Sunday, November 23, 2014

வண்ணக்கடல் கடிதங்கள்

அன்புள்ள திரு.ஜெ வணக்கம். 

வண்ணக்கடல் கடிதங்களை வெளியிட்டதற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.


வண்ணக்கடல் கடிதங்கள் தொகுத்து வைத்துவிட்டு இரண்டுநாள் அனுப்புவோமா? வேண்டாமா? என்று தவித்துக்கொண்டு இருந்தேன். முன்னமே குழுமத்தில் எழுதியது. சுயபாராட்டுக்கு அலைகின்றாயா? என்று மனதில் ஒரு பயம் இருந்தது. 

வெண்முரசு விவாதத்தளத்தில் வெளியாகும் அனைத்து கடிதமும் தேவையானதாகவே இருக்கின்றது. இன்னும் எழுதமாட்டார்களா? ஏக்கமும், நீங்கள் பதில் சொல்லிக்கொண்டே இருக்கமாட்டீர்களா? என்ற பேராசையும் இருந்துக்கொண்டே இருக்கிறது. அந்த ஏக்கமும், பேராசையும்தான் துணிந்து அனுப்பு என்ற எண்ணத்தைக்கொடுத்தது. 

உங்கள் கைவண்ணத்தில் தலைப்புகள் தாங்கி வண்ணக்கடல் கடிதம் வந்தபோததான் அறிந்தேன். எனக்கே நான் நன்மை செய்துக்கொண்டு உள்ளேன் என்பதை. பிரயாகை படிக்கும்போது வண்ணக்கடலையும் தகுந்த இடத்தில் நினைவுக்கு கொண்டுவர, வண்ணக்கடல் கடிதம் உதவியது.  ஆடுதொடா இலை மாலையில் எங்கு வைக்கப்படவேண்டுமோ அங்கு வைக்கப்பட்டு மாலையானதை போல் உணர்ந்தேன். நன்றி. 


வாழ்க்கையில் இருந்துக்கொண்டே வாழ்க்கையில் ஏன் வெறுமையை உணர்கின்றோம் என்று ஒரு கேள்வி கேட்க தோன்றியது நேற்று. அந்த கேள்விக்கு பதில்போல இன்றைய பிரயாகை-26 அமைந்து உள்ளது.  எனது அகக்கேள்விக்கு பதிலாகவே இந்த பகுதியை எழுதினீர்களோ என்று வியந்தேன். 
//அவன் நீர்ப்பெருக்கு போல உருமாறுவதன் வழியாகவேமுன்னேறிச்செல்பவன்உருமாறாதபோது தேங்கி அழிபவன்.”
பேசிப்பேசி அந்த வரியை கண்டடைந்ததும் ஊஷரரின் குரல் எழுந்ததுநீரோடைதான் மானுட அகம்ஒவ்வொரு தடையையும் ஒவ்வொருதடத்தையும் அது தன்னை மாற்றிக்கொள்வதன் வழியாகவே எதிர்கொண்டுகடந்து செல்கிறதுபாறைகளில் துள்ளுகிறதுபள்ளங்களில் பொழிகிறது.சமவெளிகளில் நடக்கிறதுசரிவுகளில் விரைகிறதுநாம் நமது மாயையால்அதை நதி என்கிறோம்ஓடை என்கிறோம்கங்கை என்கிறோம்யமுனைஎன்கிறோம்கிருதரேஅது ஒவ்வொரு கணமும் ஒன்று என  நாம் அறிவதேஇல்லை.”//

உடம்பு என்ற இடத்தில் எல்லாம் வாழ்க்கை என்று போட்டுப்பார்த்தால், அப்படியே வாழ்க்கைக்கு பொரும் இந்த அத்தியாயம், வாழ்க்கையையும் ஒரு துளி நீர், வழிவதல் வழியாக உருவாக்கும் வடிவம்தான் என்பதை புரிந்துக்கொண்டால் எவ்வளவு நன்மை உண்டாகும் என்று நினைத்தேன். 

கவிக்கோ அப்புல்ரகுமான் ஒரு இடத்தில், “தாவரத்தின் வேர்கள் பாறைகள் தடுக்கும்போது, பாறைகளுடன் முடிக்கொண்டு நிற்பதில்லை, பாதையை மாற்றிக்கொள்கின்றன” என்று சொல்கின்றார்.  அந்த மாற்றம்தான் அவவைகளுக்கு வாழ்க்கையில் பிடிப்பை தருகின்றது. மனிதன் முட்டிக்கொண்டு மண்டையை உடைத்துக்கொண்டு வாழ்க்கை சரியிலலை என்கின்றான்.
//அவன்  நீர்ப்பெருக்கு  போல உருமாறுவதன் வழியாகவே முன்னேறிச்செல்பவன்உருமாறாதபோது தேங்கி அழிபவன்.” இந்த இடத்தில் ஒன்று நினைவுக்கு வந்து வந்து சிந்தனையை தூண்டுகின்றது. 

காஷ்மீர் பயணத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க வரிசையில் நின்று அருகில் செல்லும்போது பின்னுக்கு சென்று நில் என்ற முஸ்லீம் காஷமீரியின் சொல்கேட்டு மாறா முகத்துடன் பின்னால் சென்று நின்ற உங்களையும் அந்த கணநேர வாழ்வையும் நினைத்து நினைத்துப்பார்த்தேன்.கைகேயி காட்டுக்கு செல் என்றதும், சரி என்று சொல்லி சித்திரத்தில் எழுதிய கமலம்போல் முகம் கொண்டு திரும்பிய ராமனை நினைக்கிறேன்.  அந்த கணநேரத்தை கையாள முடியாத என்போன்றவர்கள். முன் கணவாழ்க்கையும், இந்த கணவாழ்க்கையும் ஒன்று என்றுதான் நினைக்கின்றோம். ஒவ்வொரு கணமும் ஒன்றுஎன்பதுதான் நிஜம். 

“மனிதனுக்கு தேவை மாற்றமில்லை. விழிப்புணர்வே” என்று ஜே.கிருஷ்ணமூர்த்தி சொல்வது. ஒவ்வொரு கணமும் ஒன்றாக இருக்கும் அந்த மாற்றத்தை விழிப்புணர்வின் மூலமே சரியாக பயன்படுத்தி கொள்ளமுடியும் என்பதாக உள்ளது. 

ஒவ்வொரு கணமும் ஒன்று என்று நீங்கள் சொல்லிவிட்டீர்கள். மூன்று வார்த்தைதான் எளிதாக புரிகின்றது. இதை வாழ்க்கையாக்க ஒரு ஜென்மம் பத்த வில்லை ஜெ.
நன்றி
ராமராஜன் மாணிக்கவேல்