Tuesday, February 3, 2015

ஐவரும் உணர்வது..




திரௌபதிதிருமணத்தை பாண்டவர் நிலையில் இருந்து ஜெயமோகன் சிலவரிகளில்தான் சொல்லி செல்கிறார். ஆனால் அந்த சில வரிகள்   பாண்டவரின் சங்கட நிலையை நமக்கு தெளிவாக தெரிவித்து செல்கிறது. அவர்கள் எவரும் திருமண நிகழ்வுக்கான குதூகலம் ஏதும் இல்லாமல் இருக்கிறார்கள். அவர்கள் தோழர்கள் எனக்கூட  யாரும் அருகில் இல்லாத பெரும்  தனிமையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு தோழர்களைகூட பாஞ்சால தேசம் ஏற்பாடு செய்து தரவேண்டிய நிலையில் இருக்கிறது.  அவர்களின் சஞ்சலத்தை சொல்லும் வரிகள்.


"பாண்டவர்கள் அவர்களுக்கு யாதவ கிருஷ்ணனால் அளிக்கப்பட்ட அணிகளையும் ஆடைகளையும் அணிந்திருந்தனர். அவர்களில் பீமனிடம் மட்டுமே திருமணம் கொள்வதற்குரிய களிப்பு இருப்பதாகத் தோன்றியது. நகுலனும் சகதேவனும் நாணிக்கூசியவர்கள் போல எவர் விழிகளையும் நோக்குவதை தவிர்த்தனர். அர்ஜுனன் முகம் இறுகியிருக்க இடக்கையால் கூரிய மீசையை முறுக்கிவிட்டபடி விழிசரித்திருந்தான். தருமன் துயர் கொண்டவனைப்போல தலையை குனிந்திருந்தான்"

பாஞ்சாலி ஐவரை மணந்தது உண்மையில் பாண்டவர்கள் மீது திணிக்கப்பட்ட நிகழ்வு ஆகும்.  பீமன், நாட்டில் வாழும் மக்களின் அனைத்து செயல்களும் போலித்தனம் நிறைந்ததாக காண்பவன் என ஆகிவிட்டான். அம்மக்களின் ஒழுக்க நெறிகளும் அதன் மீறல்களும் அவனுக்கு ஒரு பொருட்டல்ல என ஆகிவிட்டன.  ஒரு அபத்தமான நாடகத்தில் தனக்களிக்கப்பட்ட பாத்திரத்தை அசிரத்தையாக செய்யும் நடிகன் அவன். எந்த நிகழ்வும் என்னை பாதிக்காது என தன்னை காண்பிப்பவன் அவன்.    'அட அற்ப மனிதர்களே! நீங்களும் உங்கள் ஒழுக்க பிரச்சினைகளும் அதற்கான் உங்கள் சலிப்பான விளக்க்ங்களும்'  என உள்ளூர எண்ணி  ஏளனப்புன்னகையோடு இருப்பவன்  பீமன்.   ஆகவே திருமணத்தில் சஞ்சலமில்லாதவனாக இருக்கிறான். அல்லது சஞ்சலம் இல்லாதவன் போல் நடிக்கிறான்.

ஆனால் இது தருமனுக்கு தன் நெறி நூல்படி வாழும் நோக்கிற்கு ஒரு பெரிய தோல்வி. உலகியல் வாழ்விற்கான நெறிகள் காலம்தோறும் இடத்திற்கேற்பவும் மாறும் இயல்புடையதுதான். இன்று  நாம் செய்வது நேற்றைய நெறிகளின்படி சரியாக இருக்கலாம்.  அதனால் அதன்படி  இன்றைய நெறிகளுக்கு மாறாக இன்று நடப்பது எவ்விதத்தில் சரியாகும்? ஆகவே தருமனை பொறுத்தவரை இந்த திருமணம் இன்றைய நெறிகளுக்கும் அவனுடைய ஷத்திரிய நெறிகளுக்கும் மாறான ஒன்று. அவன் தன் தாய் மற்றும் துர்வாசர் போன்றவர்களின் வற்புறுத்தல்களில்  தோற்று அமர்ந்திருக்கிறான்.  அவன் துயரத்திற்கு அதுவே காரணம்.

ஒரு போட்டியில் வென்றவன் என்றாவது அவமானத்தை பரிசாக பெற்றிருப்பானா? ஆனால் அர்ச்சுனன் ஆயிரம் பேர் பார்க்க போட்டியில் வென்றவன்.  இப்போதோ  அவன் ஆயிரம் பேர் பார்க்க அவமானப்பட்டு நிற்கிறான். இதற்காகத்தான் வென்றாயா? என எல்லோரும் ஏளனமாக கேலி பேசும் சொற்கள் அவன் மனதில் ஒலித்துக்கொண்டிருக்கும். இவனுக்கு இந்நிகழ்வுக்கு சாதகமாக சொல்லப்பட்ட அனைத்து வாதங்களையும் அவன் அனைவருக்கும் சென்று சொல்லிக்கொண்டிருக்கமுடியுமா?  பல பெண்களை சேர்ந்து அவன் தனக்கு நிருப்பித்துக்கொள்ள முயன்ற ஆண்மைக்கு இது பெரிய அடியல்லவா? அவன்  தன்னை கல்லாக இருக்கிக்கொள்வதன் மூலம் இக்கணத்தை கடக்க விழைகிறான்.

    நகுலன் மற்றும் சகாதேவன் இருவருக்கும் இது ஒரு திணிக்கப்பட்ட நிகழ்வு. அவர்கள் தம் தகுதிக்கு  மீறிய ஒரு பெருங்கொடையை வலிய பெறப்பட்ட ஒருவனின் திகைப்பிற்கும் சிறுமைக்கும் ஆளாகியிருக்கிறார்கள்.  

இத்திருமணம் பண்டவர் யாருக்கும் மனம் களிக்கும் ஒரு நிகழ்வல்ல. ஒருவகயில் அவர்கள் வாழ்வில் எற்பட்ட தற்செயல். இந்நிகழ்வின் விளைவிலிருந்து அவர்கள் மெல்ல மெல்லதான் வெளிவரமுடியும். அல்லது பதத்தில் தைத்து இன்னும் எடுக்கப்படாத சிறு முள் போல காலமெல்லாம் அவரகளை உறுத்தியவண்ணம் இருக்கப்போகும் ஒன்று.

தண்டபாணி துரைவேல்