அன்புள்ள ஜெமோ
பிரயாகையின் வேகம் ஆச்சரியப்படுத்துகிறது. ஒருமாதம்கூட ஆகவில்லை. அதற்குள் துருவனில் ஆரம்பித்து எங்கோ வந்துவிட்டோம். தொடக்கம் நிலைபதறாத துருவனில். ஆனால் பிறகு அத்தனை கதாபாத்திரங்களும் நிலை பதறிக்கொண்டே இருக்கிறார்கள். துருபதன், துரோணன், அர்ஜுனன். இப்போது சகுனி
ஒவ்வொருவரும்வன்மம் கொள்கிறார்கள். அந்தவன்மங்கள் திரண்டுதான் கடைசியில் போராகிறது. ஆனால் ஒவ்வொரு வன்மத்தையும் ஒவ்வொரு வண்ணத்தில் காட்டுகிறது வெண்முரசு. துருவனைப்போல நிலைபிறழாதவனாக இருப்பவன் சிகண்டி. துரியோதனன் ஆணவத்தால் எரிகிறான். நேராகச்சென்று தன்னை பலிகொடுத்து உருமாறிக்கொள்கிறான்
துரோணர் பலவீனனாக அன்னையின் மடியில் விழுந்து அழுகிறார். அவருடையது பலவீனனின் வன்மம். துருபதனின் வன்மம் உள்ளூர ஒரு நல்லமனிதனுடையது. அவர் துரோணரை மன்னிக்கத்தான் நினைக்கிறார் அவரது மகனிடம் அவருக்கு எந்த மனமாறுபடும் இல்லை. ஆனால் முடியவில்லை
சகுனியின் வன்மம் அவருடையதே அல்ல. அது அவர் பிறந்த பாலைநிலத்தின் வன்மம். அதை ஓநாய் வழியாக காட்டியிருப்பதை எண்ணி எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை. சகுனி பன்றி என்றால் இவர் ஓநாய். இரு ஒப்புமைகளும் அபாரம்
சிவம்