Friday, November 7, 2014

பிரயாகை-17-நெஞ்சக் கனல்

அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

முதற்கனல் நூல் ஒளியின் பயணம்போல் இலக்கை நோக்கி நேராக சென்றது. பிரயாகை நூல் நதியின் பயணம்போல் இலக்கை நோக்கி சென்றாலும் பயணம் கரைகளால் திசைதிருப்பப்பட்டு திசைதிருப்பப்பட்டு செல்கின்றதை காண்கின்றேன்.
முதற்கனல் பாத்திரங்கள் அனைத்தும்  எண்ணங்களின் நேர்பதையில் இயங்குகின்றன. பிரயாகை பாத்திரங்கள் எண்ணங்களின் வளைவுபாதையில் செல்கின்றன, குறிப்பாக முன்னால் உள்ள இலக்கை அடைய பின்னால்கூட செல்கின்றன என்று அறிகின்றேன். முன்னால் துள்ளி எழுவதற்கு இங்கு ஒரு பிலத்துவாரத்தில் மூழ்கி மறைந்துகூட போகின்றன.

ஆசிரியர் திரு.ஜெ துருபனின் பாத்திரத்தை படுக்கை வைத்திருந்து எழுந்து உட்கார வைக்கின்றார். பின் எழுந்து உட்கார்ந்து இருப்பவனை படுக்க வகைக்கின்றார். இந்த முரண்பாடு, இந்த நுணுக்கம் எளிய சிந்தனை கொண்ட எனக்கு சற்று குழப்பமாகத்தான் இருக்கின்றது.
மீன்பிடிக்க வேண்டிய குளத்தை மனிதர்கள் இறங்கி கலக்குவார்கள் என்று மட்டும் அறிந்து இருக்கும் எனக்கு, யானையை இறக்கி கலக்கினால் எப்படி  இருக்குமோ அப்படி இருக்கின்றது. மீன் மட்டும் இல்லை கிழங்குகூட செத்து மிதங்கி பிடித்துக்கொள் என்று சொல்வதுபோல் உள்ளது. பெரும் கலக்கு கலக்குகின்றார். இத்தனை கலக்கு கலக்கத்தான் வேண்டுமா? என்ற வினா இயற்கையாகவே எழுகின்றது.

ஏன் இத்தனை கலக்கு கலக்குகின்றார்? என்று திரும்பி திருப்பி யோசித்தால் என்ன?
துருபதன் பட்ட அடி அப்படிப்பட்ட கலக்கத்திற்கு உரியது.  உடலாலும் உள்ளத்தாலும் அத்தனை காயத்தை தாங்கி இருக்கும் பாத்திரம் துருபதன்.  


தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு. என்ற திருக்குறளை கேட்கும்போது எளிதாக இருக்கின்றது. தீயில் சுட்டுக்கொண்டால் தெரியும். நாவினாலேயே சுட்டு இருக்கலாமே தீயால் ஏன் சுட்டாய் என்று தோன்றும். காயம் ஆறியப்பின்பு தீயால் சுட்டு இருக்கலாமே ஏன் நாவால் சுட்டாய் என்று தோன்றும். இந்த நிலைதான் துருபதன் நிலை.

அவன் உடம்பும் உள்ளமும் சுடுபட்டதுபோல் வேறு ஒருவன் மகாபாரதத்தில் சுடுபடவில்லை என்பதின் நுணுக்கத்தை காட்டுகின்றார் ஆசிரியர்.

துருபதன் என்றால் துரோணரின் நண்பன், துரோணரை அவமானப்படுத்தினான் அதற்கு அவர் பழி தீர்த்துக்கொண்டார் என்ற ஒற்றைப்பிம்பத்தில் அவன் படும் பாடு மறைந்துவிடுகின்றது. அப்படி மறந்தே இதுவரை இருந்து இருக்கின்றேன். அவன் அந்த அவமானத்திற்காக படும் பாடு என்ன என்பதை இன்று பிரயாகை படிக்கும்போது அறிய முடிகின்றது. ஒரு வேளை துருபதன் இறந்து இருக்கலாமோ என்று கூட நினைக்க தோன்றுகின்றது. அப்படி நினைக்க வைப்பதன் மூலம்தான் ஆசிரியர் ஜெ துருபதனை வாசகர் நெஞ்சில் உயிர் பெற வைக்கின்றார் அதற்காகத்தான் அந்த பாத்திரத்தை இத்தனை கலக்கு கலக்கு என்றார். ஒருவித அச்சமும் பயமும் வேதனை கலந்த புன்னகையும் செய்யும்படி செய்து உள்ளார். நிமித்திகர் பத்ரரிடம் உள்ள கசப்பு கலந்த புன்னகை நம்மிலும் ஏறி முகம் திருப்பிக்கொள்ள செய்கின்றது.

//தோல் உரிந்த வலியை தாள இயலாது.” பத்ரர் கசப்பு படிந்த புன்னகையுடன் திரும்பிக்கொண்டார்.
கண்விழிக்கையில் துருபதனுக்கு என்னதான் ஆறுதலும் விளக்கமும் சொல்வது என்று பத்ரருக்குப் புரியவில்லை. துருபதனின் உளமறிந்த தோழர் அவர்தான்.//


கசப்பு கலந்த புன்னகையோடு திரும்பிக்கொள்ளும் பத்ரர்தான் நான் என்னசெய்வேன்? என்ன ஆறுதல் சொல்வேன்?” என்று நெஞ்சில் கைவைத்து புலம்புகின்றார்.

