இருகூர்வாள்
கொண்டு கிழிக்கின்றீர்கள் என்று நினைத்தேன். இருகூர்வாள்மேல் நடக்கின்றீர்கள்.
அகம்
புறம் என்ற பெரும் இருமைகளால் ஆனது பிரபஞ்சம். இந்த இருமைகளை பிரித்தால் அகத்தின்
அகம், புறத்தின் புறம் என்று பிரிக்காலம்.
அணுவையும்
பிரிக்கமுடியும் என்பதால் இந்த இருமைகளின் பிரவுகள் மேலும் மேலும் பிரிந்து
தனியொன்றாக வந்து நின்றுவிடும்.
தனியொன்றை
பிரித்தால் தனது. தன்னுடையது என்று பிரிந்துவிடும்.
தனியொன்றை
நான் என்றுக்கொண்டால், எனது, என்னுடையது என்று அவை முகம் காட்டும்.
எனது
என்னுடையது என்பதை மாயை என்றும், உனது உன்னுடையது என்பதை தயை என்றும் கூறுவார்கள்
பெரியோர்கள்.
திரு.ஜெ
மாயை, தயை என்பதின் மெல்லிய இடைவெளியை தருமனின் படைப்பின் மூலம் வெளிப்படுத்தி மனிதனும் மிருகம் மட்டும்தானா?
என்ற கேள்விக்கு உட்பொருள் காண்கின்றார்.
மனிதனும்
மிருகம்தான் என்றால் மனிதன் என்று ஒரு உயிர் எதற்காக பிரபஞ்சத்தில். அந்த உயிர்
எதற்காக பேசவேண்டும், சிந்திக்கவேண்டும், கற்கவேண்டும், கற்பதின் மூலம் சொல்லும்
பொருளும் அறியவேண்டும். சொல்லும் பொருளும் என நடமாடும் இறைவன் என்ற ஒன்றைப்பற்றி
அவன் மட்டும் ஏன் பேசவேண்டும்? என்று பல கேள்விகளின் ஆடலை நிகழ்த்தி அதற்கான
விடைவெளியை தரிசிக்க வைக்கின்றார்.
பெரும்
பலம்படைத்த பீமன் ஒரு பக்கம், பெரும் வீரம்படைத்த அர்ஜுனன் ஒரு பக்கம். சதசிருங்கத்தில்கூட
அஸ்தினபுரியை நினைத்துக்கொண்டு இருந்த குந்தி ஒரு பக்கம். இவர்கள் அனைவரும்
அஸ்தினபுரியின் இளவரசனாக தருமன் வரவேண்டும் என்று நினைக்கின்றார்கள். அதுதான்
அவர்களைப்பொருத்தவரை நியாயம். காரணம் அவர்களின் எனது, என்னுடையது என்ற மாயையின்
பிரதிபளிப்பு. அதற்குள் அவர்களின் இருப்பும் வாழ்க்கையும் அடங்கி உள்ளது.
தருமனும்
இந்த முதல்போரில் எப்படியாவது வென்று நாம் யார் என்பதை நிறுபிக்க வேண்டும் என்று
துடித்தவன்தான். தனது தம்பியோ, அறமோ அழிந்தால் இறப்பேன் என்று சொன்னவன்தான்.
அவனும் எனது, என்னுடையது என்ற மாயைக்கு கட்டுப்பட்டவன்தான். //அர்ஜுனன் தருமனுக்கு முடியாசை இல்லையா என எண்ணிக்கொண்ட அதே கணம் தருமன் “நீ எண்ணுவது புரிகிறது. எனக்கு முடியாசை உள்ளது. முடியை இழப்பதில் துயரமும் கொள்கிறேன்// என்று தனது சுயநலத்தின் முகத்தை
எந்த பாசாங்கம் இல்லாமல், எந்த முகமூடியும் இல்லாமல், எந்த அரிதாரமும் பூசாமல்
காட்டுகின்றான். அதனாலேயே அவனின் அத்தனை முகம் சுருக்கங்களும் நமக்கு தெரிகின்றது.
