Tuesday, November 18, 2014

பிரயாகை-19

அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

இயற்கை மென்மையானது, செயற்கை வன்மையானது என்று மனம் நினைக்கின்றது. காரணம் ஒரு யானையைப்பார்க்கும்போது அதன் பிரமாண்டத்தைத்தாண்டி அதனிடம் உள்ள ஒரு குழந்தைத்தனத்தை மென்மை என்று மனம் எண்ணிக்கொள்கின்றது. செயற்கையாக செய்யப்பட்ட ஒரு சாண் கத்தி அல்லது ஒரு பிஸ்டல் மனதில் அதன் பயங்கரத்தை ஏற்படுத்தி பயம் கொள்ள வைத்துவிடுகின்றது.

ஒரு யானைப்பாகனைப்பார்த்து பயம் இல்லை அதற்கும்மேலாக பாசக்காரநாய்போல மனம் அவன்பின்னால் ஓடுகின்றது.
பிஸ்டலோ கத்தியோ வைத்திருப்பவன் உயிர் நண்பனாக இருந்தாலும் தனித்திருக்கும்போது மனம் கல்லுக்கு முன்னாடி நிற்கும் பயம்கொண்ட நாய்போல வாலை பின்னங்காலுக்குள் ஒடுக்கிங்கொண்டு சுவரோடு ஒட்டுகின்றது.  

உண்மையில் துளி அளவு இயற்கையை கட்டுப்படுத்தும் எந்த ஆற்றலும் நம்மிடம் இல்லை. நமக்காக இயற்கை பணிந்ததுபோல் கிடக்கிறது. ஸ்கட் ஏவுகணை எறியப்பட்டாலும் அதைத்தடுக்க பேட்ரியாட் ஏவுகணை உள்ளது என்பதுதான் நிஜம்.

துருபதன் தேவப்பிரயாகைக்கு செல்லும் மலைப்பயணம் ஒரு இயற்கையின் தரிசனம்போல மென்மையானது என்ற பாவனை இருந்தாலும் அதன் பெரும் சீற்றம் கண்டு சிலிர்க்கின்றேன்.
// பெரிய பாறை ஒன்றை உந்தி ஏறிய ஒருவன் அப்பாறையுடன் உருண்டு கீழிறங்கினான். அவன் அலறல்கூட ஒலிக்கவில்லை. இரண்டாம் முறை உருண்ட பாறையில் அவன் ஒரு குருதிப்பூச்சாக படிந்திருந்தான். யானை போல மெல்ல நடந்து சென்ற கரும்பாறை கீழே ஒரு பாறையில் முட்டி அதிர்ந்தது. பின் இருபாறைகளும் முனகல் ஒலியுடன் கீழிறங்கின. மிக ஆழத்தில் அவை பல பாறைகளாகப் பெருகி ஓர் அருவி போல சென்று கங்கையில் ஒன்றன்பின் ஒன்றாக விழுந்து வெண்மலர்போல அலை எழுப்பின//

மனிதன் இயற்கையை காலம் காலமாக ஏன் வணங்கிக்கொண்டு இருக்கின்றான். அதன் அழகு, மென்மை, உயிர்த்தன்மைக்கு அப்பால் உள்ள இரக்கமே அற்ற கொடூரம் மனிதனின் அறிவைத்தாண்டி அதனிடம் சரணடையச்சொல்கின்றது. பயம் மட்டும் பத்தியாகிவிடவில்லை. பயம் இல்லாத ஒரு நிலையும், பயத்தை உண்டாக்கும் ஒரு நிலையும் கொண்ட இயற்கையின் மையத்தில் உள்ள தெளிவை. அசைவின்மையை, நிலையாண்மையை தரிசிக்கவே மனிதன் பக்தியை, வழிப்பாட்டை கையால்கின்றான். இயற்கையின் அந்த அசைவின்மையை தொடும் புள்ளியல் மனிதன் அதனை கட்டிவைத்துவிட்டதாக மகிழ்கின்றான்.

