Sunday, November 30, 2014

முள்மாலைஅன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

காவியங்களில் பெரும் உருவங்களை நிலைநிறுத்துவதற்கு யானைகளை மாலையாக அணிந்துக்கொண்டு இருக்கும் உருவம் என்று வர்ணிப்பார்கள். இந்த பகுதி பிரயாகை-33 எனக்கு இப்படி தோன்றுகின்றது. யானை அளவுள்ள முள்ளம் பன்றிகளை மாலையாக கோர்த்து அணிந்துக்கொண்டால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது. இந்த பகுதியில் தோன்றும் அனைவரும் எண்ணமுட்கள் சிலிர்த்துக்கொள்ள முட்கள் மட்டும் நீட்டிக்கொண்டு நிற்க அவர்கள் அங்கம் அதில் மறைந்துவிடுகிறது. எண்ணங்கள் எல்லா திசையிலும் கூர் நீட்டிக்காட்டி என்னை திகைக்க வைக்கிறது.

தருமன் மீது விதுரருக்கு எத்தனை கோபம் வந்ததோ அதே அளவு கோபம் உங்கள்மீது எனக்கு வந்தது நேற்று. ஏன்? நேற்று தருமனை நீங்கள் வேண்டும் என்றே சிறுபிள்ளையாக்கி விட்டீர்கள் என்ற கோபம். எனக்கு வந்தகோபம்தான் உங்கள்மீதே உங்களுக்கும் வந்திருக்கும் இல்லை என்றால் அந்த கோபத்தை பதிவு செய்து அதற்கு விடையும் சொல்லி இருக்க மாட்டீர்கள்.

ஒரு பாத்திரத்தை சிறுமையாக்கி பெருமை படுத்தும் அந்த வித்தைதான் கதையாசிரியன் கதைமட்டும் சொல்லவில்லை ஞானத்தையும் சொல்கிறான், நீதியை விளைவிக்க கதை களத்தை பயன்படுத்துகிறான்  என்பதை அறிய வைக்கின்றீர்கள்.  அறிஞனாகவும் இருக்கும் கதையாசிரியன். பாத்திரங்கள் உள்ளத்தில் மட்டும் அல்ல வாசகனின் மனதிலும் நடந்துக்கொண்டு தனக்குள்ளும் நடக்கிறான். 

//“நீ என்ன மூடனாஅரசவையின் முறைமைகளை அறியாதவனா? // என்று விதுரர் ஆரம்பிக்கும் இடத்திலேயே வாசகன் இதயத்தை நடக்க ஆரம்பித்து விட்டீர்கள். காட்டு நாய்க்கு கூட இந்நெறியே உள்ளது என்ற இடத்தில் மலை சரிவில் இறங்கி ஓடும் வண்டியை இழுத்து நிறுத்தியதுபோல் இருந்தது. விதுரனின் பெரும் ஞானமும், பாண்டவரின் சிறுபிள்ளைத்தனமும். கூட மாடுமேய்ப்பவளுக்கு காட்டில் பிறந்த கூட்டம் என்று காட்டி, விதுரனின்  வேதனையும், பரிவும், கலந்து வெளிப்படும் கோபத்தை வாசகர்கள் மனத்தடத்தில் தடவி சுடவைக்கின்றீர்கள். காட்டுநாய் என்ற இந்த இடத்தில் குந்தியின் மீது எழும் வெறுப்பை தன்மீதே தானே துப்பிக்கொள்வதுபோல் வெளிப்படுத்தி உள்ளீர்கள்.   

//அமைச்சரேநான் எந்தையின் அகவிரிவை நம்புகிறேன்சிறுமைகளுக்கு அங்கே இடமில்லை” என்றான் தருமன்.பின்னர் சற்று குரல்தாழ்த்தி “சிறுமைக்கு இடமுள்ள ஒரு நெஞ்சு என் அன்னையுடையதுஅவர் உள்ளம்கோருவதுதான் என்ன என்று நான் எண்ணியிருக்கிறேன்//  இந்த இடத்தில் தருமனின் அகம் நிமிர்ந்து நிற்பதையும், விதுரன் உயரத்திற்கும் அதற்குமேலாக குருகுலத்தின் இளவரசன் என்ற உயரத்திற்கும் அவன் உயர்ந்து நிற்பதையும் அறிய முடிகின்றது. //இந்த அஸ்தினபுரிக்கு அவர்கள் அரசியாக வந்தது அவரது தகுதியால்அல்லஎன் தந்தை பாண்டுவின் தகுதியின்மையால்தான். இந்த மாநகரை முதலில் கண்டதுமே அவருக்குள்சிறுமையும் பெருவிழைவும் ஒருங்கே தோன்றியிருக்கும்.”// இந்த இடத்தில் தருமன் பாத்திரம் எத்தனை பெரிய அகநுட்பம். நேற்று நடந்தது எல்லாம் சிறுபிள்ளைத்தனம் இல்லை, அன்னையின் உள்ளம் என்று காட்டும் இந்த இடத்தில்தான் வாசகனை, பாத்திரங்களை,  உங்களை நீங்களே வென்று செல்கின்றீர்கள் ஜெ.

