Saturday, November 1, 2014

ஊறிப்பெருகும் விஷம்


[துரியோதனன் -காகித வெட்டு ஓவியம்]

அன்புள்ள ஜெ

துருபதனின் கதையை வாசித்தபோது தோன்றியது வன்மங்களில் ஒன்று கூடிவிட்டது என்று. இதுவரைக்கும் வந்த மகாபாரதக்கதை மொத்தமே ஒற்றைவரியிலே சொல்வதாக இருந்தால் கடைசியில் நிகழக்கூடிய பெரிய போருக்குக் கொண்டுசெல்லும் சிறிய நிகழ்ச்சிகளின் தொகுப்புதான் இல்லையா?

முதலில் குந்தியின் வன்மம். அதன்பின் காந்தாரியின் வன்மம். அதன்பின் அதை  துரியோதனனும் பாண்டவர்களும் ஏற்றுக்கொள்கிறார்கள். உக்கிரமான ஒரு வன்மம் கர்ணனுடையது. இன்னொன்று துரோணர். இப்போது அனைத்தையும் விடத் தீவிரமான வன்மமாக துருபதன்

இந்த வன்மங்கள் எல்லாமே விதி மாதிரியும் தெரிகிறது. கூடவே தவிர்த்திருக்கக்கூடிய மனுஷ பலவீனம் மாதிரியும் தெரிகிறது. ஒரே சமயம் இரண்டுமாகத் தெரிவதே இதன் ஆச்சரியம் என்று நினைக்கிறேன்

துரோணர் துருபதனை அவமதிக்கும் காட்சியை உக்கிரமாக எழுதிவிடுவீர்கள் என நான் அறிவேன். ஆனால் கூடவே அபத்தமானதாகவும் ஆக்கிவிட்டிருக்கிறீர்கள். அதுதான் கிளாஸிக் காரக்டர் என்பது. இப்போது நீங்கள் இருக்கும் உயரம் அது

அங்கதம் ஒளிந்திருக்கவில்லை என்றால் அது கிளாஸிக்கே இல்லை. உச்சகட்டத்தில் எல்லாம் அபத்தமாவதே பெரிய அங்கதம். அதிலும் துரோணரின் நாடகத்தனம். கிளாஸிஸம் என்றால் இதுதான்


ஜெயராமன்