திரு ஜெ இந்த பிரயாகை-18ல் இரண்டு நதிகளைக்காட்டுகின்றார். ஒன்று பாகீரதி, மற்றொன்று அளகநந்தை. பாகீரதி வெப்பத்துடன் சீறிப்பாயும் தன்மை உடையது, கனம் அற்றது.  அளகநந்தை குளிர்ந்தது, கனமானது, தவழ்வது. இரண்டும் கலக்கும் அந்த மையத்தில் இரண்டும் இல்லாமல் ஆகின்றது. சமநிலையை கண்டடைவது அது.

இரண்டு நதிகளின் இருவேறு ஆடல்களையும் கண்டு, அவைஇரண்டும் ஆடல் இல்லா ஒரு நிலையில் நிற்கும் இடத்தை தரிசித்து அந்த இடத்தில் எண்ணங்களை இழந்துப்போக செய்து புதுபிறவி எடுக்க நினைத்த அந்த ஆதி மனிதனை இப்போது வணங்குகின்றேன்.
 //பாகீரதியில் இறங்கவேண்டும். பாகீரதியின் கொந்தளிக்கும் நீர்வழியாகவே சென்று ஆழத்தில் ஓடும் அளகநந்தையின் அமைதியான நதியை தொட்டறியவேண்டும்//

பகீரதியை ஜெ அறிமுகப்படுத்தும் அந்த காட்சியில் மகிழ்கின்றேன். //பாகீரதியின் பெருக்கு அருவியொன்றை கிடைமட்டமாக பார்ப்பதுபோலிருந்தது.//  வாசகனை பாகீரதியின் கரையில் கொண்டுபோய் நிறுத்தும் எழுத்து.

பாகீரதியை ஜாக்ரதி என்றும் அளகநந்தையை ஸ்வப்னை என்றும் யோகநூல்கள் சொல்கின்றன என்பதின் மூலம்  நதி என்னும் படிமம் வழியாக எண்ணங்கள் விளையாடும் விளையாட்டைக்கண்ட நம்முன்னோர்களின் யோகத்தை இந்த நேரத்தில் வணங்கியும், வாழ்தியும், நன்றி சொல்லியும் மகிழ்கின்றேன். அத்தனை பெரும் நன்றியும் வெண்முரசுக்கும் அதன் ஆசிரியருக்குமே உரித்தன.

அகதரிசனங்களை உருவதரிசனமாக்க  செயற்கையை தேர்ந்து எடுக்காமல் இயற்கையில் அதைக்கண்டு கொண்ட ஞானிகள்  மாறாத இயற்கை இறைவன் என்றது எத்தனை உயர்வானது.

ஜாக்ரதியில் கொந்தளிக்கும் சூடான எண்ணங்கள் துள்ளிப்பாயவும், ஸ்வப்னையில் குளிந்த எடைக்கொண்ட எண்ணங்கள் அசைந்துக்கொண்டு இருக்கவும் உடல் உணர்ந்துக்கொண்டுதான் இருக்கிறது. அவை இரண்டும் கலக்கும் இடத்தில் சூடும் குளிச்சியும் இல்லாமல் நிதானம் எற்படுகின்றது. அதில் மனிதன் மூழ்கி குளித்தலே உண்மையான நீராடல். அதுதேவபிரயாகை நீராடல். ஏழுவகையான பாவங்கள் தீர்க்கும் நீராடல்.

பிரயாகை-19ல் கதை மலைப்பாதையின் ஒத்தையடிப்பயணம்போல எந்த வித உற்சாகம் இல்லாமல் சோகை ஊர்வலமாக இருந்தாலும் அதன் அடியில் உள்ள ஞானத்தின் பயணம் பெரும் அர்த்தங்களால் நிறைந்து இருக்கிறது.

