அன்புள்ள ஜெ
பிரயாகையின் பெருக்கை வாசித்துக்கொண்டிருக்கிறேன். தெரிந்த கதையை இத்தனை உத்வேகமாக வாசிக்கமுடியுமா என்றே ஆச்சரியமாக இருக்கிறது. உண்மையில் இத்தனை நுட்பமான சிக்கல்கள் இதில் இருப்பதே இதுவரைக்கும் தெரியவில்லை .
துரியோதனன் வசுதேவரின் மணவன் என்று மகாபார்தம் சொல்கிறது. அதை அப்படியே பின்னிப்பின்னி கொண்டுவந்து ஆணவம் மிகுந்த அவன் சந்தர்ப்பச் சூழல்களால் அவமதிக்கப்படும் காட்சியை வந்து சேர்ந்து ஆழமான அதிர்வுகளை உண்டுபண்ணிவிட்டீர்கள்.
உண்மையில் துரியோதனன் பக்கம் நியாயம் இருப்பதுபோலத் தோன்றிவிட்டது. எல்லா கசப்புகளுக்கும் அடியிலே இப்படி உண்மையான ஒரு காரணம் நியயமான ஒரு காரணம் இருக்கத்தான் செய்யும் இல்லையா?
மகாபாரதத்தில் இல்லாதவற்றை உங்கள் கற்பனை மூலம் நிரப்பி முழுமையான கதையாக ஆக்கியிருக்கிறீர்கள் என்று தெரிகிறது. அந்த வேகம் ஆச்சரியப்படுத்துகிறது. மகாபாரதமே நன்றாகத் துலங்கி வருவதுபோலத் தோன்றுகிறது
அந்த இடத்தில் ஒவ்வொருவரும் அவரவர் நியாயங்களைத் தான் சொல்கிறார்கள். நியாயம் நியாயத்தை வீழ்த்திவிட்டது. வன்மம் மட்டும் மிச்சமாகிறது. அதுதான் வாழ்க்கை
சண்முகானந்தம் சென்னை