Saturday, November 29, 2014

ஜெங்கிஸ்கானும் கிருஷ்ணனும்இனிய ஜெயம்,

நான் கேட்டு, வாசித்து அறிந்த பாரதக் கதைகளில்  கிருஷ்ணருக்கும், விதுரருக்குமான உறவு  ஏரிக்கரை மென்காற்று போன்றான ஒன்றாகவே உணர்ந்து வைத்திருந்தேன்.

ஆனால்விடாக் கண்டன் கொடாக் கண்டனாக  இன்றைய கிருஷ்ணர் விதுரர் சந்திப்பு  நேர் எதிராக அமைந்து என்னை கலைத்து அடுக்கி விட்டது.  தீர்க்க சியாமர்  மரணத்தின் போது வரும்  சார்வாகனிடம் கூட  இப்படி  'தன்னிலை; அழியும்  அதிர்ச்சியை  விதுரர் அனுபவிக்கவில்லை. அவ்வகையில்  சார்வாகனிடம் கூட கிருஷ்ணனைக் காட்டிலும் கொஞ்சம் கருணை ஒட்டி இருக்கிறது போல.

கிருஷ்ணன் தான் எதற்க்காக வாழ்கிறோம்  என்பதில் எவ்வளவு தெளிவாக இருக்கிறாரோ அவ்வளவு தெளிவாக தனது எதிராளி எதற்க்காக வாழ்ந்துகொண்டிருக்கிறான்  என்பதிலும் தெளிவாக இருக்கிறார்.

தான் அவமானப் பட்டு , தனது இடம் அழிந்து தனது வம்சமே பூண்டோடு அற்றுப் போனாலும்  அச்தினாபுரியின்  வீழ்ச்சிக்கு எதிராகவே நிற்ப்பேன்  என விதுரர் சொல்லி இருந்தால்?  அப்படி விதுறரால் சொல்ல  முடியாத போதே  அவர் ஒரு 'எளிய மானுட' சட்டகத்திற்குள் விழுந்துவிட்டார்.

இதை எழுதும் இக் கணம் விதுரருக்காக என் அகம் கலங்குகிறது.

திருதுராஸ்த்ரர் ''அரசியின் ஆணை எனில் இது ஹச்தினாபுரியின்  ஆணைதான்'' என்பது  எத்தகு பெருந்தன்மை. அதை கொண்டு விதுரர்  சூழலை ஆசுவாசம் கொள்ள வைக்க முயல்வதும், கிருஷ்ணன் அதையே பீமார்ஜுனர்களுக்கு ம், தனக்குமான  செயல் ஆற்றலாக மாற்றிக் கொள்வதும்  முக்கிய தருணம்.

இரவில் ஒரு போருக்கு தயாராகும் சித்தரம் மிக்க உத்வேகம் அளிக்கும் கற்பனை உலகை ஒன்றை உள்ளுக்குள் உருவாகியது. நதி அலைகளின் சாரலில் அர்ஜுனன் பின்னிருந்து நாமும் நனைவது போல ஒரு வாசிப்பு அனுபவம்.
சிலந்தி வலையில் சிக்கிய வண்ணத்துப் பூச்சி, நீருக்குள் இறங்கும் ஆநிரைகள்போல  என ஒரே சொல்லில்  மொத்த காட்சியையும் மனதிற்குள் தைத்துவிடும் வர்ணனைகள்.

காங்கேயன்  நாணல் கட்டுகளால் படகு செய்து, நதியின் ஆற்றலை வென்று போர் செய்யும் காட்சியைக் காட்டிலும் பல மடங்கு தீவிரம் கூடிய  காட்சி அமைப்பு இது.

அங்குசம் சிறியதுதான் யானை பெரியத்துதான்  ஆனால் அங்குசம் எங்கு தைக்கிறது என்பதே முக்கியம்  என்பது எத்தகு நுட்பமான விஷயம்.

செங்கிஸ் கான் குறித்து அவனது படைகள் குறித்து வாசிக்கையில்  மிக ஆச்சர்யமான தகவல்கள் கிடைத்தன. சீனப் படை வீரர்கள்  கவசம் அணிந்தவர்கள். வலிமையான அம்பும் வில்லும் கொண்டவர்கள் . அவர்களை கானின் படை முறியடித்த விதம் அற்ப்புதம். ஆம் எதிரிகளின் பலத்தையே அவர்களின் பலவீனமாக மாற்றி அமைத்தது கானின் போர்த் தந்திரம்.

கானின் வீரர்கள், ஓடும் குதிரையில் அமர்ந்து  தூரத்தில் துள்ளி செல்லும் சிறிய இலக்கான மர்மட்கள் மீது அம்பு எய்து பயிற்சி செய்கின்றனர்.  சம வெளியின் மாடுகளின் கொம்புகளே வில். சம வெளி மானின் பின்னங்கால் நரம்பே வில்லுக்கான நாண்.  கூர் தீட்டி  சுட்டு வலுவாக்கப்பட்ட எடை குறைந்த  மூங்கில் புல்லே அம்பு.

சீனர்களின் எடை கூடிய அம்பு பயணிக்கும் இலக்கைக் காட்டிலும்  மும்மடங்கு இந்த அம்பு பயணிக்கும். சீனர்களின் வில்லைக் காட்டிலும் மும்மடங்கு எடை குறைந்தது இந்த அம்பு.

சீனர்களின் கவசம் ஒரு தடையே இல்லை. மர்மட் விட பெரிய இலக்கு  கவசம் மறைக்காத அவர்களின் முகம்.
கான் துவம்சம் செய்தார்.

கிருஷ்ணன் படகு அமைப்பது முதல் தாக்கும் இடம் வரை  அத்தனயும்  அற்ப்புதமான திட்டமிடல். மேலும் போரில் புதிய ஆயுதம். இரவில் துல்லியமாக அம்பு எய்யும் அர்ஜுனனின் துணை. கோட்டைக் கதவு திறந்துவிடும் ஸ்வர்ண பாகுவின் சகாயம் என  உள்ளங்கை வேர்வை பூக்கும் பரபரப்பு அத்யாயம். அத்தனைக்கும் மேல் அது கிருஷ்ணன் தனது  உள்ளங்கை போல தெரிந்து வைத்த்ருக்கும் நிலம்.  

உலகப் போர் குறித்து  ரமணரின் பதில் நாமனைவரும் அறிந்ததே  முதன் முதலாக அதை வாசிக்கையில்  உலகின் ஈவு இரக்கம் ஏதுமற்ற ஒரே மானுட உயிர் இவர் தான் என்று எண்ணினேன். ஆனால் நீண்ட நெடிய வாழ்வு வாசிப்பு அனுபவங்களுக்குப் பிறகு  புகை மூட்டத்திர்க்குப் பின் இலங்கும் காட்சிபோல சில விஷயங்கள் புரிகிறது.

மாற்றம் யாவும் வளர் சிதை மாற்றமே.  இயற்கையின் பேராற்றலின் முகங்களில் ஒன்று  வளர்ச்சியின் பக்கமும், ஒன்று சிதைவின் பக்கமும் நிற்கிறது, 

நாடற்ற அகதிகளின் ஆண்டாண்டுகால அலைக்கழிப்பின், துயரத்தின் கண்ணீர்த்துளிகளில் இருந்து பிறந்து வந்தவன் நான் என்கிறார் கிருஷ்ணன்.

இந்த செடி துளிர்க்க வேண்டும் எனில், முந்தய வனம் மொத்தமாக எரிந்து அவிந்து அடங்கினாலும் சரிதான் என்று தோன்றுகிறது.

கடலூர் சீனு