பெரும் துக்கங்களின் முன்னால் சிரிக்காமலும் இருக்கமுடியவில்லை, புலம்பாமலும் இருக்க முடியவில்லை.

இப்படிப்பட்ட பெரும் துயரத்தில் படுத்திருக்கும் துருபதன் காயம் ஆறி எழுந்த உடன் எதுவும் நடவாததுபோல் சராசரி வாழ்க்கையில் இருந்ததைப்பார்த்து, கதை சரியான இடத்திற்கு வந்துவிட்டது என்று நினைக்கையில்  //    //இன்னொருவரால் எழுப்பப் படாதவரை எங்கு அமர்ந்திருக்கிறாரோ அங்கேயே நாளும் இரவும் இருந்துகொண்டிருந்தார். உதிரிச்சொற்களில் பேசினார். அப்போது அவர் எங்கிருக்கிறார் என்பதை அச்சொற்கள் வழியாக கணிக்கமுடியவில்லை.// இவர் உடல் தேறி ஏன் எழுந்தார். அவர் இறந்துவிட்டார் என்றே திரு.ஜெ எழுதி இருக்கலாமோ? என்று தோன்றுகின்றது.
துருபதன் உடலால் பட்டக்காயத்தைக்காட்டி அதிலிருந்து மீண்டும் விட்டாலும், உள்ளத்தால் பட்டகாயத்தில் இருந்து மீளமுடியவில்லை என்பதை காட்டும் இந்த அத்தியாம் மனித உடலுக்கும் உள்ளத்திற்கும் உள்ள தொடர்பையும் அதை காத்துக்கொள்ளவேண்டிய நிற்பந்தத்தையும் அழுந்தப்பதிகின்றார்.

ஜாக்ரத், ஸ்வப்னம் என்னும் இருபுள்ளிகளுக்கு இடையில் இயங்கும் மனிதன் வாழ்க்கை. அந்த ஆதி அந்த புள்ளிகளை தொடமல் இருக்கும்போது நீரில் கனமில்லாமல் இருக்கும்பொருள்போல இலகுவாக இருக்கின்றது. அந்த புள்ளிகளை தொடும் வாழ்க்கை உடையவர்களுக்கு கரைத்தட்டிய கப்பல்போல கனமும், இயக்கமும் நின்று போய்விடுகின்றது. வாழ்க்கையே ஸ்தம்பித்துபோய்விடுகின்றது.

துருபதன் வாழ்க்கை மூலம் ஆசிரியர் திரு.ஜெ ஒரு மனிதமனத்தின் பெரும் சிக்கலை அழகான உவமை மூலம் தெளியவைக்கின்றார். //எல்லா இலைகளும் அவற்றின் எல்லைவரை எடைதாங்கும். அதன்பின் எடையை சரித்து விழச்செய்துவிடும். ஆகவே எடைமிகுந்து எந்த இலையும் உதிர்வதில்லை. அதைப்போன்றதே மானுட உள்ளமும். மன்னரால் தாளமுடியாத எடைகொண்டது அந்நிகழ்ச்சி. அதை அவர் உதிர்த்துவிட்டார்//
உதிரும் பொருள் எங்கு விழுகின்றது என்பதைப்பொருத்து தனிமனிதன் மட்டும் இல்லை இந்த உலகமும் நன்மையையோ துன்பத்தையோ அடையும் என்பது மாறத நீதி என்பதை மறைத்து வைத்து உள்ளார்.
ஜாக்ரத்தில் விழும் எடை கண்ணீராய். வசையாய், ஏளனமாய், பயமாய், வெறியாய் மாறி உடையும். ஸ்வப்பனத்தில் விழும் எடை, எடைபெருகும் ஆனால் உருசிறுகும் என்பதில் சிந்திக்க வைத்து எதிர்காலத்திற்காக நன்மைக்காக இறைஞ்சவைக்கின்றார்.
//“ஸ்வப்னத்தில் இருந்து ஒரு கூழாங்கல் விழுந்தால் ஜாக்ரத்தின் மாளிகைகள் நொறுங்கிச்சரியும் என்கிறார்கள்என்றார்//

நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்து உருகத்
தஞ்சத் தருள் சண்முகனுக்கு இயல்சேர்
செஞ்சொற் புனைமாலை சிறந்திடவே
பஞ்சக் கரத்தானை  பதம் பணிவாம்.

துருபதன் மனநிலையை  வைத்துப்பார்க்கும்போதுதான் அருணகிரி நாதசுவாமிகள் பாடிய “நெஞ்சக்கனகல் நெகிழ்ந்துருக” என்று அநுபூதி பாட்டின் பெரும்பொருள் தெரிகின்றது. மேல் மனத்தில் விழுந்த கற்களையே கரைக்கமுடியாத அளவுக்கு இருக்கும்போது. மனிதனின் ஸ்வப்பனத்தில் விழுந்த கற்களை நினைத்தால் கால்கள் எடை அறிகின்றது.  

தெரிந்தோ தெரியாமலோ துரோணர் அஸ்தினாபுரியின் அழிவுக்கு காரணமாகிவிட்டார். இதைத்தான் விதி என்பதா?

இரண்டு நண்பர்களின் எளிய நட்பும், எளிய பகையும் ஒரு நாட்டின் அழிவுக்கு ஒரு துளி நெருப்பை தன் பங்குக்கு வளர்க்கின்றது.

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.