Thursday, November 27, 2014

பிரயாகை-31-தாய்மையும் தந்தைமையும்




பொன்னம்பலத்தில் ரசிகையாய் இருக்கும் சிவகாமசுந்தரிதான் தில்லைதிருநகரின் வடகிழக்கில் மாகாளியாக தனித்து இருக்கிறாள்.

பெரும் நடனம் நடக்கும் இடத்தில், உலகின் பெரும் ரசிகர்கள் ஜெயஜெய கோஷமிடும் பொன்னம்பலத்தில்  நிற்கும் அன்னையின் இதயம் பெரும் அசைவின்மையில் அமிழ்ந்து மோகனபுன்னகை செய்கின்றது. அதே அன்னை தன்னந்தனியாகி அனைத்தும் எரிந்து சாம்பலாகி நிற்கும் வெட்டவெளி இடத்தில் நீள் கூர்பற்கள் தெரிய வாய்திறந்து, நிணம்வழியும் நாக்கு தொங்க, சடைபறக்க, புவி அதிர காலெடுத்து நடக்கிறாள்.  

இந்த காட்சிகள் சுட்டும் ஒரு அதிசயம் என்ன? அகமும் புறமும் ஒன்றை ஒன்று சமவீச்சோடு எதிர்த்தும் ஈர்த்தும் சுழலும் வட்டச்சுழற்சி. இந்த ஈர்ப்பில் அல்லது எதிர்ப்பில் ஒரு துளி கூடவோ அல்லது குறையவோ செய்தால் நிலைத்தடுமாறல் எற்பட்டுவிடுகின்றது.

ஒரு தாய் குழந்தையைப்பெற்றுத் தாயாகிவிட்டாலும் தாய்மையோடு இருப்பது என்பது வேறு. தாய் ஸ்தானம் கேள்விக்குறியானாலும், தாய்மை ஸ்தானம் கேள்விக்குறியாவது இல்லை. பரதன் கைகேயியை தாயாகப்பார்க்கிறான், ராமன் கைகேயியை தாய்மையோடு பார்க்கிறான்.

தாய் ஸ்தானம், தாய்மை ஸ்தானம் என்பதுபோல, தந்தையாக இருத்தல், தந்தைமையோடு இருத்தல் என்பது ஆணிடமும்  உள்ளது. ஒரு ஸ்தானத்தை நாம் அகங்காரத்தில் அடைந்தாலும், அந்த இடத்தை அகங்காரத்தால் வளர்த்து எடுக்க முடியவில்லை, அகங்காரம் இருந்த இடத்தில் அன்பு, கருணை, பாசம், அருள் என்னும் குணநலன்கள் அமர்ந்து அந்த ஸ்தானத்தை வளர்த்து எடுக்கிறது. தான் பெற்ற ஸ்தானத்தை வேறு ஒன்று வளர்த்து எடுப்பதை கண்டு கொள்ளும் அகங்காரம் தன்னை அழுத்திக்கொண்டு இருக்கும் அணைத்தையும் உதரிவிட்டு மேல் எழுந்து வந்துவிட துடிக்கிறது. நேரம் பார்த்து கொண்டு இருக்கிறது.

//மிகையாகிச் செல்பவை எதிர்த்திசைக்கு திரும்பக்கூடும் அமைச்சரேஎன்றார். “அன்பு கூடவா?” என்று புன்னகையுடன் விதுரர் கேட்டார். “ஆம், முதன்மையாக அன்புதான் எல்லை மீறலாகாது. அன்பு ஒவ்வொரு கணமும் தன் எதிரொலிக்காக செவிகூர்கிறது. நிகரான எதிரொலி எழாதபோது ஏமாற்றம் கொள்கிறது. சினமடைகிறது. அது வன்மமாகவும் வெறுப்பாகவும் திரிகிறது.”//

தந்தை என்ற ஸ்தானத்தை அகங்காரம் கொடுக்கிறது. தந்தைமை என்ற ஸ்தானத்தை பாசம்கொடுக்கிறது. பாண்டவர்களுக்கு பட்டம் கட்டவேண்டும் என்ற இடத்தில் திருதராஷ்டிரன் இடம் இருந்த தந்தைமை பாண்டவர்களுக்கு மட்டும் இல்லை பாண்டுவுக்கும் தந்தைப்போலவே நடந்துக்கொள்ள வைத்தது. தந்தைமை அனைவருக்கும் தந்தையாக இருக்கவைக்கிறது. தந்தை ஸ்தானம் பெற்ற பிள்ளைக்கு மட்டும் தந்தையாக வைக்கிறது. 

