Sunday, November 2, 2014

பிரயாகை-10-இன்மையின் இருப்பு.


நேர்க்கோடு வரைய குறைந்தது இரண்டு புள்ளிகள்வேண்டும் என்று கணிதம் சொல்கின்றது. கணிதம் என்பதில் இருந்து இந்த விதியை பிரித்து எடுத்து வாழ்க்கை தளத்தில் வைத்து சிந்திப்போம். 

நேர்க்கோட்டின் ஆதிபுள்ளிக்கும் , முடிவுப்புள்ளிக்கும் இடையில் உள்ள இடைவெளியில் குறைந்தது ஒரு புள்ளியாவது இருக்கும் இருந்தால்தான் கோடு. அதுவே அந்த கோட்டின் நீளம் என்று கணக்கிடப்படும். ஆதி புள்ளிக்கும், முடிவுப்புள்ளிக்கும் உள்ள செயல்பாடு இந்த நடுப்புள்ளிக்கு இல்லை. செயல்பாடு இல்லாமல் இருந்தாலும் அது இல்லாமல் இல்லை. அதுவும் அந்த செயலில் இருந்துக்கொண்டுதான் இருக்கிறது.

மானிட வாழ்க்கை என்பது அகமாகும் புள்ளிக்கும்,  புறமாகும் புள்ளிக்கும்  இடையில் உள்ளகோடுதான்.  அந்த கோடு நீளமாக இருந்தாலும், குறுகலாக இருந்தாலும் இடையில் ஒரு புள்ளி இல்லாமை என்னும் நிலையோடு இருக்கின்றது. அது மாறாத ஒன்று. அது எனக்கென்றும் உனக்கென்றும், உலகுக்கென்றும், மொழிக்கென்றும், மேல் என்றும், கீழ் என்றும் மாறாதது.வாழ்வின் ஒவ்வொரு கணங்களிலும் அந்த இல்லாமையாகி இருக்கும் ஒன்றை நாம் அறிந்துக்கொண்டோ, அறியாமலோ, வாழ்கின்றோம்.

கொல் அல்லது கொல்லப்படு என்னும் இருபுள்ளிகளுக்கு இடையில் விழும் நேர்க்கோடு போர். கொன்றாலும் கொல்லப்பட்டாலும் என்ன? என்று கேட்கப்படும்போது தோன்றும் ஒரு வெறுமை இல்லாமை என்னும் அந்தப்புள்ளி இருக்கத்தானே செய்கின்றது. இல்லாமையே ஒரு இருப்பாக இருக்கும் நிலையை வாழ்க்கையில் சில தருணங்களில்தான் உணர்கின்றோம். ஆனால் ஒவ்வொரு தருணத்திலும் அந்த இல்லாமை இருப்பு இருந்துக்கொண்டே இருக்கிறது. சிலருக்கு மிக நீளமாய், சிலருக்கு மிக நுண்ணியதாய்.

துரோணர் இன்று வென்றுவிட்டார். அவரின் வஞ்சம் புறக்கணிக்கப்பட்ட கணத்தில் தொடங்கி இதோ இன்று துருபதனின் தலைக்கு அருகில் தனது பாதத்தை கொண்டுவரும் கணம்வரை தொடர்கின்றது. 

அன்று துருபதனின் முகம்முன் கையேந்தி நின்ற கணத்தில் தொடங்கி இதோ துருபதனின் முகத்திற்கு முன் தன் பாதம் இருக்கும்வரை தொடர்கின்றது. அந்த தொடக்கப்புள்ளிக்கும் இந்த முடிவுப்புள்ளிக்கும் இடையில் உள்ள கோடு வரையப்படும்போது இரண்டு புள்ளிகளுக்கும் இடையில் உள்ள  மையப்புள்ளி வெற்று இடமாக மாறுவிடுகின்றது. அந்த வெற்று இடம் பெரும் நதியின் பெரும்சுழிபோல வெற்றிடமாக மாறிவிடுகின்றது. நதி உருவாக்கிய அந்த வெற்றிடம் அந்த நதியையே இழுக்கிறது. அதை துரோணரும் உணர்கின்றார். அந்த போரில் ஈடுப்பட்ட அனைவரும் உணர்கின்றனர்.
துரோணரின் வெற்றிடம் இப்படி அமைகின்றது. //அஸ்வத்தாமன் வந்து துரோணரின் அருகே நின்றான். அவரும் விழப்போகிறவர் போல அவன் தோள்களை பற்றிக்கொண்டார்.// துருபதன் தேர்க்காலி்ல் கட்டப்பட்டு இழுத்துவரப்படும்போது விழுந்ததற்கும். வென்றபின்பும் துரோணர் விழுவதற்கும் என்ன வேற்றுமை. இருவருமே அந்த இன்மையை உணரும் தருணம்.