தருமன் எத்தனை பெரிய சுயநலக்காரன் என்றும் சொல்லிவிடுகின்றது அகம். அகம் அறிந்த
வேடத்தையும், அறிந்த வாசத்தையும் உடனே உணர்ந்து நம்மைபோல என்றும் எண்ணிக்கொள்ளும்.
தருமனும் நம்மைபோன்ற எளிய மனிதன்தான் என்றும் கூவிவிடுகின்றோம். தருமன்
எளியமனிதனா? எழும் கேள்வியை நோக்கி பயணிக்கின்றார் ஆசிரியர் ஜெ அல்லது ஆசிரியரர்
ஜெவின் அறம் அவரை அந்த இலக்கு நோக்கி எடுத்துப்போகின்றது. எங்குசெல்கின்றார்?
என்பதற்கு முன்னால் நாம் பார்க்கவேண்டியது ஒன்று உள்ளது.
ஆகாயதாமரையோ,
பாசியோ படர்ந்த குளத்தில் தண்ணீர் குடிக்கச்சென்றால், நாம் கைவிட்டு விளக்கும்போது
நகர்ந்துப்போகும் ஆகாயத்தாமரையும், பாசியும் அடுத்த கணம் வந்து தண்ணீரை
மூடிக்கொண்டுவிடும். தண்ணீர் மறைந்துவிடும். மாயையை தண்ணீர்ப்பாசியாக கண்டு
கொள்ளும் தருமன் போன்றவருக்கு மாயையை அழிக்கமுடியவில்லை, அதை அகற்றும் கணம்
கிடைக்கின்றது. அந்த கணத்தில் அவர்கள் தன்முகத்தை அந்த தண்ணீரில்
பார்க்கின்றார்கள். அப்போது மாயையில் இருந்து விலகி தயைக்குள் விழுகின்றார்கள்.
மாயையைக்குள் இருப்பர்வகளுக்கு அது போராட்டமாக இருப்பது இல்லை, அவர்களின் மாயைவேரே
அவர்களின் தண்ணீர்தேவையை நிறைவு செய்கின்றது. மாயையை விளக்கி தண்ணீர் குடிக்க
நினைப்பவருக்கு மாயையை விளகி இருக்க சொல்லவேண்டி உள்ளது. மாயை விலகும் அந்த
தருணத்தில் தயைவந்து அவர்களுக்கு ஏறி முகம் காட்டுகின்றது. அது ஒரு கணம் என்றாலும்
வெளிச்சம் பட்டு ஒளிரும் கணமாக மாறுகின்றது. அந்த கணததை அடைய போராட்டம்
தேவைப்படுகின்றது. அது ஓயாத போராட்டமாகவும் இருக்கிறது. இந்த போராட்டம் வேண்டாம்
என்று இருள் என்னும் மாயைக்குள்ளும் இருக்க முடியாமல், போராடித்தான் தயையை
பெறவேண்டி உள்ளது என்பதாலும், தருமன் போன்றோர் தன்னை அமைதிப்படுத்திக்கொள்ளவேண்டி
நிலையிலும், தனது நடுக்கத்தை தாங்கிக்கொள்ளவேண்டிய கட்டாயத்திலும் இருக்கிறார்கள்.
மாயைக்குள்
இருந்தாலும், தருமன் ஒருவன் மட்டும்தான் தயைக்குள் நுழைகின்றான்.
பாரதப்பாத்திரத்தில் தருமன் மட்டும் எப்படி தனித்து நிற்கின்றான்? அனைத்து
பலகீனமும் உடைய அவன் எப்படி உயர்ந்தவன் ஆவான் என்று நினைத்த எனக்கு இன்று ஜெ
தருமனின் தயை என்னும் முகத்தை மாயையை விலகிச்செல்லவைத்துக் காட்டுகின்றார். அறத்தை
நோக்கி ஜெவின் பயணமும், அறம் ஜெவை அழைத்துப்போகும் பயணமும் இதுதான்.
