் பாடினாள். அக்கணம் வரை இருந்த கூத்தரங்கு மறைந்து முற்றிலும் இன்னொன்று உருவாகிவந்திருப்பதை பிருஷதி வியப்புடன் நோக்கினாள். சொல் ஒரு இடத்தை ஒளிகொள்ளச் செய்ய முடியும். பூக்களைப்போல//
பிரயாகை-29ல் வரும் இந்த காட்சி இளையவிறலி கதை சொல்வதற்கு முன்பு இறைவணக்கமும் குருவணக்கமும் செய்கின்றாள் ஒரு எளிய
சராசரி காட்சி.
நூலின் வழியாக எளிய மானிடன் ஒருவன் குருவாகி விட்டான் என்ற காடசி
எளிமையில் இருந்து மேல் ஏறுகின்றது. நூல் கற்றவன்,
நூல் செய்தவன் தெய்வத்து வரிசையில் கொண்டு
வைக்கப்படுகின்றான் என்ற காட்சியும் அந்த கணத்தில் அகவிளையாட்டை தரிசிக்க வைக்கிறது.
கலைமகள் வணக்கம், கலைமகள் நாயகன் வணக்கம் அந்த வரிசையில் வியாசரையும்
கொண்டு வைக்கின்றாள். ஏன் அப்படி வைத்தாள்? என்ற கேள்வி எழாமல் இல்லை. மூன்று தலைமுறைக்கு
முன்பு தாய் சொல்லைத்தட்டக்கூடாது என்பதற்காக தானே அறப்பிழை என்று நினைக்கும் பிறன்மனை
தொடுதலை செய்யும் வியாசன். உள்ளமும் கலங்கி, உடல் மெலிந்து தவிக்கின்றான். அந்த வியாசனுக்கு
அவர் மகன் சுகர் மனத்தெளிவு தருகின்றார். “கருணைக்கொண்ட அனைத்தும்
ஒழுக்கம்தான்” என்று. அந்த சொல்லுக்கு பின்பு அவர் வாழ்க்கை என்ன ஆனது என்பதை
நாம் அறிய கிடைக்கவில்லை. அந்த சொல்லையே வாழ்க்கையாக்கி கொண்டார் என்பதை இன்று அவருக்கு
கிடைக்கும் குருவணக்கத்தில் அறிய முடிகின்றது. //ஒரு கருத்தை எடுத்துக் கொண்டு அதையே உன் வாழ்க்கை மயமாக்கு. உடலின் நாடிநரம்பெல்லாம் அந்த கருத்தே நிறைந்திருக்கட்டும்//
என்பது சுவாமி விவேகானந்தரின் பொன்மொழி. இந்த பொன்மொழியோடு ஒப்பிட்டு
வியாசரை நோக்கையில் அவரின் வாழ்க்கை விதையானது விருட்சமாகி இருப்பது தெரிகின்றது. இல்லை
என்றால் வியாசருக்கு குருவணக்கமா? என்ற எளிய கேள்வி எழுந்துவிடுகின்றது.
வெண்முரசு அதன் பெரும்நிலையாலேயே எளியதுபோல் இருக்கும் அதிசயமும்
இங்கு காணக்கிடைக்கிறது.
வியாசரைப்பற்றி இப்படி ஒரு வீணான கதையை, நம்பிக்கையை நானே உருவாக்கி விடவில்லை. கிருஷ்ணதுவைபாயனருக்கு வணக்கம் சொன்னப்பின்பு வரும்
வார்த்தைகள் இதைக்காட்டுகின்றது. //அக்கணம் வரை இருந்த கூத்தரங்கு மறைந்து முற்றிலும் இன்னொன்று உருவாகிவந்திருப்பதை பிருஷதி வியப்புடன் நோக்கினாள். சொல் ஒரு இடத்தை ஒளிகொள்ளச் செய்ய முடியும். பூக்களைப்போல//
சொற்களால் உயர்ந்து வணக்கம்பெறும் வியாசருக்கு வணக்கம்.
நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.