வெறுமையை உணரும் தருணத்தில் எல்லோரும் மண்நோக்குகின்றனர். அர்ஜுனன் மட்டும் வான்நோக்குகின்றான். //ரதத்தில் நிமிர்ந்து தொடுவானை நோக்கியபடி நின்றான்.// இது ஒரு ஆசைக்கு அப்பாற்பட்ட வெறுமை என்பதை சொல்லாமல் சொல்கின்றான். வென்றுவி்ட்டேன் அதற்கும் அப்பால் வெறும் வெளிதான், வெறும் வெறுமை, தோற்று குனிபவனுக்கு இருக்கி்ன்றேன் என்று மண் நினைவுப்படுத்துகின்றது.வென்றவனுக்கு நிமிர்ந்த அவன் தலை அன்றி மேலே ஒன்றும் இல்லை பெரும் இன்மை. வெறுமை.வெட்டவெளி மட்டும்.

தருமனுக்கு அந்த வெறுமை கண்ணீராகின்றது.பீமனுக்கு எளனபுன்னகையாகின்றது. துருபதனுக்கு பாடமாகின்றது. கர்ணனுக்கு சிந்தனையாகின்றது. துரியோதனுக்கு அகம் இருண்டதாகின்றது. அந்த வெறுமைக்குள் யார்யார் என்ன என்ன விதைகளை வைத்திருக்கிறார்களோ அதை விதைப்பார்கள்.  அந்த வெறுமையை உணரும் தருணத்தில், அந்த வெறுமையை உதரிவிட அனைவரும் நடிக்கின்றார்கள். நதியின் சுழி தனது வெற்றிடத்தை இல்லாமல் ஆக்கி மீண்டும் நதியாக கண்டதை எல்லாம் இழுத்த்து நடிப்பதுபோல அனைவரும் நடக்கின்றார்கள்.  
//இத்தகைய தருணங்களில் இயற்கையாக இருப்பவர்கள் உண்டா? அத்தனைபேரும் நடிக்கத்தானே செய்கிறார்கள்? இயல்வதே அதுமட்டுமல்லவா? அப்படியென்றால் வரலாற்றுத்தருணங்களெல்லாமே இப்படிப்பட்ட நாடகங்கள்தாமா? யாருக்காக நடிக்கப்படுகின்றன அவை? சூழ்ந்திருக்கும் இவ்விழிகளுக்காக. பாடப்போகும் சூதர்களுக்காக. பொய்யை நம்ப விரும்பும் எதிர்காலத் தலைமுறைகளுக்காக//


ஜெவும் இந்த நடிப்பில் திகைக்கின்றார். இந்த நடிப்புக்கு இதுதான் காரணம் என்று காட்டவந்து அதன் முடிவிலியில் சிக்கிக்கொள்ளாமல் தனித்துநின்று வாசகன் ஆகின்றார்.


காரணம் வாழ்க்கை நதி அந்த நடிப்பினாலேயே சமன்செய்யப்பட்டு நகர்ந்துப்போகின்றது. அந்த வெற்றிட சுழியை நோக்கியே இயங்கிக்கொண்டு இருக்கும் மானிடக்கூட்டம் அதை ஒரு அனுபவம் என்கிறது. அது ஒரு அனுபவம் ஆகும் கணத்தில் அந்த வெற்றிடம் தள்ளி மற்றொரு புள்ளிபோல் இருப்புக்கொள்கிறது. இப்படிப்பட்ட தருணங்களைத்தான் மாயை என்றும் நூல் சொல்கின்றது.. மாயைக்கு அப்பால் நிற்கும் அந்த வெற்றிடப்புள்ளி வென்றவனுக்கும் தோற்றவனுக்கும் ஒன்றுதான் என்பதை இன்றைய பிரயாகை-10 காட்டுகின்றது.
ஒரு வெற்றிடம்தான் எத்தனையோ ஆதி புள்ளியாகவும் எத்தனையோ முடிவுப்புள்ளியாகவும் நடிக்கின்றது என்பதை இந்த அந்தியாயம்  உணர்த்த உணர்கின்றேன். அதைத்தான் வாழ்க்கை என்றும் நம்புகின்றேன்.