மாயையோடு
இருக்கும் மனிதன் ஒருபக்கம் இடிவாங்கி மாவாகி தனது கடமையை முடித்து விடுகின்றான். தயைக்குள் விழும்
மனிதன் இருபக்கமும் அடிவாங்குகின்றான்
அதனாலேயே ஒரு இசையை உருவாக்கி பிரபஞ்சத்தை நிறைய செய்கின்றான். மாயையை விட்டு
விட்டு நேரடியாக தயைக்குள் சென்றுவிடமுடியுமா? முடியாது. மாயையின் உச்சம்தான் தயை, அடியில்லாதபோது
நுனியேது.
தருமன்
நூலும் சொல்லும் கொண்டு அடி நுனி அறிகின்றான். இரண்டையும் இணைக்க நினைக்கிறான்.
இணைப்பதால் ஒரு வட்டம் கிடைக்கும். அவன் அந்த வட்டத்துக்குள் உருவாக்கும்
வாழ்க்கையை காண துடிக்கின்றான். எந்த தருமனுக்காகவும் வாழ்க்கை வட்டத்திற்குள்
அமைவதில்லையே. தருமவான்களின் வாழ்க்கையில் நடக்கும் நெருக்கடி எல்லாம் அந்த வட்டம்
சிதையும் கொடுமைதானா?
தருமன்
அந்த வட்டத்திற்குள் அமையாத வாழ்க்கையை அடித்து நெறுக்கி நெருப்பில் காச்சி ஒரு
வட்டமாக்க பயப்படுகின்றான். காரணம் இது
மாயையின் வேலை. மாயையால் மட்டுமே எனது, என்னுடையது என்ற வட்டத்தை உருவாக்க
முடியும். எந்த வட்டமும் எனது என்னுடையது என்னும் வட்டத்திற்குள் வந்துவிடும்.
தருமன் மாயையின் வட்டத்தை தயையின் வட்டமாக்கப் பார்க்கின்றான். முடியாது என்பது
அவனுக்கு தெரிகின்றது எனவே முடியாதபோது அவன் தோற்றுப்போக, பின்வாங்க, மற்றொரு
வட்டத்தை கனவுகாண விழைகிறான்.
//முடியை இழப்பதில் துயரமும் கொள்கிறேன். ஆனால் நெறி நம் அனைவரை விடவும் மேலானது” என்றான். பின் வெறுமைகலந்த புன்னகையுடன் “இவர்களை நான் அறிவேன். முடியுரிமை இல்லையேல் நமக்கு இந்நாடு இல்லை. சரி, அதனாலென்ன? மீண்டும் சதசிருங்கம் செல்வோம். மரவுரி அணிந்து வேட்டையாடி உண்டு வாழ்வோம். நம் தந்தை அங்குதானே இருக்கிறார்? அவர் நமக்கு சதசிருங்கத்தையே அளித்துச்சென்றார் என கொள்வோம்” என்றான்//
அறம்
வேண்டும் அனைவரும், தயைக்கொள்ளும் அனைவரும் அஞ்சும் இடம் இதுதான். சராசரியாகக்கூட
வாழமுடியாத நிலைவந்துவிடுமே என்றுதான் பயப்படுகின்றார்கள். அறம் அச்சத்திற்கு உரியதுதானா?
அது மனிதனை கைவிடுகின்றதா? பலனை எதிர்ப்பார்த்து செயல்படும் மனிதனுக்கு, செயலின்
இறுதியில்தான் உண்மையான பலன் இருக்கிறது என்பது பட்டப்பிறகே தெரிகின்றது. அப்போது
அறம் எத்தனை வலிவானது என்பது தெரிகின்றது. அது யாரையும் கைவிடுவதில்லை. நம்மை
கைவிட்டதெல்லாம் நமது ஆசைகள் மட்டும்தான். ஆசைகளை விடுவதையே வாழ்க்கையை விடுவதாக
நினைக்கும் மனிதனுக்குதான் அறம் வலிவற்றதாக தெரிகின்றது.
மாயை
விசித்திரமானது, தயையாக இருப்பதும் அதுதான். காமம் விசித்திரமானது, காதலாக
இருப்பதும் அதுதான். வேண்டுதல் விசித்திரமானது, வேண்டாமையும் அதுதான்.தருமன்போன்ற
நூல்கொண்டவர்கள் இந்த விசித்திரத்தை அறிந்து தவிக்கிறார்கள். துடிக்கிறார்கள்.