“ஒன்றுப்பெற்றால் உழக்குச்செல்லம், பத்துப்பெற்றால் பதக்கு செல்லம்“ என்று ஒரு பழமொழி உண்டு. திருதிராஸ்டிரன் 102ப்பெற்றவன். அவன் அகங்காரம் 102 மடங்கு கூடியது. அந்த அகங்காரத்தை பெரும் பாசத்தால் அடியாழத்தில் புதைத்து வைத்துவிட்டான். திருதிராஸ்டிரன் பெரும் தந்தைமை உடையவன் என்பதை திரு.ஜெ சுட்டும் இடத்தில் மனம் பதறுகின்றது.

தாய்மை நழுவும் இடத்தில் தாய் மட்டும் இருக்கிறாள். தாய் நழுவும் இடத்தில் பெண் மட்டும் இருக்கிறாள். பெண் நழுவும் இடத்தில் நான் மட்டும்  இருக்கிறது. ராமனுக்கு பட்டம் என்று கேட்டதும் கூனிக்கு முத்து மாலை பரிசுக்கொடுத்த கைகேயி தாய்மையின் நிலை. பரதனுக்குத்தான் பட்டம் என்றபோது தாய் நிலை. ராமன் காட்டுக்கு செல்லவேண்டும் என்ற இடத்தில் பெண்நிலை, தசரன் வரம்கொடுத்து காலில் விழுந்து கும்பிட்டபோதும் மாறதபோது “நான்“ என்ற நிலை.

பாண்டவர் நகர் நுழையும்போது முறைமை மீறி திருதிராஸ்டிரன் அவர்களை வரவேற்க வந்ததும், அப்படிவரும்போதே விதுரன் மகனுக்கு உடல்நிலை சரியில்லை என்பதை விதுரனுக்கே சொல்வதும். அதற்கு விதுரர் அளிக்கும் பதிலில் திருதிராஸ்டிரனின் தந்தைமை உச்சதில் உள்ளது.

//“உன் இளைய மைந்தனுக்கு நான்குநாட்களாக உடல்நலமில்லை, தெரியுமா உனக்கு? சப்தசிந்துவுக்குச் சென்ற இடத்தில் அவனை சுரதேவதை பற்றிவிட்டது. சுருதை வருந்துகிறாள் என்று விப்ரன் சொன்னான். நானே என் மருத்துவரை அனுப்பிவைத்தேன். நேற்றுமாலை சென்று அவனைப் பார்த்தேன். நெற்றியில் தொட்டால் எரிகலம் போல வெம்மை அடிக்கிறது. என்னைக் கண்டதும் தந்தையே என்றான். கண்களில் கண்ணீர் வழிந்தது. நான் அவனருகே அமர்ந்திருந்தேன். அவன் உன்னை தேடுகிறான் என்று தோன்றியது.”
அவர்கள் என்னைத் தேடுவதில்லை அரசேஎன்றார் விதுரர் புன்னகையுடன். “தங்கள் கைகள் தொட்டால் கண்ணீர்விடாத மைந்தர் எவரும் இந்த நகரில் இன்றில்லை. தங்களுக்குமேல் ஒரு தந்தையை எவரும் இங்கு வேண்டுவதுமில்லை.”//

