Sunday, February 8, 2015

காமத்தின் ஆறு பருவங்கள்



அன்பு ஜெயமோகன்,
    
  பாஞ்சாலியை மையப்படுத்திய விவாதத்தின் கருப்பொருளாய் காமம் எரிந்து கொண்டிருந்ததை மூன்றாம் அத்தியாயம் விளக்கி நின்றது. ஐந்து சகோதரர்களும் முதலில் அமைதியாக இருக்கின்றனர். அப்போது அவர்களுக்குள் ஏதோ தீர்மானம் முடிவாகி விட்டிருந்ததாகவே பட்டது. நிமித்திகரான பத்ரர் பேசத்துவங்கிய பின்புதான் அவர்கள் குழப்பம் வெளிப்படத் துவங்கியது. அகத்தில் ஒரே மாதிரியும், புறத்தில் பலவாறும் தங்களை வெளிக்காட்டி நிற்கும் சூழ்ச்சியும் புலப்பட்டது.

பற்றியெரியத் துவங்கியிருக்கும் காமத்தின் முன் கலைந்து விட்ட அரிதாரங்களைக் கண்டபோது நான் அதிர்ச்சியடையவில்லை. மாறாக, ஆறுதலே கொண்டேன். உலக வாழ்வில் அரிதாரங்களுக்குத்தான் அதிக மரியாதை. ஒப்பனைகளைக் கொண்டாடும் அளவு நாம் ஒப்பனைகளுக்குள் இருப்பவர்களைக் கொண்டாடுவதில்லை.தருமனை ’அறநெறி தவறாதவன்’ எனும் ஒப்பனை கொண்டே பார்க்கிறோம். அதனால் அவனும் தன்னை அவ்வொப்பனைக்கு இணக்கமானவனாகக் காட்டிக்கொள்ள படாதபாடு பாடுகிறான். தன் வலிய கூற்றால் பத்ரர் அவன் ஒப்பனையை அம்பலப்படுத்தினார். பிற சகோதரர்களின் ஒப்பனைகளையும் அவ்வாறே கேள்விக்குள்ளாக்கினார். பதறிய சகோதரர்களை ஆசுவாசப்படுத்திய அவர் ஒன்றாக இருப்பதாக உணர்ந்த ஐவரையும் தனித்தனியாக்கினார்,  தனித்திருக்கும் ஒருவரில் ஐவர் இருப்பதையும் அடையாளம் காட்டினார். பத்ரர் நுண்ணுணர்வுத்தளத்திற்கு அவர்களை அழைத்துச் சென்றார். உணர்வு கடந்து நுண்ணுணர்வுக்குள் புகும் ஒருவராலேயே ஒருமையிலிருக்கும் பன்மையையும், பன்மையிலிருக்கும் ஒருமையையும் கண்டு கொள்ள இயலும் என்பதைச் சொல்லாமல் சொல்லவும் செய்தார்.

”காமத்தின் மேல் ஏற்றப்படும் எடையாலேயே அது பெருவல்லமை கொள்கிறது” எனும் பாணனின் குரலில் நீதி இல்லை; அப்பட்டமான எதார்த்தம் இருந்தது. உலக வாழ்வின் நேற்றைய நாளும், இன்றைய நாளும் நமக்கு நிறைவைத் தரவே இல்லை. நாளைய நாளைக் குறித்த எதிர்பார்ப்பின் காமமே சுவையாய் இருக்கிறது. அதனால் அதைக் குறித்தே நாம் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்; அதற்காகவே செயல்பட்டும் கொண்டிருக்கிறோம். நேற்றைய நாளை ஒருவன் விரும்புவதே இல்லை. ஏனென்றால் அவனுக்கு அது அணைந்து போன வடிவமற்ற நெருப்பு. இன்றைய நாளும் அவனுக்கு உவப்பளிப்பது இல்லை. ஏனென்றால் அது கண்முன் வடிவம் காட்டிவிட்ட நெருப்பு. நாளைய நாளோ மிகச்சிறு பொறி. அது பெறப்போகும் வடிவத்தை உத்தேசிப்பது மிக ருசியான அம்சமாக இருக்கிறது. ஆகவே, நாளைய நாளின் காமத்தில் நம்மைத் தொலைப்பதற்குத் தயாரானவர்களாகி விடுகிறோம். காலமெனும் பெண்ணிலும் எதிர்காலக் காமத்தையே நாம் விரும்பிக்கிடக்கிறோம்; பல்லாயிரம் ஆண்டுகளாக அகத்தில் அக்காமம் இன்னும் குறையாமல் தொடர்ந்து வருகிறது.

தருமன், அர்ச்சுணன், பீமன், நகுலன் மற்றும் சகாதேவனாக என் ஐம்புலன்களை உருவகித்துக் கொண்ட பொழுதில் அத்தியாயம் புதுவடிவம் பெற்றது. பாஞ்சாலியை என் வாழ்வாகக் கொண்டு விறலி சொன்னவற்றை இணைத்துப் பார்த்தேன். அர்ச்சுணனைக் கண்ணாகவும், சகதேவனைக் மூக்காகவும், பீமனைக் காதாகவும், தருமனைச் செவியாகவும், நகுலனை உடலாகவும் நான் வரைந்தேன். ஒரு பகுதி வெறுமையாய் இருக்கும்படியான ஓவியம் கிடைத்தது. அது வாழ்வெனும் பாஞ்சாலிக்கானது என்பதும் புரிந்தது.என்னதான் ஐம்புலன்கள் ஒன்றுகூடி முயன்றாலும் அவற்றால் அறிய முடியாத ஒரு பகுதி இருந்து கொண்டே இருக்கிறது. அப்பகுதியை அவற்றால் அறிந்து கொண்டுவிடவே முடியாது என்பதை ஒப்புக்கொள்வதே உயர்ஞானம். விறலியின் சிலம்பொலி அதையே உணர்த்திச் செல்வதாகவும் தோன்றியது.
   
முருகவேலன்,
படைவீடு பண்பாட்டு அறக்கட்டளை,
கோபிசெட்டிபாளையம்.