பாரத கூத்து மற்றும் திரௌபதி அம்மன் கோவில்கள் கூவாகம் உட்பட ஏன் வன்னியர் அதிகம் உள்ள பகுதிகளில் இருக்கிறது. உங்களது பாரத பிரசங்கிகள் கூட வன்னியர் பகுதிகளில் உள்ளவர்கள் தான்.இதற்கு சமூகம் மற்றும் வரலாற்று காரணங்கள் ஏதேனும் உள்ளதா.
கோபிநாத்
அன்புள்ள கோபிநாத்
தமிழகத்தின் எல்லா பகுதியிலும் ஏதோ ஒருவகையில் நாட்டார் கலையாக மகாபாரதம் நடிக்கப்பட்டு சொல்லப்பட்டு வந்தது. தென் தமிழகத்தில் பல கலைவடிவங்கள் இருந்தன, அவற்றை அ.கா.பெருமாள் தொகுத்த ‘தமிழக நாட்டுப்புறக்கலைகள்’ என்ற நூலில் காணமுடியும்
தென் தமிழ்நாட்டில் பதினெட்டாம் நூற்றாண்டில் உருவான நாடக இயக்கம் கூத்து போன்ற பல கலைகளை முழுமையாக இல்லாமலாக்கியது என நான் நினைக்கிறேன். பார்ஸிநாடகம், சிறுவர்நாடகம், ஸ்பெஷல் நாடகம் என பெரிய வணிக்கலைமரபு மதுரையை மையமாக்கி உருவானதனால் தெருக்கூத்து போன்ற கலைகள் அழிந்தன. ஆனால் ஆலயம் சார்ந்த சடங்குகலைகள் மட்டும் நீடித்தன
மாறாக வடதமிழகத்தில் நாட்டார்கலைகள் மேலும் ஐம்பதாண்டுக்காலம் நீடித்தன. கொங்கு பகுதியிலும் காஞ்சி திருவண்னாமலை பகுதியிலும் அவை சமீபகாலம் வரை செல்வாக்குடன் இருந்து மெல்ல சினிமா- தொலைக்காட்சியால் அழிந்து வருகின்றன.
ஜெ