Monday, November 2, 2015

துலாக்கோலின் இரு தட்டுகள் (காண்டீபம் 48)


    காந்தத்தில் வடதுருவம் இட துருவம் என இரு துருவங்கள் உள்ளன. இரண்டில் எது சிறந்தது என்று சொல்ல முடியுமா?  இரண்டில் ஒன்று அதிக  முக்கியம் என ஆகுமா? இரண்டில் ஒன்று அதிக பலன் தரும் என முடிவு செய்வது சரியா? இரண்டும் காட்டும் எதிரெதிர் திசைகளை நல்லதென்றும் கெட்டதென்றும் பிரிக்கமுடியுமா? ஆனாலும் அவை எதிர் எதிர் துருவங்கள்.   மொத்த காந்தமும் இந்த இரு எதிர் துருவங்களுக்கு இடையில்தான் இருக்கிறது.
 
இந்திய மதங்களில் இறை தத்துவதை  இரு துருவங்கள்கொண்டது எனச் சொல்லலாம்.   ஒன்று சிந்தையின் உள்ளிருந்து பெருகும் பேரறிவு. மற்றொன்று நான் யார் என அறியும் ஒற்றை அறிவு. ஒன்று உலகம் முழுக்க பரவியிருப்பது. மற்றொன்று  உலகத்தை தன்னுள் அடக்கி இருப்பது.  ஒன்று பிரபஞ்சமெனும் பெருங்கடலினுள் உள்ளிருக்கும் அனைத்து  இயக்கங்களுமாக இருக்கிறது. மற்றொன்று தன் இடம்விட்டு அசையா அதே பெருங்கடலாக இருக்கிறது. ஒன்று தன்னை பிரபஞ்சமென   விரித்திருக்கிறது. ஒன்று தானே பிரபஞ்சமென அறிந்திருக்கிறது.   ஒன்று பிரபஞ்சத்தின் ஆத்மாவென இருக்கிறது. மற்றொன்று பிரபஞ்சத்தை தன் ஆத்மாவாக கொண்டிருக்கிறது.  ஒன்றை பிரபஞ்சத்தின் இயக்கத்தில்  அறிகிறோம்.    இன்னொன்றை பிரபஞ்சத்தின் இயங்காமையில் உணர்கிறோம். ஒன்று உமிழப்படும் ஒளியாக இருக்கிறது. மற்றொன்று ஒளியை உமிழும்  ஆதாரமாய் இருக்கிறது.  ஒன்று செயலாற்றும் சக்தி ஒன்று சும்மா இருக்கும் சிவம். ஒன்று அவதாரங்கள் எடுத்து, அதர்மம் அழித்து தர்மம் காக்கும். மற்றொன்று அனைத்தும் மாயை என முக்கண் மூடி ஊழ்கத்தில் இருக்கும்.
  
அப்படியே கிருஷ்ணனும் அரிஷ்டநேமியும் இந்த இரு துருவங்ளை பிரதிபலிக்கிறார்கள். ஒரு துருவம் அரசனாய் கொலு வீற்றிருக்கிறது இன்னொரு துருவம் தன்னை பெரும் மக்கள்கூட்டத்தில் துளியென அமர்ந்திருக்கிறது. ஒருவரை ஒருவர் நிறை செய்து,  துலாக்கோல்  ஒன்றின் இரு தட்டுகள் என இருக்கிறார்கள். 

தண்டபாணி துரைவேல்