அர்ஜுன்போன்று
பெரும்போரிலும், தன்னை இரண்டாக பிரித்து தன்னையே பார்க்கக் கற்றுக்கொண்டவர்கள்.
இந்த இருமையின் ஒருமையை வெறும் கேள்வியோடு நிறுத்தி்க்கொண்டுவிடுகின்றார்கள்.
அவர்களுக்கு பதில்கிடைத்தாலும் அந்த பதிலை பயன்படுத்திப் பார்க்கமாட்டார்கள்.
கேள்விக்கேட்ட நேரத்திலேயே கேள்வியையும் மறந்துவிடுவார்கள். பதில் கிடைத்த உடனேயே
அவர்களுக்கு இன்னொரு கேள்வியும் முளைத்து அந்த பதிலையும் கேள்வியாக்கிவிட
முடியும். திரு.ஜெ நுட்பத்தின் நுட்பமாய் நுழைந்து விளையாடும் பதிவு இன்று.
//எத்தனை நூல்கற்றாலும் எத்தனை சிந்தனை செய்தாலும் வாழ்க்கையின் இக்கட்டான தருணத்தில் எளிய உணர்ச்சிகள்தான் மேலோங்கி நிற்கும் என்றால் கல்வியும் ஞானமும் எதற்காக?”//
மானிட
வாழ்க்கையின் உச்சத்தை தொடும் ஒரு தருணத்தை கேள்வியாக்கிய இந்த அர்ஜுனன்தான்
அடுத்த பின்பகுதியில் மீண்டும் ஒரு கேள்வியை எழுப்பி அதற்கு தனே பதிலாகவும்
இருக்கிறான். //“அற்ப விவாதங்களால் நம்மை சிறுமைப்படுத்தி அகற்ற காந்தாரத்து ஓநாய் முயலுமென்றால் என்ன செய்வதென்று எனக்குத்தெரியும்” என்றான்.//
எங்கிருந்த
அர்ஜுனன் எங்கு வந்துவிடுகி்ன்றான். அவனுக்கு மாயையை தாண்டும் எண்ணம் ஒரு
சிறிதாவது இருக்கா? தாண்டுவானா? ஆனா் அவன் தனது வட்டத்தில் சரியாக
பொருந்துகின்றான். அவன் வட்டத்தை அவன் துள்ளியமாக வரைந்து வைத்துஉள்ளான். தன்னையும், தனது கையையும்,
கைவில்லையும் நம்பிவிட்டான். அதுபோதும் எல்லாம் முடிந்துவிடும் என்று
நினை்க்கிறான். இது மாயையின் விளைாயாட்டு. ஆனால் ஞானக்கேள்விகளை வீசுவிளையாடும்
மானிடமனம் படைத்தவன்.
பெரும்பலம்
படைத்த பீமன் போன்றவர்கள் நூல் கற்காவிட்டாலும், முறமை அறியாவிட்டாலும், அவர்கள்
இடம் அடுத்தவர்கள் இடம் கேட்க எந்த கேள்வியும் இல்லாவிட்டாலும் சில விடைகள்
அடிப்படையில் இருக்கிறது. அந்த பதில்கள் பல கேள்விகளுக்கு பதிலாகவும் இருக்கிறது.
//யோகி என்பவன் அன்பைக் கடந்தவன். ஞானி என்பவன் முற்றிலும் அன்பற்றவன்” என்றான் பீமன்//
.அந்த
விடைகள் என்ன வென்று அவர்களுக்கு தெரிந்தும் இருக்கிறது. அவர்கள் அறிந்து
இருக்கும் உலகத்திற்கு உரியது அவை அல்ல என்று எளிதில்
நகர்ந்துசென்றுவிடுகிறார்கள். அவர்களின் வட்டம் அவர்கள் அறிந்த சுவையால், சுமந்த
சுமையால் ஆனது. அதைத்தாண்டி
பீமன்போன்றவர்களுக்கு வெளிவட்டம் இல்லை.