தந்தையாக எல்லா ஆண்களாலும் ஆகிவிடமுடியும் அதற்கு உயிர் அணுவில் சக்தி இருந்தால் மட்டும்போதும். தந்தைமை ஆவது என்பது தாய்மையின் ஸ்தானம். அந்த இடத்தில் ஆண் பெண் என்ற பேதம் இல்லை. தெய்வங்களும் மகிழும் ஒரு ஸ்தானம். உலகின் மிக சிறந்த மகன்களான பரசுராமன், ராமன், பீஷ்மன், புரு, பிரகலாதன் ஆகிய யாருக்கும் தாய்மைக்கு நிகரான தந்தைமை உடைய தந்தை கிடைக்கவில்லை. அஸ்வத்தாமன் இறந்தால் இறந்துவிடுவேன் என்று சொல்லும் துரோணர்கூட பெரும் தந்தைமைக்கொண்ட தந்தை இல்லை. கண்கள் தெரியாத பெரும் மூடனாக மட்டும் இருந்து குலம் அழிய காரணமாக இருந்த திருதிராஸ்டிரன் எத்தனை பெரிய தந்தைமை உடையவன் என்பதை இன்று திரு.ஜெவின் எழுத்தின் மூலமே அறிந்துக்கொண்டேன்.
திருதிராஸ்டிரன் பாத்திரத்தை இன்று செதுக்கி இருக்கும் விதத்தில் ஜெ அவர்கள் தனது ஞானவொளியில் நம்மை நாமே திரும்பிப்பார்க்க வைக்கின்றார். தந்தையாக இருக்கின்றீர்கள், தந்தைமையோடு இருக்கின்றீர்களா? என்ற மௌனவினாவை எழுப்புகின்றார். 
எத்தனை எத்தனை வீச்சுடன், துள்ளலுடன், திசையடைக்கும் ஒளிபோல திருதராஸ்டிரன் தந்தைமை பாசம் பொங்கி வருகின்றது. இன்னும் கண்ணுக்கே தெரியாத பாண்டவர்களை இங்கிருந்தே அள்ள துடிக்கும் அவரின் கைவிரிவு. பாண்டவர்கள் கொண்டுவரும் மகுடத்தை ஒரு குழந்தை தனத்தோடு சூடிக்கொள்ள துடிக்கும் கனவு சஞ்சாரம். கண் இல்லாதபோதும், கண்ணால், காதால், உடம்பால், நாசியால், வாயால் தனக்குள் பொங்கும் தந்தைமையை பெருகவிட்டுக்கொண்டே இருக்கிறார். ஒரு இடத்தில் கூட நான் அஸ்தினபுரியின் மன்னன், குருகுலத்தவன் என்ற எண்ணம் இல்லாமல் முழுவதும் தந்தையாகியவன் என்று காட்டும் இடத்தில் ஜெவின் குறிக்கோள் நிறைவேறி நிற்கின்றது. எனக்கு அந்த இடத்தில் தந்தைமை தோற்றால் அது எந்த இடத்தில் வந்து நிற்கும் என்ற பயம் எழுந்து அலைகழித்து அழுத்தியது.  
பாண்டவர்கள் குந்தியைப்பார்க்க சென்றார்கள் என்பதைக்கூட ஏற்றுக்கொள்ளும் அந்த தந்தை உள்ளம். தலை ஒருபக்கம் சரிந்து நின்ற நிலையிலும், அதற்கு பிறகும் பீமனை அழைத்துவந்துவிட்டாயா? என்ற அவரின் ஏக்கம்.   அவர்கள் அவன் இருப்பதையே அங்கு மறந்துவிட்டார்கள் என்ற இடத்தில் விழுந்து நொறுங்கி உடைந்துவிட்டது.
திருதராஷ்டிரனின் தந்தைமை குத்துப்பட்டு இரத்தம் கக்கவிடக்கூடாது என்று நினைத்துக்கொண்டே இருக்கும்போது ஐவர் குத்திய குத்தில் சாய்ந்தவன் மீது நான்கு படையும், நகரபெரும் மக்கள்கூட்டமும் ஏறி சென்று கொடூரம் கண்டேன். அவன் வாய்சொல்கூட வாய் நசுங்கி தேர் சக்கரத்தில் அரைப்படுகின்றதுபோல் உள்ளது.
கடலின் மேல் அலைகள் ஒன்றை ஒன்று துரத்தி விளையாடும்போது, கடலின் அடியில் இருக்கும் ஒரு அசைவின்மை. புறத்தில் அலைகள் இல்லாதபோது கடலின் அகத்தில் எழும் ஒருசலனம். திருதராஷ்டிரனை கடலாக்கிவிட்டார் ஆசிரியர் ஜெ. 
நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல். 

குறிப்பு-அன்புள்ள திரு.ஜெ தாய்மை உன்பது சரி. தந்தைமை என்பது சரியா? சரியாக இருந்தால் வெளியிடவும். இந்த அத்தியாயத்தில் நீங்கள் படைத்த திருதராஷ்டிரன் அகம் உலகின் அனைத்து தந்தைகளையும் பின்னோக்கி தள்ளுகின்றது.  அவன் தந்தைகளின் தந்தை உங்கள் வார்த்தையில் சொல்வது என்றால்

 //அஸ்தினபுரியின் அமுதகலசக்கொடிக்குப்பின்னால் திருதராஷ்டிரரின் அரவக்கொடியை ஏந்திய வீரன் நடந்து வர சஞ்சயன் கைபற்றி வந்ததிருதராஷ்டிரரின் தலை அனைவருக்கும் மேலாகத் தெரிந்தது. “குருகுலத்தின் பெருங்களிறு” என்றார் சௌனகர். “நிகரென இனியொரு மத்தகத்தை பாரதவர்ஷம் காணப்போவதில்லை.” விதுரர் சற்றே சிடுசிடுப்புடன் “நாமே சொல்லக்கூடாது பேரமைச்சரே. மானுடன் தருக்குவதை தெய்வங்கள் விழைவதில்லை” என்றார்//

விதுரர் சொல்வதுபோல மானுடன் தருக்குவதை தெய்வங்கள் விழைவதில்லையோ? திருதராஷ்டிரன் பெற்றது தெய்வத்தின் கோபமோ? அவன் தந்தைமைக்கு தெய்வங்கள் வைத்த சோதனையோ? 

தெய்வங்களே கொடுத்து தெய்வங்களே புடுங்கிக்கொள்ளும் பெரும் விளையாட்டுதான் மானிட வாழ்க்கையா?  கொடுத்தாலும் புடுங்கிக்கொண்டாலும் ராமன்போல புன்னகை மாறா இதயத்தோடு வாழவேண்டுமா? 

நன்றி. 
ராமராஜன் மாணிக்கவேல்