இனிய ஜெயம்,
இன்றைய அத்யாயம் மற்றொரு அற்புதம். விறலி வாந்தியங்களை, அமைதிப் படுத்திவிட்டாள்.அதன் பிறகு விறலியின் குரல் வழியே பிறந்து வருவது என்ன? விறலி வழங்குவது ஆலோசனை அல்ல. கட்டளை என்றே தர்மன் அறியும் அவளது கருவிழியின் ஆழம் காட்டுகிறது.
பாண்டவர்கள் குறிப்பிட்ட பருவத்தில் திரௌபதியுடன் காமம் கொண்டாடலாம். ஆனால் திரௌபதிக்கு எல்லா பருவங்களும் காமத்தின் பருவங்களே.
ஒரு வரி வருகிறது. ஒருவன் அகத்தில் நுழைந்து பார்க்க குரு அன்றி பிறர்க்கு உரிமை இல்லை. குருவுக்கு இணையான ஒருவர்தான் மானுட அந்தரங்கத்தை வெளிச்சமிட்டு பார்க்கும் இலக்கியவாதியும். என் அகத்தில் யாரும் அறியாத தளம் என்று நான் எண்ணி இருந்த தளம் ஒன்று இன்று உங்கள் சொல்லால் ஒளி கண்டது. ஆம் அமுதூட்டும் இளம் அன்னை போல் என்னைப் பித்தேற்றி அகம் அழிக்கும் பிறிதொன்றில்லை. மடி சேர்ந்து முலை அருந்தி, இயன்றால் கருவறை புகுந்து, கரு ஆகி அனைத்தும் அனைத்தும் ஆதியாகி....போதும் இதற்க்கு மேல் சொல்லப் போவத்தில்லை. சொல்லாவிட்டாலும் வேறு ஏதேனும் நாவலில் நீங்கள் எழுதி விடுவீர்கள்.
இது ஒரு எல்லை. மறு எல்லையில் பெண் கொள்ளும் தனிமை. நான் அறிந்து எனது அந்தரங்கத் தோழியர் ஒருவர் கூட விதி விலக்கின்றி இந்த 'விருப்பத்'தனிமை குறித்து சொல்லி இருக்கிறார்கள். இதை முற்றும் அறிந்து சொல்லவில்லை எனினும். அனைத்து பெண்களும் தவறாமல் வந்து நிற்கும் இடம் இது.சமீபத்தில் எனது தோழி ஒருவர் சொன்னது 'யாருமற்ற' தனுஷ் கோடிக் கரையில் நான் மட்டும் நின்றிருக்க வேண்டும். ஒரே கணம் கற்பனையில் இந்த சித்திரத்தை மீட்டிப் பார்த்தாலே பீதி அளிக்கும் ஒன்று என விளங்கி விடும்.
ஆண் கொண்ட காமம் எல்லாம் மீண்டும் அவனது கருவறை வாசத்துக்கான எக்கம். பெண் கொண்ட காமம் எல்லாம் பேரன்னை என்பதன் படி நிலை.
இனிய ஜெயம் இதை எழுதுகையில் என் அகம் நடுங்குகிறது. என் அன்னையை மிக நெருங்கி அறிந்தவன் நான் [அல்லது அவர்கள் குறித்து எதுவுமே அறியாதவன்] கனித்த தாய்மை போல ஈடற்ற 'தனிமை' இவ்வுலகில் வேறில்லை.
கடலூர் சீனு