ஜெயமோகன் ஒரு வாசகருக்கு எழுதிய இந்த பதிலை படித்தேன். வாசகர்களுக்கு எழுதிய பதில்களில் இது மிகவும் முக்கியமான ஒன்றாகப்பட்டது. கதைகளில் பலரும் பலவிதமான பகுதிகளை கவனிப்பார்கள். ஆனால் அவர்களுக்கு எழுச்சி தரும் பகுதிகள் படிப்பவரின் குணாதிசயத்தை பொருத்தே அமைகிறது - அகவயமானது. அந்த வகையில் பொருளியல் உலகு சார்ந்து எழுச்சி தரும் பகுதிகளை தவிர்த்து ஆன்மிக தளத்தில் எழுச்சி தரும் பகுதிகளை இங்கு பகிரலாமா?
அதாவது நான் நேற்று இங்கு எழுதிய 'மழைப்பாடல் முக மொழி' என்னும் பதிவு லௌகீக உலகின் நுட்பம் என்று தோன்றுகிறது. ஆனால் மழைப்பாடலின் இறுதியில் சத்யவதி, அம்பிகை, அம்பாலிகை ஆகிய மூவரும் கைகோர்த்து காடேகும் போது ஒரு பெரிய கேள்வி உருவாகிறது. தன் நாட்டுக்கும் அரசாட்சிக்கும் முதல் முக்கியத்துவம் கொடுத்த சதயவதி, அம்பை சகோதரிகளை இரக்கமின்றி(நாட்டுக்காக) தூக்கி வர சொன்ன சத்யவதி, வாழ்க்கை முழுதும் பேரரசியாக இருந்தவள் ஒரு இடத்தில் அனைத்தையும் உதறிவிட்டு வனம் புகுகிறாள்.
அம்பிகை, அம்பாலிகை சகோதரிகள், இரத்த உறவு. ஆனால் அவர்களின் பாதி வாழ்வை வன்மத்திலேயே கழிகிறது. யார் மகனை அரசனாக்குவது என்ற போட்டி. ஒருவனுக்கு சிம்மாசனம் அருகில் வந்து அமரும் போது நகர்ந்து விடுகிறது, ஒருவன் அரசனாகி அற்ப காலத்தில் இறந்து விடுகிறான். அந்த இருவரும் ஆசை, பகை அனைத்தும் உதறி, உதிற்க்கப்பட்டு, வனம் புகுகிறார்கள். அவர்கள் செய்ய வேறென்ன இருக்கிறது? மானுட அகந்தையை 'புல்லடா நீ, அடங்கு' என்று ஏதோ ஒன்று சொல்லும் தருணம்.
வாழ்க்கையின் உச்சத்திற்கு சென்றவன் அங்கு ஒரு கதவிருப்பதை பார்க்கிறான் அதற்க்குள் நுழைகிறான், ஒரு புது வெளி திறக்கிறது. வாழ்க்கையில் தோற்று தோற்று கடை நிலைக்கு சென்றவன் அங்கு ஒரு கதவை பார்க்கிறான், அதற்க்குள் நுழைகிறான், ஒரு புது வெளி. வென்றவனும் தோற்றவனும் அங்கு கைகோர்த்து நடக்கிறார்கள். இது ஒரு ஆன்மீக எழுச்சி தரும் தருனம் என்று எனக்குப்படுகிறது.
நண்பர்களே, நீங்கள் வெண்முரசின் மூலம் அடைந்த ஆன்மிக அனுபவத்தை இங்கு பகிருமாறு கேட்டு கொள்கிறேன். தேர்ந்த வாசகர்களுக்கு இங்கு எழுத அதிகமிருக்கும் என்று நினைக்கிறேன்.
ஹரீஷ்
வெண்முரசு விவாதக்குழுமத்தில்