காசிக்குப்போனாலும் கருமம் தீராது என்பதுபோல, குளிக்கசென்று செற்றைப்பூசிக்கொண்டதுபோல துருபதன் இருண்ட தனது அகத்தை பாகீரதி கரையில் எழுந்த, எழுப்பிய பெரும் நெருப்பு மூலம் அகற்ற புதுவழியை கண்டுக்கொள்வது. என் வஞ்சத்தைக்கரைக்க முடியாது என்பது எல்லாம் மனித மனத்தின் மற்றொரு நாடகத்தொடக்கம். ஞானம் உண்மையை சொன்னாலும், மனித அகங்காரம் தனது ஜாக்ரதில் கொந்தளிக்கவே செய்கின்றது. திரு.ஜெவால்தான் இத்தகைய காட்சியையும் உருவகத்தையும் உருவாக்க முடியும்போலும்.

ஜாக்ரதியில் உள்ள எண்ணங்கள் வெப்பத்துடன் சீறிப்பாய்ந்து செல்லக்கூடியது என்பதே கடும் முரட்டுதனத்தின் அடையாளம். பாகீரதி நதியாக இருந்த இந்த துருபதனின் ஜாக்ரதியின் எண்ணங்கள், நீர்த்தன்மையில் இருந்து மாறி அதன் வெப்பம் மட்டும், அதன் தீ சுவாலைமட்டும் கொழுந்துவிட்டு எரியும் அகமாக தன்னை மாற்றிக்கொள்கின்றான் என்பதைத்தான் அந்த தீ வளர்த்தல் படிமம் காட்டுகின்றது.

//நெருப்பு எழுந்துகொண்டே இருந்தது. ஒருகட்டத்தில் செந்தழலால் ஆன கோபுரம் போல அதன் அடிவிரிவு விறகடுக்குமேல் எழுந்து நின்றது. அதன் தழல்நுனிகள் இருளுக்குள் நெளிந்து துடித்தன. அருகே இரு கைகளையும் விரித்து மெல்ல ஆடியபடி துருபதன் நின்றார்//

நீரும் நெருப்பும் என்பார்கள். நீர் நெருப்பாகுகின்றது இங்கு. நீரில் இருந்து மின்சாரத்தை மட்டும் எடுப்பதுபோல, போருக்கு பின்பு தனது ஜாக்ரத்தை இழந்துவிட்டு தனது ஸ்வப்னத்தில் கிடந்து துருபதன் அடிக்கடி “குளிர்கிறது..குளிர்கிறது“ என்று ஏன் சொன்னான் என்பது புரிகின்றது. அவனே ஒரு அளகநந்தையாக ஆகி இருந்து இருக்கிறான்.

துர்வாசரின் தரிசனத்திற்கு பிறகு அவன் பாகீரதியாகி விட்டான். மீண்டும் அவனுக்கு அளகந்தைக்கு போக விருப்பம் இல்லை.  பாகீரதியின் வெப்பத்தை மட்டும் அள்ளிக்கொண்டான். என்னுள் நெருப்பே எழுகிறது…. என் அகத்தில் பாகீரதி மட்டுமே உள்ளது.”
துருபதன் என்னும் பாத்திரம் எத்தனை நேர்த்தியாக வடிக்கப்பட்டு உள்ளது. நமக்குள் ஓடும் பாகீரதி துளியின் துளி என்றால், துருபதனுக்குள் ஓடும் பாகிரதி கிடைமட்டத்தில் ஓடும் பெரும் அருவியேத்தான்.

பாகீரதியாகிவிட்ட துருபதனை பார்க்கும்போது சிவபெருமான் பாகீரதியை தலையில் கட்டி வைத்து அளவாக விடுகின்றார் என்பது எத்தனை பொருள் நிறைந்தது.

மனிதன் ஜாக்ரத்தில் பாகீரதியாகவும், ஸ்வப்பனத்தில் அளகநந்தையாகவும் இருக்கிறான்.  ஞானிகள் பாகீரதி, அளகநந்தை இணையும் தேவபிரயாகையில் முழுகி எழுகிறார்கள். மகாதேவனாகிய சிவபெருமான் பாகீரதியையே கட்டி வைத்துவிடுகின்றார்.

நன்றி
அன்புடன்
ராமராஜன்மாணிக்கவேல்.