பார்த்தன்,
பீமன், குந்தி என்பவர்களின் வட்டத்துக்குள் வந்து தருமன் அடங்குவான் என்று
நினைக்கையில், தருமன் அந்த வட்டத்திற்கு வெளியில் நின்று அந்த வட்டங்களை சொற்களால்
தள்ளித்தள்ளி அலையில் நெளியும் தன் முகம் காட்டுகின்றான் என்று ஜெ படைத்திருப்பதைப்பார்க்கும்போதுதான்.
பீமன் சொன்னக்கதை நினைவுக்கு வருகின்றது. அரியும், அரனும்கூட புரிந்துக்கொள்ள
முடியாத பிறப்பு. மனிதனைப்படைத்தற்காக பிரமனை எண்ணி வியக்கும் படைப்பு.
தருமன்
நான் சுயநலக்காரன் என்று ஒத்துக்கொள்ளும் அந்த நொடியிலேயே அதைத்தாண்டி அந்த முன்னோர்
சொல்லுக்கா சுயநலத்தை உதரவும் சித்தமாக இருக்கின்றான் என்று காட்டும் இடத்தில்
நமது பிரமனாகிய ஜெவை வியக்கின்றேன்.
மனிதன்
மிருகம் மட்டும் இல்லை, அதையும் தாண்டி மனிதனாகவும் இருக்கக்கூடியவன் என்பதை
இருகூர்வாளால் கிழிக்கும்போது ஜெ காட்டுகின்றார்.
ஞானக்கேள்விகளைக்
கேட்கவும் அதற்கும் அப்பால்
துரோணர் போன்ற பெரும் ஞானம் உடைய மனிதர்களின் எளிய அகங்களை அறிந்து இருக்கும்
தகுதியும் உடைய அர்ஜுனனுக்கு தருமன் சிக்கலான தருணத்திலும் எளிய மனிதன் இல்லை
என்பதை புரியவைக்கின்றார். மகுடம் இல்லை என்றால் இந்த நாடு இல்லை என்று
அறிந்தபின்பும் அதற்காக வருந்தியப்படியே ஒரு நாடோடியாக வாழலாம் என்று சொல்லும்
தருணத்தில் மாயையை விலக்கி தருமனை தயை ஒளியில் பிரகாசிக்க செய்கின்றார். இது
அர்ஜுனன் தருமனை அறியும் முற்றும் புதுஇடம் அதற்கும்மேல் அது இணையில்லா வேறு ஒரு
தருமன்.
வாழ்வில் கசப்பை
உண்டு, கசப்பாகவே மாறிய பீமன் போன்றவர்களுக்கு அன்பை கடந்தவர்களும்,
அன்பற்றவர்களும் தெரிந்து இருந்தாலும் அன்புக்குள் நிற்கும் அண்ணன் எளியமனிதனோ,
மிருகமோ அல்ல என்பது புரியும். மாயையில் நின்று மாயையை விலக்கி தயையை அறியும்
அண்ணன் அகம் தெரியும்.அதே நேரத்தில் தருமன்முன் அர்ஜுனன், பீமன், குந்தி எல்லாம்
எங்கோ வெகு தொலைவில் ஆழத்தில் பொம்மைபோல் கிடக்கிறார்கள். தருமன் ஏன் தருமன் என்ற
கேள்விக்கு ஜெவின் மேல் பயணிக்கும் அறமும், அறத்தின் மேல் பயணிக்கும் ஜெவும் ஒரே
பதிலை சொல்கின்றார்கள்.
பலகீனமும்,
சுயநலமும் இருந்தாலும் இக்கட்டான தருணத்தில் எளிய உணர்ச்சி மேல் ஓங்காத மனிதனாய்
இருப்பது.
தருமன்
தனது முதல் சிக்கலான தருணத்தை உணர்ந்து இருக்கிறான். அவன் தருமத்தின் பக்கத்தில்
நிற்கின்றான்.
நன்றி
அன்புடன்
ராமராஜன்மாணிக்கவேல்.