ஒரு எண்ணம் எத்தனை பெரிய அறிவுரையாக இருந்தாலும் அந்த அறிவுரை நமது அகத்தின் எண்ணமாக ஆகும்வரை அது பயன் விளைவிப்பது இல்லை மாறாக அந்த எண்ணம் வெறும் சொற்களாக காற்றில் மிதந்து கரைந்துப்போகின்றது  என்பதை காட்டுகின்றது விதுரனின் அறிவுரையும், தருமனின் செயலும். மகாபாரதம் முழுவதும் விதுரனின் அறிவுரை வெறும் சொற்களாக ஏன் அகின்றன என்பதை இன்று அறிந்தேன். 
சென்றதுமே அரசரின் கால்களைத் தொடுஅவரைத் தொட்டுக்கொண்டே இருங்கள் மூவரும்… உங்களைத்தொட்டபடி அவரால் உங்களை வெறுக்க இயலாது” என்றார் விதுரர். இங்கு ஒரு உதாரணம் காட்டுகின்றார்.வேழம் மிக எளிதில் சினம் அடங்குவது” என்றார் விதுரர். ஆனால் தருமன் அந்த அறிவுரையை வெறும் சொற்களாகத்தான் வைத்திருந்தான். அந்த சொற்கள் அவன் அகமாகவில்லை. அதன் விளைவு. தருமா,அந்தக்கையைப்பிடி… அவரை நீயே அழைத்துச்செல்” என்று விதுரர் முணுமுணுத்தார்ஆனால் திருதராஷ்டிரர்சினந்த யானையைப்போல உறுமியதைக்கேட்டு தருமன் மீண்டும் பின்னடைந்தான்//
அறிவுரைகள் எளிதில் கிடைக்ககூடியது என்று மனிதன் ஏன் நம்புகின்றான். அதை சொற்களாக மட்டும் வைத்திருப்பதால். அறிவுரைகளை சொற்களாக மாற்றக்கூடியவனுக்கு அறிவுரைகள் எளிதில் கிடைக்க கூடியவை அல்ல மாறாக புதையல்கள்.

சுருதையின் அகநுட்பம் அற்புதம்.  விதுரர் வடதுருவக்காந்தம் என்றால் சுருதை தென்துருவகாந்தம். எப்படி விலக்கினாலும் ஓடி ஒட்டிக்கொள்கிறாள். அன்னை சிவையை விதுரர் அன்னையாக மட்டும் பார்க்க, முதல் இரவு அன்று சுருவை சிவையை குழந்தையாகப்பார்த்து விதுரரை வெல்கிறாள் இல்லை விதுரரின் பாதி என்று காட்டுகிறாள். விதுரன் கற்ற நூல் எல்லாம் அறிவு எப்படி வெளியேறி வெல்கிறது என்பதைக்காட்டுகின்றது. சுருதை கற்ற  சமையல் எல்லாம் அறிவு எப்படி ஒன்றுகூடி சுவையாகிறது என்பதை காட்டுகின்றது.
//“என்ன சிரிப்புகுந்தியை அவமதிக்கும் எதையும் நான் செய்யமாட்டேன் என நினைக்கிறாயா?” என்றார் விதுரர். “அவமதிப்பு என ஏன் எண்ணவேண்டும்அது அவர்கள் அறிந்தே நிகழும் நாடகமாகக் கூட இருக்கலாமே?” என்றாள்சுருதைஅறியாமல் விதுரர் முகம் மலர்ந்தார்அதைக்கண்டு அவள் நகைத்தபடி “இப்போது தயக்கமில்லைஅல்லவா?” என்றாள்//
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். இன்னாருக்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று என்ற வார்த்தைகள் எல்லாம் உண்மையின் கூட்டில் இருந்து வடிக்கப்பட்ட தேன்.

என்னதான் அன்பு, ஒன்றுக்குள் ஒன்று, வலம் இடம் , உயிர் உடல் என்றாலும் ஒன்றை ஒன்று தாங்கள் அணிந்த இருக்கும் எண்ண முள்மாலையால் குத்திக்கொள்வதும், அந்த குத்துக்கு மருந்து தடவுவதும், அந்த குத்திலும் ஒரு சுகம் இருப்பதையும் வாழ்க்கை காட்டிக்கொண்டே இருக்கிறது.

நன்றி
அன்புடன்
ராமராஜன்மாணிக்கவேல்.