துரியோதனன் யார்? வலமும் இடமும் ஆணாக மாறியவன். ஒவ்வொரு ஆணுக்குள்ளும்
இருக்கும் பெண்மையை முற்றாக இழந்து முழுவதும் ஆணாகமாறியவன். பெண்களை நோக்காதவன். பெண்களால்
நோக்கப்பட்டுக்கொண்டே இருக்கும் ஆண்மகன்.
துரியோதனனை அழகன் என்று சொல்லாத அர்ஜுனன் கர்ணனை அழகன் என்கின்றான்.
அர்ஜுனனை அழகன் என்ற சொல்லாத துரியோதனனோ என் நண்பனைவிடவும் கிருஷ்ணன் அழகன் என்கிறான்.
முகம் புன்னகைக்கும் மனிதனை கண்டு இருக்கிறேன், உடம்பே புன்னகைக்கும் மனிதன் கிருஷ்ணன்
என்கிறான்.
//அவன் மார்பையும் தோள்களையும் நீலவிழிகளையும் நோக்கிக்கொண்டிருந்தேன். கன்னங்கரியோன். ஒளியே கருமையாக ஆனவன். முகம் புன்னகைக்கக் கண்டிருக்கிறேன், அமைச்சர்களே, உடலே புன்னகைப்பதை அவனிடமே கண்டேன்//
துரியோதனன் பெண்ணாகும் தருணம்.
அர்ஜுனன் மனநிலையில் வைத்து துரியோதனனைப்பார்க்கும்போது, கர்ணன்முன்
நிற்கும் அர்ஜுனன் அடையும் பெண் தன்மையும், கண்ணன் முன் துரியோதனன் அடையும் பெண் தன்மையும்
கிடைக்கிறது. அர்ஜுனன் கர்ணனை வெறுப்பதும், துரியோதனன் கண்ணனை வெறுப்பதும் ஒரு புள்ளியல்
வந்து நிற்கிறது.
தன்னை பெண்ணாக்கும் ஆண்மை உடையவன்மீது ஈர்ப்பும் அந்த ஈர்ப்பே வெறுப்புமாக
மாறும் மையத்தை ஆசிரியர் படைக்கின்றார். என்ன ஒரு சித்திர நுணுக்கம். இப்படி ஒரு கோணத்தில்
துரியோதனன் கண்ணனைக்காண்பான் என்று நினைக்கவே இல்லை. இந்த இடத்தில் தன்னை வென்றுவிட்ட
கண்ணனைக்காண்கின்றான்.
பிரயாகையில் வந்து விழும் சொற்கள் எல்லாம் மணிமணியாக ஒளிவீசிக்கொண்டு
இருந்தாலும், நீலத்தில் வந்து விழுந்த சொற்கள் பாதரச மணிகள்போல உலோகமாக, ஒளியாக, கனமாக
இருந்தாலும் அதற்கென்று ஒரு மென்மை இருக்கிறது. கண்ணனைப்பற்றி கூறும்போதே அந்த பாதரசமணிகள்
மீண்டும் நீளமாகி வந்துவிடுகின்றன. கண்ணனைப்பற்றி துரியோதனன் கூறும் இடத்தில் மீண்டும்
நீலத்திற்குள் நுழைந்த அனுபவம்.
ஒரு மனிதன் குலசாமியாவது எத்தனை எளிதாகிவிடுகின்றது.
எத்தனை எளிதாக அது நடந்துவிடுவதால் அது எத்தனை பெரும் பாட்டுக்கு உரியது என்பதையும்
சொல்லிச்செல்கிறது இன்றைய பிரயாகை. காவிய நாயகனை
ஒரே வரியில் தெய்வத்துள் தெய்வமாய் வைக்கமுடியும் என்பதை ஆசிரியர் நிறுபிக்கும் இடத்தில் ஆசிரியரின்
ஞானவெளியை பிரமிப்போடு பேச்சியிழந்து பார்த்து நிற்கின்றேன்.
//ஒரு குலமே ஒருவனை நோக்கி கைநீட்டி பாய்ந்தோடுவதை முதல்முறையாகக் கண்டேன்// கண்ணன்
ஒரு குலசேகரன். அஸ்தினபுரியில் முதன் முதலாக கண்ணனைக்கண்டவன் துரியோதனன்
அவன் வாய்வார்த்தை கண்ணன் ஒரு குலசேகரன் என்கிறது ஆனால் விதி
குலசேகரனைக்கண்ட துரியோதனனை குலகாலன் என்றுவிட போகின்றது.
