அன்புள்ள ஜெ,
உங்கள் வருகை மகிழ்ச்சியும் நம்பிக்கையும் அளிக்கிறது.
புரிந்து கொள்கிறேன். இதை முன்னரே சொல்லியிருக்கிறீர்கள். முதற்கனலின் பீஷ்மரும் சிகண்டியும் ஒப்பிட்டு கேட்கப்பட்ட கேள்விக்கு. உன்மையில் பீஷ்மரெல்லாம் சிறிதளவே காட்டப்பட்டிருக்கிறது - அம்பையை தூக்கி வரும் போதும், சாந்தனு காட்டில் பீஷ்மரை முதலில் பார்க்கும் போது. அவரின் திறன் பற்றிய பேச்சுக்கள் தான் ஓடி கொண்டிருக்கிறது. 'பாரதவர்ஷத்திலேயே.. அக்னிவேசர், பரசுராமர், சரத்வான், பீஷ்மர்...' என்று. அப்படி என்றால் அவரது பராக்ரமம் எல்லாம் இனிமே தான் காட்டப்படும் என்று புரிந்து கொண்டேன்.
ஒப்பு நோக்க பீஷ்மருக்கு நிகரான துரோணரின் பாத்திரம் முழு திறனையும் காட்டிவிட்டது. இனி அங்கங்கே சிறு சிறு சித்தரிப்புகளை காட்டினாலே போதும். நீர் துளியை சுன்டி உடைத்து அதில் தெறிக்கும் ஒரு சிறு துளியை மீண்டும் உடைப்பது போல.
ஆனால் நான் சொல்லவந்தது அது மட்டுமல்ல. தருமனின் நிலைதடுமாறுகிறது என்றால் அவன் நிலைதடுமாற அவன் அறத்திற்கு என்ன அறைகூவல் விடுக்கப்பட்டது என்று தான் யோசித்து கொண்டிருக்கிறேன். துரியோதன்னுக்கு பீமன் அறைகூவல் விடுக்கிறான். அர்ஜுனனுக்கு கர்ணன். தர்மனுக்கு ஒரு பயம் இருப்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. ஆனால் அந்த பயம் ஏன்? கெளரவர்களிடமா? அதை காட்டுகிறதா வண்ணக்கடல்?
ஓரிடம் உண்டு. பீமனுக்கு விஷம் கொடுக்கப்பட்ட போது. ஆனால் அப்போது கூட தருமனுக்கு பீமன் எங்கே என்று தேடுவதற்கு மேல் தருமனின் மனம் வேறு எந்த எதிர்மறை விஷயங்களையும் எண்ண மறுக்கிறது என்று தான் சொல்லப்பட்டிருந்தது. இல்லை என்றால் இப்படி சொல்லலாம். தருமன் அமைச்சர்களுடனேயே இருக்கிறான் அவனுக்கு பாரதவர்ஷத்தின் பதட்ட நிலை தெரிய வருகிறது. அது அவனில் ஒரு அச்சத்தை உருவாக்குகிறது. ஆனால் தருமனின் அறத்துடன் மோதும் விஷயங்களை அவன் இன்னும் எதிர் கொள்ளவில்லை என்று தான் படுகிறது.
ஒன்று புரிகிறது, பீமன், அர்ஜுனன், துரியோதனன் எல்லாம் அதிரடி திரைப்படங்கள். தருமன், பாண்டு, விசித்திரவீரியன் போன்ற பாத்திரங்கள் கலை படங்கள். கர்ணன் இவை இரண்டும் கலந்தது என்று நினைக்கிறேன். அதிரடி நாயகர்களுக்கான களம் இது. தருமனின் களம் இதுவல்ல.
ஒருவரின் இளமை பருவம் மிக முக்கியமானது. அவனை வடிவமைப்பது. அந்த வகையில் தருமனின் பாத்திரம் விடுபட்டுவிட்டதோ என்று தோன்றியது. ஆனால் பிரச்சனயில்லை, உங்களின் கதை கூறு முறையில் எந்த காலத்தில் இருந்தும் ஒரு ஃப்ளாஷ் பேக் போட்டு எதையும் சொல்லிவிடுவீர்கள். Hyperlink கொடுப்பது போல.
விளக்கதிற்கு நன்றி.
ஹரீஷ்
வெண்முரசு விவாதக்குழுமத்திலிருந்து