இல்லாமையாவதை உணர்கின்றோம் என்று ஒற்றை சொல்லாக சொன்னாலும் எல்லோரும் ஒரே மாதரியாக உணர்கின்றார்களா? இல்லை.

ஒருவன் மகிழ்ச்சியில் உணர்கின்றான். ஒருவன் கண்ணீரில் உணர்கின்றான். ஒருவன் பலத்தில் உணர்கின்றான். ஒருவன் தோல்வியில் உணர்கின்றான். ஒருவன் வென்றும் தோல்வியாகி உணர்கின்றான். ஒருவன் தோற்றும் பாடமாக உணர்கின்றான். ஒருவன் சொல்லில் உணர்கின்றான். ஒருவன் சொல்வதால் உணர்கின்றான். ஒருவன் மௌனமாகி உணர்கின்றான்.

இல்லாமையின் இருப்பாய் இருக்கும் இந்த பிரயாகை-10 வாழ்க்கையின் அனைத்து கணங்களும் போர்தான். போரின் முடிவு வெற்றியும் இல்லை தோல்வியும் இல்லை. இல்லாமையின் இருப்பு என்கின்றது. அதைத்தான் இறைவன் என்கின்றோமா?

சமையல் கூடத்தில் சமையல் செய்யும்போது வண்ணக்கடலில் // மனிதர்களைக்கொல்வதைப்போலஇழிசெயல்ஒன்றுமில்லை.இங்கேநின்றுஅன்னம்எழுவதைக்கண்டஒருவன்உடல்என்பதுஎத்தனைமகத்தானதுஎன்பதைஉணர்வான்.ஒருதலையைகதையால்உடைக்கசிலநொடிகள்போதும்.அந்தத்தலையைஅதன்தாய்பெற்றுஉணவூட்டிவளர்த்துஎடுக்கஎத்தனைநாட்களாகியிருக்கும்.எத்தனைஅடுமனையாளர்களின்உழைப்பால்அந்தஉடல்வளர்ந்துவந்திருக்கும்// என்று சொல்லும் பீமன்தான். கதையை கையில் எடுத்ததும் அதை ஒரு சுற்றிச்சுற்றி “இது முதலில் உடைக்கும் தலையாருடையது?” என்று களிப்பேசி சிரிக்கின்றான், யோசிக்கின்றேன். இன்று // கதையைச் சுழற்றி நிலத்தில் ஊன்றியபடிகளத்தில் நெறியென ஏதுமில்லை மூத்தவரே, நாம் வெறும் விலங்குகள் இங்குஎன்றான் பீமன். அவன் உடலில் இருந்து உறைந்து கருமைகொண்ட குருதி சிறிய கட்டிகளாக இரும்புக் கவசத்தில் வழுக்கி உதிர்ந்தது. சளிபோல வெண்ணிறமாக மூளைத்திவலைகள் ஒட்டியிருந்தன.// 


பீமனின் அந்த ஆரம்ப புள்ளிகும் இந்த இருதிப்புள்ளிக்கும் இடையில் இருப்பது பீமனின் வாழ்க்கை. அவன் உணர்வது வெறுமை.அந்த வெறுமையை நிரப்பத்தான் மேல் உலகம் செல்கையில் கொன்றவர்களை தழுவுவேன் என்கிறான். அங்காவது அந்த வெறுமை நிரம்புமா? .

அடுமனையில் ஒரு தாயாய் நின்றவன். களத்தில் விலங்காய் நிற்கின்றான். மனிதனைப்பொருத்தவரை, பாதி தெய்வம் பாதி மிருகம் என்பது இல்லை. மனிதன் என்பவன் ஒரு புள்ளியில் தாய், மறுபுள்ளியில் மிருகம். அந்த இருபுள்ளிகளுக்கு இடையே உள்ள தூரம் என்ன? இல்லாமை எண்ணும் இருப்பு.


குணம்நாடி குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்கக் கொளல் –என்கின்றார் வள்ளுவர்.


குணம் தாய் தன்மையம், குற்றம் விலங்குத்தம்மையும் கொண்டு உள்ளது. இந்த இரண்டுக்கும் இடையில் உள்ள இன்மையின் இருப்பு தெய்வமாக நிற்கின்றது.

