Sunday, November 16, 2014

ஓநாயின் வழி
அன்புள்ள ஜெ,

சகுனியும் ஓநாயும் உரையாடிக் கொள்ளும் இன்றைய அத்தியாயம், ஒரே வார்த்தையில் சொன்னால் அட்டகாசம். மழைப்பாடலின் ஆரம்பத்தில் பீஷ்மரின் தூதினை மறுத்து, குழம்பிய மனதோடு சகுனி பின்தொடர்வதும் இதே ஓநாயைத் தான். 

அதே பசித்து பசித்து உணவைத் தேடி பாலையெங்கும் அலையும் ஓநாய். அதை சகுனி பார்க்கும் போது, அது பசியால் இறந்து விடும் நிலையில் தான் இருக்கும். அது உயிர் வாழ்கிறதா என்று கண்டு வந்து சொல்லுமாறு தன் வேட்டைத் துணைவனுக்கு உத்தரவிட்டு பீஷ்மருக்கு விடை கொடுக்க வருவான் சகுனி. அதன் பிறகு அந்த ஓநாய் உயிர் வாழ்ந்ததா என்பதை ஜெ எங்குமே சொல்லியிருக்க மாட்டார். 

ஆனால் சகுனி காந்தாரியை அஸ்தினபுரிக்கு மணம் செய்து கொடுக்க சம்மதித்து விடுவான்.

உண்மையில் அந்த அத்தியாயத்தில் வரும் ஓநாய் சகுனியின் கொந்தளிக்கும் அகத்தின் பரு வடிவம் தான். மகதம் செய்த அவமரியாதையால் அகமழிழ்ந்து போய், அதே நேரம் சத்தியவதியின் அந்த தூதின் ஆழம் புரியாமல் குழம்பி போய், க்ஷத்ரியர்களிடையே தங்களின் மேன்மையை நிலைநிறுத்துவதற்கான அதிகாரப் பசியோடு அலைந்து கொண்டிருக்கும் ஓநாய் தான் அவன். அந்த ஓநாய் அடுத்த நாளும் வாழுமேன்றால் ஏதேனும் ஓர் வழியில் தன் பசியும் அடங்கும் என்று நினைக்கிறான். அப்பசி அடங்கும் வழியாகத் தான் அவன் காந்தாரியை திருமணம் செய்து கொடுக்கிறான்.

அவ்வேளையில் அவன் மறந்து போன ஒன்று, அதிகாரம் எனும் பசிக்கு அவியிட்டுக் கொண்டே இருந்தாக வேண்டும். அதற்கு முடிவு என்ற ஒன்றே கிடையாது என்பதை. 

அஸ்தினபுரியிலிருந்து யாருக்கும் தெரியாமல், தோற்றுப் போனவனாக வருகறான். இந்த அத்தியாயத்தில் ஓநாயின் கூற்றாக வருபவவை அனைத்துமே சகுனியின் ஆழ்மன எண்ணங்கள் தாம். ஒருவிதத்தில் அவன் ஸ்வப்னத்திலிருந்து வருபவை. அது அவன் ஜாகரத் கொணடிருக்கும் அறம், நெறிகளனைத்தையும் கைவிடச் சொல்கிறது.

அந்த ஓநாய் சொல்கறது, சகுனியின் கூட்டத்திலிருந்த ஓர் மூத்த பெண் குதிரை இந்த ஓநாயால் ஒன்றுமே செய்ய முடியாது என்றதாம். அதைக் கேட்டு ஓர் இளம் கழுதை நகைத்ததாம். மூத்த பெண் குதிரை யாதவ குந்தி, இளம் கழுதை அஸ்தினபுரியின் மக்கள். வஞ்சத்திற்கான விதை எப்போது யாரால் எவ்வாறு ஊன்றப்பட்டு, எப்படி நீரூற்றப் படுகிறது என்பது புரியாத புதிர். இந்தப் புள்ளியில் சகுனியின் வஞசம் அஸ்தினபுரிக்கு எதிராகத் திரும்புகிறது.


அவ்வஞ்சத்தை அவன் எவ்வாறு அணைக்க வேண்டும்? அதற்கும் அவ்வோநாயே வழி சொல்கிறது. காத்திருக்கச் சொல்கிறது. ஓநாய்க்கு உகந்த குதிரையின் கருநீர் வாசம் முகர்ந்த பின்னும், சாதாரண ஓநாய்களைப் போல பாயந்து சென்று உதையேற்று இறக்கவில்லை தான் என்றும், தனக்கான இரையைத் தன்னைத் தேடி வரவழைப்பதே தன் வேட்டை முறை என்றும், அதற்காக யுகம் யுகமாகக் காத்திருக்கவும் தான் தயாரென்றும் அது சொல்கிறது.

