ஜெ,
வெண்முரசின் முக்கியமான சிறப்புகளில் ஒன்று இதில் வரும் சேடிப்பெண்கள் மற்றும் தோழிகள் என்று நினைக்கிறேன். அவர்கள் பெரும்பாலும் கல்வியும் நுண்ணுணர்வுமெல்லாம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் பேச்சுக்கள் பலசமயம் கதைக்கே புதிய வெளிச்சத்தை உருவாக்கக்கூடியவையாக இருக்கின்றன
சிவை போல அரசியராக ஆன பெண்கள் இருக்கிறார்கள். சாதாரணமாகவே இருக்கும் பெண்களும் இருக்கிறார்கள். மாயை போல குறியீட்டு ரீதியாக பொருள் கொண்ட பெண்களும் இருக்கிறார்கள். அனகை போல அரசிக்குப்பதில் பிள்ளைகளுக்கு அம்மாவாக இருக்கும் பெண்களும் இருக்கிறார்கள்
இந்தச்சேடிப்பெண்களைப்பற்றி மகாபாரதம் சொல்கிறதா? இல்லை உங்கள் கற்பனையா?
சாரங்கன்
அன்புள்ள சாரங்கன்,
சேடிகள் தோழிகளைப்பற்றிய நிறைய குறிப்புகள் வருகின்றன. அவர்களுக்குப்பிறந்த பிள்ளைகளைப்பற்றியும் சொல்லப்படுகிறது
இவர்கள் சூதர் சாதியினர். அதாவது சூத்திரர்களுக்கும் சத்ரியர்களுக்கும் பிறந்தவர்கள். கல்வி கற்றவர்கள். கலைகளில் தேர்ச்சி கொண்டவர்கள். அதிகாரப்பதவிகளிலும் சூதர்கள் வருவதுண்டு
பெரும்பாலும் மகாபாரதம் இவர்களுக்குப் பெயர்கள் கொடுப்பதில்லை
ஜெ