அது மனிதன் தாய்மை உடையவன் என்று மகிழவும் இல்லை, மனிதன் விலங்கு தன்மை உடையவன் என்று வருந்தவும் இல்லை. தாய்த்தன்மை இருந்தால் பால்சுவையும், மிருகத்தன்மை இருந்தால் குருதிச்சுவையும் பெற்று மானிடம் மகிழட்டும் என்று இல்லாமல் இருக்கும் தெய்வம் இதைக்காட்டிப்போகின்றது. பாலும் ஒரு கட்டத்தில் புளிக்கிறது. குருதியும் ஒரு கட்டத்தில் வெறுக்கிறது. அப்போது மனிதன் அந்த வெறுமையில் வந்துதானே விழவேண்டும். 

வெற்றிப்பெற்ற அர்ஜுனன் பெற்றது என்ன? தோல்விப்பெற்ற துருபதன் பெற்றது என்ன? அறம் என்று சொன்ன தருமன் பெற்றது என்ன? அறமாவது மண்ணாவது என்ற தூள்கிளப்பும் பீமன் பெற்றது என்ன? வஞ்சம் தீர்த்துக்கொண்ட துரோணர் பெற்றது என்ன? வஞ்சிக்கப்பட்ட துருபதன் பெற்றது என்ன? முன்னால் சென்று பின்னால்வந்த துரியோதன் பெற்றது என்ன? பெரும்தோல்வியை ஒரு கணம் பெரும் வெற்றியாக்கிக்காட்டிய கர்ணன் பெற்றது என்ன? எதுவுமே செய்யாமல் நின்ற அஸ்வத்தாமன் பெற்றது என்ன? எதுவும் இல்லை. இல்லை என்று சொல்லும் அந்த விதையில் இருந்துதான் அவர்கள் அத்தனைபேரும் எதிர்காலத்திற்காக விதையை விதைக்கிறார்கள். இல்லாமையில் இருந்து எடுத்து இல்லாமையில் விதைத்து இல்லாமையாகும் பெரும்போருக்கு வாழ்க்கை என்று பெயர். 


முன்கணம்வரை பெரும் வெற்றியின் இருப்பிடமாக இருந்த அர்ஜுனன் இந்த கணத்தில் பூஜ்ஜியம். பெரும்தோல்வியின் பிடியில் இருந்த துருபதன் இந்த கணத்தில் பூஜ்ஜியம். எத்தனையோ இரவாக தூங்காமல் இருந்த துரோணர் இந்த கணத்தில் பூஜ்ஜியம். இது முதல்போர் நாம் யார் என்று  நிருபிக்கவேண்டும் என்று நினைத்த தருமன் பூஜ்ஜியம். இது முதல்போர் நாம் யார் என்று நிருபிக்கவேண்டும் என்று மந்தனமாக செயல்பட்டு தோல்வியில் விழுந்த துரியோதனனும் பூஜ்ஜியம். வென்றேனா? தோற்றேனா என்று அறியாமல் பாதி விழிமூடி நிற்கும் கர்ணனும் பூஜ்ஜியம். இந்த பூஜியத்தில் சென்று சென்று விழுவதைத்தான் வாழ்க்கை என்று சொல்கின்றோமா? அந்த பூஜியத்தை மீண்டும் மீண்டும் உருவாக்கிக்கொள்வதைத்தான் வாழ்க்கையின் ஆடல் என்று சொல்கின்றோமா?  ஆடியின் பிம்பம்போல அங்கு எல்லா காட்சியும் நடக்கின்றது ஆனால் அங்கு யாருமே இல்லை.


இல்லாமை என்னும் இருப்பு இதைத்தான் மனிதனுக்கு காட்டுகின்றது. அதை வானுக்கு உரியது என்று மண்ணில் உள்ள மனிதன் நினைக்கிறான். அது மனிதனுக்கு உரியது என்று வானானவர்கள் சொல்கிறார்கள். இருவரும் பேசுகிறார்கள் ஆனால் சத்தம் மட்டும் இல்லை. பெரும் போரில் அந்த சத்தம்தான் சத்தமில்லாமல் ஒலிக்கிறது.   


ஓன்றில் ஒன்று கழித்தால் பூஜியம், வாழ்க்கையும் போரும் பூஜித்திற்காகத்தான் எத்தனை வடிவில் கழித்து கழித்துப் பார்க்கிறது.  


நன்றி
அன்புடன்
ராமராஜன்மாணிக்கவேல்.