யார் தெய்வம்? சொற்களுக்கு முன்பு கல்லாகி இருப்பன், கைகளுக்கு முன்பு
அடிமையாகி நிற்பன், கண்ணளுக்கு முன்பு கனவாகி நிற்பவன், தலைகளுக்கு முன் மடியாகி நிற்பன்,
நாவிற்கு சுவையாகி நிற்பவன், குழந்தைகளுக்கு தொட்டிலாகி நிற்பன். இத்தனைக்கும் பிறகும்
அவன் அங்கு இல்லாதவன்போலவே இருக்கக்கூடியவன். எதுவும் முடியாதவன்போல் இருப்பவன், எல்லாத்தையும்
முடித்துவிடுவான் என்று நம்பவைப்பவனாகவும் இருப்பன். அவன் தெய்வம். துரியோதன் கண்ட
கண்ணன் தரிசனம் என்பது தெய்வதரிசனம்தான் என்பதை ஆசிரியர் ஜெ படைக்கும் இடத்தில் கண்ணன்
பாத்திரம் உயர்ந்து உயர்ந்துபோவதை விழி விரித்துப்பார்க்கிறேன். இத்தனை பெரிய விஸ்வரூப
தரிசனத்திற்கு பிறகும் துரியோதனன் கண்ணனை ஒருநாள் இடையன் என்பான். அவன் கண்ட விஸ்வரூபத்தை
அவனே கண்மூடி அழிக்கும் தருணம் அது. நாம் கண்ட உண்மைகளை நாமே உதறிவிட்டுப்போவது என்பது
இறைதரிசனத்தின் முன் கண்மூடிக்கொள்வது என்பது இதுதானா?
என்னிடம் ஒரு பிழை உள்ளது. தப்பு எல்லாம் தப்பாகவே முளைத்து தப்பாகவே
வளர்ந்து தப்பு தப்பாகிவிடும் என்ற தப்பான எண்ணம்தான் அது. அந்த தப்பான எண்ணத்தை தப்பென்று
காட்டுகின்றார் திரு.ஜெ இன்று. நன்றி அதற்கு. பிழை சரியாக்கப்பட்ட தருணம்.
பெரும் விருப்பு பெரும் வெறுப்பாக மாறுவது இயற்கை என்பதை காட்டும்விதமாக
கண்ணன்மீது உள்ள பெரும் ஈர்ப்புதான் நாளை பெரும்வெறுப்பாக
மாறப்போகின்றது என்பதை ஜெ மௌனமாக மொழிகின்றார். கண்ணனின் புன்னகை நண்பனின் புன்னகை
என்கிறார். இந்த நட்பு என்ற சொல் எப்படி திரியப்போகின்றது என்பதை நமது சிந்தனைக்கு
விட்டுவிடுகின்றார்.
உயர்ந்த இலக்கை, உயர்ந்த உள்ளத்தை தந்தவன் கண்ணன் என்றும் அவன்மீது
ஈர்ப்பும் கொண்ட துரியோதனன்தான் கண்ணனை கொலை செய்யும் அளவுக்கு வெறுக்கிறான். ஜெசொல்வதுபோல்
பால் நிமிடத்தில் விஷமாகமாறி உயிர் எடுக்கம் என்பது இதுதானா?
//அவனைக் கண்டதுமே அதுவரை என்னிடமிருந்த ஐயத்தையும் சஞ்சலத்தையும் இழந்து திடம்பெற்றேன்// என்ற வரி துரியோதனின் பால் உள்ளத்தை
காட்டுகிறது.
நல்லபால்தான் திரிந்த பாலாகிவிடுகிறது. தப்பு தப்பாகவே பிறக்கவில்லை
நல்லதுதான் தப்பாகிவிடுகிறது.
நேராக கோடுபோட அளவுகோல் இருந்தால் மட்டும்போதாது அதை நேராகவும் பிடிக்கவும்வேண்டும்.
துரியோதனன் இதைத்தான் சொல்லாமல் இன்று சொல்கிறான்.
சொன்னவன் எல்லாம் செய்பவனா? கண்ணன் “ஆவதைச் செய்வோம்…” என்று
சொன்னதுதான் எத்தனை பொருள்பொதிந்த வார்த்தை.
கண்ணன்
தான் யார் என்பதை துரியோதனுக்கு காட்டிவிட்டான். கண்டுக்கொண்டதாய்
நினைத்த துரியோதனன் கண்டுகொள்ளவும் இல்லை.. அவன் சொன்னதை கேட்கவும் இல்லை.
கேட்டிருந்தால் ஆவதை செய்வோம் என்ற கண்ணனின் வார்த்தையில் உள்ள பொருள் அவனை
பாதளநாகமாக மாறியிருக்கவிடாது. கண்ணன் சொல் வேதம்தான். ஒரு சொல்தான் என்று
நினைக்கிறோம் அதன் பொருள்தான் எத்தனை பெரிய வாழ்க்கையின் விதை.
இதுவும் கண்ணனின் விளையாடல்தான்.
நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.