Thursday, November 13, 2014

பிரயாகை 20அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

முதற்கனல் காமம் என்னும் ஆடைக்கட்டிக்கொண்டு காதல், மோதல் என்னும் முகங்களைக் காட்டியது. 

மழைப்பாடல் அவா என்னும் ஆடைக்கட்டிக்கொண்டு உணர்ச்சி, ஆட்சி என்னும் முகங்களைக் காட்டியது.

வண்ணக்கடல் வளர்ச்சி என்னும் ஆடைக்கட்டிக்கொண்டு கற்றல், கற்பித்தல் என்னும் முகங்களைக் காட்டியது..

நீலம்  அருளல் என்னும் ஆடைக்கட்டிக்கொண்டு  எடுத்தல், கொடுத்தல் என்னும் முகங்களைக் காட்டியது..

பிரயாகை இணைதல் என்னும் ஆடைக்கட்டிக்கொண்டு நிலைத்தல், நெளிதல் என்னும் முகங்களைக் காட்டிக்கொண்டு இருக்கிறது. 

பிரயாகையின் ஞானப்பாச்சலும்,  உண்மையின் ஒளிர்தலும், நிலைபெயராநிலையும், வெண்முரசு வெறும் கதைநூல் என்பதை பின்னுக்குதள்ளி ஞானநூல், யோகவிதைகள் சேமித்து வைக்கப்படும் காலப்பெட்டகம் என்பது தெரிகின்றது. பிரயாகை நூல் உலகில் காலக்கடலில் ஒரு கலங்கரை விளக்கமாக அமையும் என்றால் மிகை இல்லை.

ஞானப்பண்டிதனாகிய முருகபெருமானுக்கு மயூரன், மயில்வாகனன், மயில்சாமி என்ற திருநாமகங்கள் உள்ளது.

முருகன் கோவிலில் உள்ள மயில் வாயில் ஒரு பாம்பை கவ்விக்கொண்டும், காலில் ஒரு பாம்பை மிதித்துக்கொண்டும் இருக்கிறது. மயில் பிரணவத்தின் வடிவம். பாம்பு மாயையின் வடிவம். முருகன் மாயையை அடக்கும் பிரணவத்தின்மீது பயணிக்கின்றார்.

மகாவிஷ்ணுக் கையில் உள்ள சங்கு பிரணவ வடிவம். மகாவிஷ்ணு படுக்கை ஆயிரம் தலைக்கொண்ட ஆதிசேடன். மாயை வடிவம். மாகவிஷ்ணு மாயையை படுக்கையாக்கி துயில்கின்றார். மாயையின் குடையில் மகிழ்கின்றார்.

சிவபெருமான் பாம்பை மாலையாக கொண்டவர். பாம்பை ஆபரணமாகக்கொண்டவர். மாயை அவருக்கு அலங்காரம். உடுக்கை என்னும் பிரணவஒலியால் ஆடுகின்றார். 

மனித எண்ணங்கள் மாயையால் ஆனவை, அவைகளும் பாம்புபோல் ஒரு உடலோடு ஆயிரம் தலைக்கொண்டவை. அவற்றை அடக்கும் தகுதி மனிதனுக்கு இல்லை. அவற்றின் பிடியில், அவற்றின் விஷத்தில் மனிதன் மாட்டி சிக்கி தவித்து சாகின்றான்.  இதையே கண்ணன் கீதையில் பழக்கத்தால் மனதை வசமாக்கலாம் என்கின்றார். இதையே ஜெ மகுடிக்கு மயங்காத பாம்பு இல்லை என்கிறார்.

//“அரசே, மானுட உள்ளத்தை ஆயிரம்தலைகொண்ட நாகம் என்றே நூல்கள் சொல்கின்றன. ஈராயிரம் விழிகள். ஆயிரம் நாவுகள். ஆயிரம் தலைக்குள் ஆயிரம் எண்ணங்கள். அதன் ஒற்றை உடல் அவற்றையெல்லாம் இணைத்து ஒன்றாக்கி வைத்திருக்கிறது. எனினும் எவருக்குள்ளும் அவை ஒன்றுடன் ஒன்று முட்டிமோதிக்கொண்டுதான் இருக்கும்என்றார் சுஃப்ரர். “ஆயினும் அது நாகம். மகுடிக்கு மயங்கியாகவேண்டும்…”//அருணகிரி நாதசுவாமிகள்.