அந்த ஓநாயின் பெயர் ஜரன். ஜரா என்றால் முதுமை என்ற பொருள் உண்டு. ஒரு வகையில் சகுனியும் முதுமையை எட்டத் துவங்கி வட்டவன் தானே!!!
அது ஜடரையைப் பற்றி சொல்லுமிடம், மிதமிஞ்சிய பசியால் அது தன் வால், கால் என்று தன்னையே அழிக்கத் துவங்கி விடுகிறது. பிறகு உணவைப் பற்றி கனவு காண்கிறது. சகுனியின் அதிகாரம் எனும் பசியும் அப்படித்தான். இறுதியில் அதிகாரத்தைப் பற்றி கனவுகள் கண்டு, தன்னைத் தானே அழிக்கத் தான் போகிறது. இருந்தாலும் அதற்கு அவியிட வேண்டும் என்று தான் சகுனி முடிவெடுக்கிறான்.

அந்த ஓநாய் சகுனியின் காலைக் கடித்து ஊனமாக்குமிடம் புனைவின் உச்சம். அந்த இடம் வரை ஒருவித மாய எதார்த்தத்தில் பயணம் செய்யும் கதை, சட்டென்று நடைமுறை தளத்துக்கு வருகிறது. ஆனால் அது மட்டுமன்று. சகுனி மழைப்பாடலிலிருநது இன்று வரை நிமிர்ந்த நன்னடையும், நேர் கொண்ட பார்வையுடனும் தான் வருகிறான். ஆனால் நானறிந்த சகுனி கால் ஊனமானவன். அதை ஜெ எப்படிச் சொல்லப் போகிறார் என்று நினைத்திருந்தேன்!!! இன்று அதற்கான பதில் கிைடத்து விட்டது.


சகுனியின் கால் ஊனத்தை எப்படியெல்லாமோ சொல்லியிருக்கலாம். ஆனால் எத்தகைய அறப் பிழைகளைச் செய்தாயினும் தன் அதிகாரப் பசியைப் போக்கி, அதன் மூலம் வஞ்சத்தைத் தீர்த்துக் கொள்ளலாம் என அவன் மனம் மாறுமிடத்தில் அவனின் ஊனத்தைக் கொண்டு வந்தது அட்டகாசம். அதுவும் அவனுள் இருந்த பாலை மிருகமான ஓநாயைக் கொண்டே கடிக்க வைத்தது மாஸ்டர் ஸ்ட்ரோக்.

 அதுவரை நிமிர்ந்து நின்றவன், மனதில் குறைபட்டதும் உடலாலும் குறைபடுகிறான். இனி அவனால் நேராகப் பார்க்க முடியாது.
சர்வ நிச்சயமாக மழைப்பாடலின் அந்த ஓநாயைத் தொடர்ந்து போகும் அத்தியாயத்தை எழுதிய போது பிரயாகையில் இப்படி ஓர் இடம் வரும் என்று ஜெ ஊகித்திருக்க வாய்ப்பே இல்லை. உண்மையில் அவரை மீறிய புனைவின் எழுச்சி தான் இதையெல்லாம் சாத்தியமாக்குகின்றன. 


முதற்கனலில் அம்பை பீஷ்மரிடம் தன்னை ஏற்றுக் கொள்ளச் சொல்லி பேசுமிடத்தில், அவர் சுயம்வரத்தின் போது அம்பை வாள் தூக்கியதும் இப்படித் தான் ஓர் சக்கரவர்த்தினி இருக்க வேண்டும் என்ற பெருமிதத்தில் அவளை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்ததைச் சொல்வாள். அந்த சுயம்வர அத்தியாயத்தில் இந்த நிகழ்வு வெறும் ஒரு வரியில் சொல்லப்பட்டிருக்கும். அந்த சுயம்வர அத்தியாயம் முடிந்து பல அத்தியாயங்களுக்குப் பிறகே அம்பை பீஷ்மர் சந்திப்பு நிகழும். அந்த வரி எப்படி அம்பையின் கூற்றாகக் கச்சிதமாக வந்தது என்று பல நாள் வியந்திருக்கிறேன். அதையெல்லாம் ஒன்றுமேயில்லை என்று தோன்ற செய்து விட்டது இந்த அத்தியாயம். 

அருமை, அருமை ஜெ.
அன்புடன்,
அருணாச்சலம், நெதர்லாந்து.


அன்புள்ள அருணாச்சலம்

அந்த ஓநாய் வேறு. அதற்கு வேறு பெயர் இருந்தது. ஆனால் உங்கள் வாசிப்பு சரி. அந்த ஓநாயும் இதுவும் ஒன்றுதான். ஓநாய்களை ஒரே ஓநாய்க்கூட்டமாக காணலாம்

ஜெ