பரிபுர பாதா சுரேசன் தருமகள் நாதா அராவின்
பகைமயில்  வேலாயுத ஆடம்பர- என்றும்

பைத்தலை ஆயிரத்தலைமீது பீறு
பத்ர பாத நீலமயில் வீரா-என்றும்

--------------------------------------------------வெகுகோடி
நாம சம்புகுமார நமோநம
போக அந்தரி பாலா நமோநம
நாக பந்த மயூரா நமோநம-என்றும் சொல்கின்றார்.

இறைவன் மீது பக்தி கொண்டால், பக்தனுக்காக இறைவன் எண்ணங்களையும், எண்ணங்களால் விளையும் மாயையும் அழிக்கின்றான். பக்தி வேண்டாம் என்று கர்ம மார்க்கத்தில் நுழையும்போது வேதமந்திரங்களின் மகுடியில் அவை மயங்குகின்றன.  கர்மமும் வேண்டாம் என்று ஞானமார்க்கத்தில் நுழையும்போது. ரமணமகிரிஷி போன்றோராகும்போது எண்ணத்தின்  பிறப்பின் துளையையே அவர்கள் அடைத்துவிடுகின்றார்கள் அல்லது புற்றில் இருந்து வெளிவரும் ஈசலை அது தலைக்காட்டுபோதே பிடித்து நசுக்கிவிடுகின்றனர் அதனால் பறக்க முடிவதில்லை.  நான் கல்லை, மண்ணை, பொம்மையை கடவுளாக என்னும்  எண்ணமில்லாத அருவவாதி என்றால் எங்கும் நிறைந்த மாயையின் நடனத்தில் நடித்துக்கொண்டே, காளிங்க நர்த்தனத்தை நடித்துக்கொண்டு தள்ளி இருந்து ரசிக்கவும் பழகிக்கொள்ள வேண்டியது அவர்களின் கடமை.

பெரும் பெரும் ஞானத்தை கல்லில் வைத்து அதை கடவுள் என்ற திருக்கூட்டத்தில் வந்தவர்கள் நாம். எந்த ஞானமும் இல்லாதவர்கள் கடவுளை கல்லென்று சொன்னபோது ஆமாம் போட்டோம். அவர்கள் கடவுளை கல்லென்று சொல்லவில்லை, அவர்கள் சொல்வதால் கடவுள் கல்லாக ஆகிவிடுவதும் இல்லை. அவர்கள் நம் பெரும் ஞானத்தை அல்லவா கல்லென்று நம்மை மண்ணாக்கி விட்டார்கள்.

திரு.ஜெவின் பிரயாகை பாச்சலில் கறுப்புமணல் கழுவப்பட்டு, கடவுள் மூர்த்தங்கள் முகம் காட்டுகின்றன.அவற்றின் முகத்தில் ஞானம் ஒளிர்கின்றது. நன்றி ஜெ.

சிவானார் சடையை செஞ்சடை என்பதும்.  நாணல் புல்வகையில் அக்கினி என்பதும் இணைந்து இன்று பிரயாகையில் தர்ப்பைபீடம் அமைத்தல் என்னும் கதையாக வரும்போது எத்தனை அழகும், ஞானமும் யோகமும் இணைந்து கதையை  பிரபஞ்சவெளியாக ஆக்கி நடனம் புரிய வைக்கின்றது.

//“தென்திசைகொண்ட தெய்வம் தன் விரிசடையை தர்ப்பைப்புல் இருக்கையாக விரித்தது. அதில் விண்ணக கங்கை பல்லாயிரம்கோடி அருவிகள் போல பொங்கி விழுந்தாள் என்கின்றது புராணம்என்றார் தௌம்ரர்//

இன்று கண்டது மயில்வாகனன் தரிசனம், ஆதிசேஷனில் துயில்கின்ற ஆதிமூலதரிசனம், கங்கை சூடிய தக்ஷணாமூர்த்தி தரிசனம். 

நன்றி
அன்புடன்
ராமராஜன்மாணிக்கவேல்.